Sunday, May 19

அரசாங்கத்திற்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் தலைமையில் 32 பேர் கொண்ட குழு..?


 அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை ஒழிக்கும் முயற்சிகளுக்கு எதிராக, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
13வது திருத்தத்திற்கு அமைய காணி, காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளிடமே தொடர்ந்து இருப்பதையும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தவும் இந்த அணி உருவாக்கப்பட்டுள்ளது. 
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான இந்த அணியில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இடம்பெற்றுள்ளனர். 
வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களை பிடுங்கிக் கொள்ள சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 
மாகாணசபைகளின் இந்த அதிகாரங்களைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படும் நிலையில், இந்த எதிர்ப்பு அணி சிறிலங்கா அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 
நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், இந்தக் குழுவில் உள்ள ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் இழக்கும் என்றும் கருதப்படுகிறது. 
இந்தக் குழுவில் அரசதரப்பைச் சேர்ந்த அமைச்சர்கள் டியு.குணசேகர, திஸ்ஸ விதாரண, ஜனக பண்டார தென்னக்கோன், றெஜினோல்ட் குரே, மேர்வின் சில்வா, பீலிக்ஸ் பெரேரா, ராஜித சேனாரத்ன ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர, காணி, காவல்துறை அதிகாரங்கள் நீக்கபடாமலேயே வடக்கு மாகாணசபைக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

No comments:

Post a Comment