Thursday, April 4

முஸ்லீம் சிங்கள உறவுக்கு எடுத்துக்காட்டு - அக்கரைப்பற்றில் பாடசாலைகளின் பரிமாற்றம்

தயட்ட கிருள திட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ள விசேட செயற்றிட்டம் பெரிய பாடசாலைகள் சிறிய பாடசாலைகளுடன் நற்புறவைப் பேணுவதாகும். அந்த அடிப்படையில் அக்கரைப்பற்று வலயத்திலுள்ள சில பாடசாலைகள் வெளிமாவட்டத்திலுள்ள சில பாடசாலைகளுடன் நற்புறவைப் பேணும் வகையில் பாடசாலைக்குப் பாடசாலை பரிமாற்றங்களை செய்து கொள்வதாகும். இன்றைய காலகட்டத்தில் இந்த நட்புறவு சிறந்ததோர் எடுத்துக்காட்டாக அமைந்திருந்தன. அந்தவகையில்; அக்கரைப்பற்று வலயத்தின், அக்கரைப்பற்று கோட்டத்திலுள்ள காதிரிய்யா வித்தியாலயத்தின் நட்புறவுப் பாடசாலையாக உறவு பூண்டுள்ளது கேகாலை நகரில் அமைந்துள்ள மிகப் பெரியதோர் சிங்களப்பாடசாலையான சென். ஜோசப் மகளீர் மகா வித்தியாலமாகும். அந்தப்பாடசாலையின் அதிபர்  திருமதி மல்லிகா ரணசிங்க தலைமையில் பாடசாலையின் பிரதியதிபர்கள், ஆசிரியர்கள், கேகாலை வலயத்தின் கணக்காளர், அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவியர் சங்கப் பிரதிநிதிகள், ஒரு மாணவி சகிதம் இன்று(03.4.2013) காலை 11.00மணிக்கு பாடசாலைக்கு வருகை தந்தனர்.
அவர்களை காதிரிய்யா வித்தியாலத்தின் அதிபர் எம்.எச்.எம். பரீட், பிரதியதிபர் யு.எல்.ஏ. ஹக்கீம், ஆசிரியர்கள் குழு சிறந்த முறையில் வரவேற்று உபசரித்தமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தன. அத்துடன் இப்பாடசாலை மாணவர்களின் குறைநிறைகளைப் பார்வையிட்டு அதற்கான பரிசுகளையும் வழங்கி பெரிமிதம் அடைந்தனர். வறிய பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாடசாலையின் முன்னேற்றம் கருதி எதிர்காலத்தில் இப்பாடசாலைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கப்போவதாக கூறி உடனடியாக 4லட்சத்து39500 ரூபாவுக்கான காசோலையையும் வழங்கி அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் முழ்கடித்தனர். இப்பணத்தைக் கொண்டு இப்பாடசாலையின் மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களைக் கொள்வனவு செய்யுமாறும் கூறினர். கேகாலை சென் ஜோசப் பெண்கள் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சபையினர், மாணவிகள், நலன் விரும்பிகளிடமிருந்து இப்பணத்தைபெற்றுக் கொண்டதாக அதன் அதிபர் திருமதி மல்லிகா ரணசிங்கா தெரிவித்தார். 
உண்மையில் இன்றைய நாட்களில் சிங்கள முஸ்லீம் உறவு சில கீழ்த்தரமான சக்திகளால் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும் சிங்கள மக்கள் முஸ்லீம் மக்களுடன் நல்லுறவு பூண்டுள்ளனர் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும். அன்பான உபசரிப்புக்கள், ஆதரவான கலந்துரையாடல்கள், செய்யத் துடிக்கும் மனங்கள், மாணவர்களின் கல்விக்கு உதவுகின்ற மனப்பக்குவம், மதவேறு பாடுகள் பார்க்காத தன்மை, நாம் யாவரும் மனிதர்கள், கல்விக்கு உதவுவோர் என்றும் மரணிப்பதில்லை என்பதை சிறப்பாக விளங்கியிருந்தனர். 
இந்நிகழ்வுகளில் அக்கரைப்பற்று வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எஸ். அகமட் கியாஸ், அக்கரைப்பற்று கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஐ.எம். சகாப்தீன், உதவிக் கல்விப் பணிப்பாளர் அல்;ஹாஜ். எம்.ஏ. அபுதாஹிர், ஆசிரிய ஆலோசர்க எஸ்.எல். மன்சூர், காதிரிய்யா வித்தியாலத்தின் அபிவிருத்தி அமைப்பினர், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். இவர்களுக்கு வலயத்தின் சார்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அகமட் கியாஸ், பாடசாலை சமூகத்தினர் அனைவரும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment