பாராளுமன்ற கட்டிட தொகுதியில் இன்று திங்கட்கிழமை, முதலாம் திகதி நடைபெற்ற
ஹலால் தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உபகுழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
சுமார் 2 மணித்தியாலங்களாக நடைபெற்றுள்ள இந்த வாக்குவாதத்தில்
இதுகாலவரையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஹலால் சான்றிதழை
வழங்கியமை தவறு என அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, தினேஸ் குணவர்த்தனா
ஆகியோர் வாதிட்டுள்ளனர்.
எனினும் இதற்கு அமைச்சர்களான பௌஸி, ரவூப்ஹக்கீம், றிசாத்பதியுதீன்,
அதாவுல்லா ஆகியோர் தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். முஸ்லிம்
சமூகத்தை மார்க்க ரீதியாக வழிநடாத்தும் தகுதியும், பொறுப்பும் ஜம்மியத்துல்
உலமா சபைக்கு இருப்பதாகவும், அவர்கள் ஹலால் சான்றிதழ் வழங்கியதில் தப்பு
எதுவும் கிடையாதென முஸ்லிம் அமைச்சர்கள் வாதிட்டுள்ளனர்.
அத்துடன் எதிர்காலத்தில் ஹலால் தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கும், முழு
நாட்டிற்கும் தெளிவை வழங்குவதற்காக ஒரு பொறிமுறை ஏற்படுத்த வேண்டுமெனவும்
முஸ்லிம் அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முஸ்லிம் அமைச்சர்கள் மிகத்துணிவுடனும், ஆக்ரோசமாகவும் இதன்போது செயற்பட்ட
நிலையில் ஹலால் தொடர்பில் எத்தகைய இறுதி தீர்மானமும் மேற்கொள்ளவில்லை.
இதனால் அமைச்சரவை உபகுழுவுக்கு தலைமைதாங்கிய முன்னாள் பிரதமர் ரட்ணசிறி
விக்கிரமநாயக்கா, அமைச்சரவை உபகுழுவானது ஒரு வரைப்பை தயாரிக்குமெனவும், அது
முஸ்லிம் அமைச்சர்களின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்படுமெனவும்
அறிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் தமது சம்மதத்தை பெற்ற
பின்னரே ஹலால் தொடர்பில் அமைச்சரவை உபகுழு இறுத்தித் தீர்மானத்தை
மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment