Thursday, April 4

புல்மோட்டையில் முஸ்லிம்களின் காணி கடற்படையினரால் அபகரிப்பு

திருகோணமலை மாவட்டம் குச்சவெளிப்பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட புல்மோட்டை பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்;
காணி வசதியற்ற குடும்பங்கள் புல்மோட்டைப் பகுதியிலுள்ள காடுகளை வெட்டி துப்புரவு செய்து கடந்த 1966 ஆம் ஆண்டு முதல் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இப்பகுதி மக்கள் கடந்த 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து புத்தளம், அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அகதி முகாம்களில் வாழ்ந்து வந்தனர். இதனையடுத்து 1997, 98 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் இவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டனர்.

இதனையடுத்து தமது காணிகளுக்கு உறுதி வழங்கக்கோரி பிரதேச செயலகத்துக்கும் விண்ணப்பித்தனர். காணியை உறுதிப்படுத்துவதற்கான சகல ஆவணங்கள் இருந்தும் இவர்களுக்கு காணி உறுதி வழங்குவதில் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது.

இதனால் இப்பிரதேசங்களிலுள்ள காணிகளை கடற்படையினர் அபகரித்து வருகின்றனர். அதேவேளை தென்னிலங்கை கடற்றொழிலாளர்களும் அத்துமீறி குடியேறி வருகின்றனர். சுமார் ஐம்பது ஏக்கர் நிலப்பரப்பில் பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டு கடற்படையினர் தங்கியுள்ளனர். இவ்வாறான புல்மோட்டை பிரதேச மக்களின் காணிகள் சிறுகச் சிறுக பறிபோய்க் கொண்டிருக்கின்றன.

இக்காணிகளை அபகரிப்பதற்கு கடற்படையினர் யாருடைய அனுமதியைப் பெற்றனர். கிழக்கு மாகாணத்தில் காணி தொடர்பான அமைச்சர் ஒருவர் இருந்தும்கூட அவர்களிடமும் அனுமதி பெறவில்லை.

மாகாண சபை நிர்வாகம் நடைபெறும் மாகாணங்களில் மாகாண சபையின் அங்கீகாரம் பெற்றே காணி அபகரிப்பு இடம்பெற வேண்டும். மாகாண சபை அங்கீகாரம் வழங்கும் பட்சத்தில்தான் காணிகள் சுவீகரிக்கப்படலாம் என்கின்ற சட்டம் இருந்தும் இம்முஸ்லிம்களின் காணிகளை இராணுவமோ அல்லது கடற்படையினரோ அத்துமீறி ஆக்கிரமிப்பது எச்சட்டத்தில் உள்ளது? அவ்வாறு செயற்படின் மாகாண சபை நிர்வாகம் தேவையில்லை. இக்காணி அபகரிப்பானது புல்மோட்டை முஸ்லிம்களுக்கு பெரும் இழப்பாகும்.

இக்காணிகளை கடற்படையினர் மூலம் சுவீகரிக்கப்பட்டு தென்னிலங்கை சிங்கள கடற்றொழிலாளர்களை குடியேற்றும் திட்டமாக இவ்விடயம் அமையப் பெற்றுள்ளது என இப்பகுதி முஸ்லிம்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம்களின் விமோசனத்துக்காக குரல் கொடுப்போம் என்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கூட இது விடயத்தில் வாய்மூடி மெளனியாக இருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

No comments:

Post a Comment