பயங்கரவாதத்துடன்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை தொடர்புபடுத்தி பொதுபலசேனாவின் தலைவர்
தெரிவித்ததாக இன்றைய (18.04.2013) வீரகேசரிப் பத்திரிகையின் முதல்
பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியையிட்டு நாம் மிகவும் வருத்தமும்,
கவலையும் அடைவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க்
எம்.எம்.ஏ. முபாரக் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்நாடு சுதந்திரமடைவதற்கு இரண்டு
தசாப்தங்களுக்கு முன்பிருந்தே செயற்பட்டு வருகின்ற ஓர் நிறுவனமாகும்.
இந்நாட்டை சுதந்திரமடையச் செய்வதிலும், வளப்படுத்துவதிலும் ஜம்இய்யா பெரும்
பங்காற்றியுள்ளது.
2012ம் ஆண்டு எமது நாட்டிற்காக ஜனீவா வரை சென்று ஆதரவு பெற்றுக்
கொடுத்த, சுமார் 85 வருடங்களைத் தாண்டிய ஒரு நிநுவனத்தை இன்று நேற்று
முளைத்த பொது பல சேனா பயங்கரவாதமாக காட்ட முனைவது இந்நாட்டின் அரசுக்கும்,
இறைமைக்கும் எதிராக மேற்கொள்கின்ற மிக மோசமான குற்றச் சாட்டாகவே கருதப்பட
வேண்டும்.
இந்நாட்டில் அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கெதிராக வன்முறையைத் தூண்டும்
விதத்தில் செயற்பட்டு வருகின்ற பொது பலசேனாவை பொறுமையோடு எதிர்கொண்டு
மக்களை முறையாக வழிநடாத்திய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு
பயங்கரவாத சாயம் பூசுவதற்கு முற்படுவது இந்நாட்டையும் சர்வதேச சமூகத்தையும்
தவறாக வழிநடாத்துவதாகவே அமையும். மேலும், அவசியமற்ற குற்றச் சாட்டுக்களைச்
சுமத்தி முஸ்லிம் சமூகத்தை சீண்டிப்பார்க்கின்ற அபாயகரமான பரிசோதனையில்
ஈடுபட வேண்டாம் எனவும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்நாட்டு முஸ்லிம்களுக்கெதிரான எத்தகைய அநீதிகளுக்கும் இடமளிக்கப்பட
மாட்டாது என்று எமது நாட்டின் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் சர்வதேச
இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிகளிடம் உறுதியளித்து அடுத்த நாளே இவ்வாறான
பயங்கர அறிக்கைகள் பொது பலசேனாவினால் விடுக்கப்படுவது குறித்தும், பொது
பலசேனாவின் சர்வதேச தொடர்புகள் குறித்தும் நாம் சந்தேகம் கொள்கின்றோம்.
இவ்வாறான பயங்கரவாதத்தை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற
அமைப்புக்களை இந்நாட்டில் தடை செய்வதே இந்நாட்டின் அமைதிக்கும்,
சமாதானத்திற்கும், சகவாழ்விற்கும் துணை செய்யும் என்று நாம் உறுதியாக
நம்புவதோடு, இது குறித்து சர்வதேச சமூகம் அழுத்தங்களைப் பிரயோகிக்க
வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
No comments:
Post a Comment