தம்புள்ளைப்
பள்ளியைச் சூழவுள்ள கடைகள், வீடுகள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதையடுத்து
பள்ளிவாசலின் நிலை கேள்விக்குரியதாக உள்ளதாக பிரதேச முஸ்லிம்
பிரமுகரொருவர் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டப்படி
புனித நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பள்ளியைச் சூழவுள்ள 17 க்கும்
மேற்பட்ட கடைகளும், வீடுகளும் அங்கிருந்து அகற்றப்பட்டதையடுத்து பள்ளிக்கு
என்ன நிகழுமோ என பிரதேச முஸ்லிம்கள் கவலை கொண்டுள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின்
திட்டத்தின் படி பள்ளிவாசலை ஊடறுத்து பாதையின் ஒரு பகுதியின் வேலைகள்
முன்னெடுக்கப்படவுள்ளதால் பள்ளிவாசலின் இருப்பு
கேள்விக்குறியதாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடைகள், குடியிருப்புக்கள்
அகற்றப்பட்டதையடுத்து பள்ளி மாத்திரமே எஞ்சியிருப்பதாலும் பள்ளியை ஊடறுத்து
பாதையின் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாலும் அதனை உடைப்பதற்கு முஸ்லிம்களை
நிர்ப்பந்திக்கும் அளவுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை பணிகளை
முன்னெடுத்து வருவதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டப்படுகின்றனர்.
பள்ளியின் எதிர்காலம் குறித்து பிரதேச
முஸ்லிம் முக்கியஸ்தர்கள், முஸ்லிம் அமைச்சர்கள், பிரமுகர்களுக்கு
தொலைபேசியூடாக தகவல்களை வழங்கியுள்ளனர். எனினும் அமைச்சர்களால் பள்ளி
உடைப்பினைத் தடுத்து நிறுத்த முடியுமா என்பது குறித்தும் மக்கள்
கேள்வியெழுப்புகின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த வாரம்
தம்புள்ளை விகாரைக்கு விஜயம் செய்து இனாமாலுவ தேரருடன் புனித நகர
அபிவிருத்தித் திட்டம் பற்றி பேசியுள்ளார். இதனையடுத்தே புனித நகர
அபிவிருத்திப் பணிகளை தீவிரமாக முன்னெடுக்க நகர அபிவிருத்தி அதிகார சபை
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் தம்புள்ளைப் பள்ளி உரிய
இடத்திலிருந்து அகற்றப்படமாட்டாதென நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர்
முஸ்லிம் பிரமுகர்களிடம் உறுதியளித்துள்ளனர். அமைச்சர்களுக்கோ, ஏனையோருக்கோ
இதுபற்றி தெரிவிக்க வேண்டிய அவசியமில்லையென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2012.04.20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
தம்புள்ளைப் பள்ளி ஜும்ஆத் தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது
பெரும்பான்மையினரின் தாக்குதலானது சரியாக ஒரு வருட இடைவெளிக்குப் பின்
மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.
No comments:
Post a Comment