இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டாவில் ஒரு பகுதியை முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் இது தொடர்பில்
முஸ்லிம் சமய கலாசார திணைக்களப் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறும்
ஹஜ் குழுவின் இணைத் தலைவரும் பிரதியமைச்சருமான அப்துல் காதர் பிரதமர்
டி.எம்.ஜயரத்னவை கடிதம் மூலம் வேண்டியுள்ளார்.
பிரதியமைச்சர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள்,
பாராளுமன்றத்தில் அரசுக்கு ஆதரவான 15 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும்
எதிர்க்கட்சியில் இருவரும் இருக்கிறார்கள். இந்த 17 உறுப்பினர்களுக்கும்
தலா 10 விசாக்கள் வீதம் 170 ஹஜ் விசாக்கள் வழங்கப்பட வேண்டும்.
சவூதி அரசினால் வறிய மக்களுக்கும் மெளலவிகளுக்குமென இலவசமாக வழங்கப்படும்
150 பேஸாக்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா இரண்டு
பேஸாக்கள் வீதம் வழங்கப்பட வேண்டும்.
2013ஆம் ஆண்டின் ஹஜ் கடமைக்கு முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின்
பணிப்பாளருக்கும் மேலும் ஒருவருக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும்.
ஹஜ் நிதியிலிருந்து நிர்வாகச் செலவுகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஏனைய செலவுகள் ஹஜ் குழுவின் அனுமதியுடனே கையாளப்பட வேண்டும்.
நான் ஹஜ் குழுவின் இணைத்தலைவர் என்பதால் எனது ஆலோசனை பெறப்படாது எவ்வித
தீர்மானமும் மேற்கொள்ளாமலிருப்பதற்கு முஸ்லிம் சமய கலாசார திணைக்களப்
பணிப்பாளரை அறிவுறுத்துங்கள் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடிதத்தின் பிரதிகள் சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி, ஹஜ் குழுவின்
உறுப்பினர்களான மேல் மாகாண சபை ஆளுநர் அலவி மெளலானா, டாக்டர் இக்பால்
மற்றும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க்
எம்.எச்.எம்.ஸமீல் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment