வட கொரியா அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பசிபிக்
தீவான குவாமுக்கு அமெரிக்கா தனது ஏவுகணை பாதுகாப்பு முறையை நகர்த்தியுள்ளது.
ஒருவார காலத்திற்குள் ஏவுகணை பாதுகாப்பு முறை தயாராகி விடும் என பென்டகன்
அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த பகுதிக்கு அமெரிக்கா தனது யுத்தக் கப்பல்களை நிறுத்தி
வைத்துள்ளது.
அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதியான ஹாயுடன், குவான் தீவும் வட கொரியாவின் தாக்குதல்
இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அமெரிக்காவின் பிரதான நிலத்தை அணு ஆயுதம்
அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை கொண்டு தாக்கும் அளவுக்கு வட கொரியாவின்
தொழில்நுட்பம் மேம்படவில்லை என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆனால் மத்திய தூரம் செல்லும் ஏவுகணை கொண்டு பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க தளம்
மீது தாக்குதல் நடத்தும் திறன் வட கொரியாவுக்கு உள்ளது.
மறுபுறத்தில் எல்லைப் பகுதியில் இருக்கும் கூட்டு வர்த்தக வலயத்திற்குள் நுழைய
தென்கொரிய நாட்டவர்களுக்கு இரண்டாவது நாளாகவும் நேற்றைய தினத்தில் வடகொரியாவால்
அனுமதி மறுக்கப்பட்டது. கெசொங் வர்த்தக வலயம் வட கொரிய நிலப்பகுதியில் இருந்தாலும்
அங்கிருக்கும் நிறுவனங்களுக்கான முதலீடுகள் மற்றும் நிர்வாகம் தென் கொரிய
நிறுவனங்களைச் சேர்ந்ததாகும்.
நேற்றைய தினத்திலும் தென்கொரிய நாட்டவர்களுக்கு இங்கு செல்ல அனுமதி மறுத்த வட கொரியா,
இந்த வர்த்தக வலயத்தை மூடிவிடுவதாகவும் எச்சரித்துள்ளது.
கடந்த ஒரு சில வாரங்களாக வடகொரியா தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
அணு ஆயுத எச்சரிக்கை விடுக்கும் வட கொரியா தென்கொரிய, அமெரிக்காவின் குறித்த
இலக்குகளையும் தாக்குவதாக எச்சரித்து வருகிறது. இதில் தென்கொரியாவுக்கு எதிராக
யுத்த பிரகடனம் செய்த வடகொரியா, சர்வதேச ஒப்பந்தத்திற்கு அமைய மூடப்பட்ட அணு உலையை
மீண்டும் திறப்பதாகவும் குறிப்பிட்டது. மறுபுறத்தில் தென்கொரியாவுடன் போர்
பயிற்சியில் ஈடுபடும் அமெரிக்கா தனது அணு சக்தி கொண்ட யுத்த விமானங்களை தென்கொரிய
வான் பரப்பில் பறக்கவிட்டு வருகிறது.
இதனிடையே அமெரிக்காவுக்கு எதிராக, அணு குண்டுத் தாக்குதல்களை நடத்தும் சாத்தியக்கூறு
உட்பட, அனைத்து தாக்குதல்களையும் நடத்த, வடகொரியா தனது இராணுவப் படைகளுக்கு இறுதி
அனுமதி தந்திருப்பதாக கூறுகிறது.
அமெரிக்க பசிபிக் பெருங்கடல் பகுதித் தீவான குவாமில் அமைந்திருக்கும் அதன் தளத்தைச்
சுற்றி, ஏவுகணைத் தற்பாதுகாப்பை பலப்படுத்தத் தொடங்கியதை அடுத்து இந்த அறிக்கை
வந்துள்ளது. வடகொரியாவின் அச்சுறுத்தல்கள் ஒரு உண்மையான மற்றும் தெளிவான ஆபத்தைத்
தோற்றுவிப்பதாக அமெரிக்கா கூறுகிறது.
அமெரிக்காவின் ஆக்கி ரமிப்பு நகர்வுகள் சிறிய அளவிலான, இலகுவான மற்றும் பல தரப்பட்ட
அணு குண்டுத் தாக்குதல்களால் எதிர்கொள்ளப்படும் என்று வடகொரியாவின் இராணுவ தளபதிகள்
கூறினர்.
குவாம் தீவிலிருந்தும், அமெரிக்க பிரதான நிலப்பரப்பிலிருந்தும் அமெரிக்கக் குண்டு
வீச்சு விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பறப்பதை வட கொரியா கடுமையாக
ஆட்சேபித்துள்ளது. இதில் வடகொரியா ஏவுகணை மூலம் அணுகுண்டு வீசினால் அதை நடுவானிலேயே
வழிமறித்து அழிக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா தயாராக வைத்துள்ளது. வடகொரியாவின் கடைசி
எச்சரிக்கையை அடுத்து அமெரிக்கா தனது ஏவுகணைகளை முன் நகர்த்தி வருகிறது.
ஏவுகணைகளை ஏவும் டிரக் லோஞ்சர்களில் ஏவுகணைகள் பொருத்தப்பட்டு முன்
நகர்த்தப்பட்டுள்ளன. அதேபோல் எதிரிநாட்டு ஏவுகணையை முன்கூட்டியே கண்டறிந்து தகவல்
தெரிவிக்கும் ரேடார்களும் முன் நகர்த்தப்பட்டுள்ளன.
ஒருங்கிணைந்த தீ தடுப்பு அமைப்புகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால்
அங்கு உச்சகட்ட போர் பதற்றம் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment