Thursday, April 4

இலங்கையர்களுக்கு சீன மொழி கற்பிக்கும் வேலைத்திட்டம்


சீன மொழியினை இந்நாட்டு மக்களுக்குக் கற்பிப்பதற்கு சீனா ஆரம்பிக்கவிருக்கும் உத்தேச வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தலைமையிலான அரசின் ஒத்துழைப்பு பூரணமாக இருப்பதாக  பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார். 
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருக்கும் உப ஆளுநர் கௌரவ டிங் ஷஓசின் அவர்கள்உட்பட 15 பேரைக் கொண்ட தூதுக்குழுவினர் பிரதம அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லமான விசும்பாயவில் பிரதம அமைச்சர் தி.மு.ஜயரத்ன அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய வேளையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதம அமைச்சர் தி.மு.ஜயரத்ன இங்கு கருத்துத் தெரிவிக்கையில், இந்த சீனத் தூதுக்குழு இலங்கைக்கு வருகைதந்திருப்பது சம்பந்தமாக மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய சீன ஜனாதிபதி அவர்களுக்குத் தனது உளங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும், ஜெனீவாவில் இலங்கையின் சார்பில் கருத்துத் தெரிவித்தமைக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். 
பொருளாதார நடவடிக்கைகள், அடிப்படைக் கீழ்க்கட்டுமாண வசதிகளின் அபிவிருத்தி உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு சீனாவின் ஒத்துழைப்பினைக் கடந்த காலங்களைப் போன்றே தற்போதும் எதிர்பார்ப்பதாகவும் கூறிய பிரதம அமைச்சர் அவர்கள், சீன மொழியினை இந்நாட்டு மக்களுக்குக் கற்பிப்பதற்கு சீனா ஆரம்பிக்கவிருக்கும் உத்தேச வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான எமது அரசாங்கத்தின் ஒத்துழைப்பு எப்போதும் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின்போது, அமைச்சர் ரிஷத் பதியுதீன், பிரதம அமைச்சரின் செயலாளர் எஸ்.அமரசேக்கர, பிரதம அமைச்சரின் பாரியார் அனுலா யாப்பா ஜயரத்ன, பிரதம அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் சட்டத்தரணி அனுராத ஜயரத்ன, கம்பளை நகரசபைத் தலைவர் சரத் ஹெட்டியாரச்சி, அந்நகரசபையின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment