Monday, May 20

மத்திய மாகாண முஸ்லிம்களுடன் உத்தேச தேசிய ஷூரா சபை ஏற்பாட்டுக் குழுவினர்


உத்தேச  தேசிய ஷூரா சபை அமைவிற்கான இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினர் நேற்றும் இன்றும் பல்வேறு சந்திப்புக்களை மத்திய மாகாணத்தில் மேற்கொண்டுள்ளனர், அக்குரணை, மாத்தளை,கண்டி, கம்பளை பிரதேசங்களில் உலமாக்களையும், சமூக பிரமுகர்களையும் சந்தித்து தேசிய ஷூரா அமைவு தொடர்பான ஆலோசனைகளை பெற்று வருகின்றனர்.
இன்று மாலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள், பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸ் மாணவர் அமைப்பினரோடு   விரிவான ஆலோசனைக் கலந்துரையாடல்களை நடாத்துகின்றனர். தொடர்ந்து கண்டி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் சந்திப்பு ஒன்றும் இடம் பெறவுள்ளது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்கலீல் இருந்தும் விடுக்கப்படுகின்ற அழைப்புக்களை ஏற்று அவ்வப் பிரதேசங்களுக்குச்  சென்று உத்தேச தேசிய ஷூரா சபை அமைவு குறித்த கலந்துரையாடல்களையும் அடிமட்ட ஷூரா கட்டமைப்புக்கள் குறித்த விரிவான ஆலோசனைக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள உத்தேசித்துள்ள இடைக்கால ஏற்பாட்டுக் குழுவினர் தமது முதலாவது விஜயத்தை மத்திய மாகாணத்தில் மேற்கொண்டுள்ளனர். 
இந்த மகத்தான வரலாற்றுப்பணியில்  சமூகத்தின் சகல  தரப்பினரும் பங்கெடுக்க வேண்டும் எனும் உயரிய எண்ணத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய விஜயங்கள் "தேசிய ஷூரா அமைவிற்கான பூர்வாங்க ஷூரா " சந்திப்புக்கள் என அடையாளபடுத்தலாம். இந்த அமானிதமான கூட்டு முயற்சியில் சமூகத்தின் சகல தரப்பினரும் ஒன்று பட்டு ஒத்துழைப்பது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் தேசிய வாழ்வில் முக்கியத்துவம் பெறும் உத்தேச ஷூரா சபை  எனும் ஒருங்கிணைப்புப் பொறிமுறை  தேசத்தின் ஒருமைப்பாடு சமாதான சகவாழ்வு ,பொருளாதார சுபீட்சம் போன்ற இன்னோரன்ன விவகாரங்களில் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்வதோடு, சமூகத்தின் இருப்பு பாதுகாப்பு உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை திட்டமிடுகின்ற உயர் ஆலோசனை சபையாகவும் தொழிற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஒரு உயர் சபை முஸ்லிம் சமூகத்தின் பறந்து பட்ட அங்கீகாரத்துடன் மாத்திரமே தோற்றுவிக்கப் பட முடியும். 
எல்லாம் வல்ல அல்லாஹ் சரியான திசையில் எம் அனைவரையும் பயணிக்கச் செய்வானாக ! 

No comments:

Post a Comment