கிழக்கு செய்தியாளர்:
பாராளுமன்றத்தில் தூக்க மாத்திரை சாப்பிட்டவர்கள் போன்று இருந்து விட்டு
பாராளுமன்றத்துக்கு வெளியே பயில்வான் லேகியம் சாப்பிட்டவர்கள் போன்று நமது
உறுப்பினர்கள் வீரம் பேசுகிறார்கள் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனையில் நடைபெற்ற உலமாக்களுடனான கருத்தரங்கில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டதாவது,
இன்றைய முஸ்லிம் மக்களுக்கெதிரான சிங்கள
இனவாதத்தின் பின்னணிக்கான காரணங்களை ஆராய்வதை விட காரணகர்த்தாக்கள் யார்
என்பதை புரிந்து அவர்களை நோக்கி எமது விரல்களை நீட்டுவதன் மூலம் மட்டுமே
இப்பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும். இதனை நாம் சரியாக செய்து
வருகிறோம். இவற்றின் பின்னணியில் அரசாங்கமே இருக்கிறது என்று நாமே நேரடியாக
முதலில் சுட்டிக்காட்டினோம். இதனை அரசில் ஒட்டியிருக்கும் முஸ்லிம்
கட்சிக்காரர்களாலும் முஸ்லிம் ஊடகங்களாலும் கூட ஏற்றுக்கொள்ள முடியாமல்
இருந்தது. இப்போதுதான் எமது கருத்தை மிக தாமதமாக அவர்கள் சரி
பார்க்கிறார்கள்.
எம்மை பொறுத்தவரை இந்த நாட்டு
முஸ்லிம்களின் ஒரே தலைமைத்துவம் ஜம்இய்யத்துல் உலமாதான். ஆதில்
மாற்றுக்கருத்து கிடையாது. அதற்காக எம்மை நாம் சுய விமர்சனம்
செய்யாமலிருக்க முடியாது. ஹலால் விடயத்தை இன்னும் இரண்டு வருடங்களுக்காவது
இழுத்தடித்து இது விடயம் பற்றி சிங்கள ஊடகங்கள் மூலமாக பல விடயங்களை
அம்மக்களுக்கு தெளிவு படுத்தியிருக்க முடியும்.
அதனை விடுத்து திடீரென உள்நாட்டில் ஹலால்
இல்லை என்ற உலமா சபையின் அறிவித்தலை எம்மால் ஜீரணிக்க முடியவில்லை. இது
விடயத்தில் அழுத்தங்கள் இருந்ததாக சொல்லப்படுகிறது. அவ்வாறு அழுத்தங்கள்
இருந்தால் முஸ்லிம்கள் மத்தியில் பகிரங்கமாக அதனை கூறி அவர்களின் ஜனநாயக
ரீதியிலான உதவியை கோரியிருக்கலாம். அல்லது அதன் நிர்வாகிகள் ராஜினாமா
செய்திருந்தால் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படும் வரை எவரும் எத்தகைய
அழுத்தத்தையும் பிரயோகித்திருக்க முடியாது.
எமது இன்றைய பிரச்சினைகள் அறபு நாடுகளுக்கு
சரிவர தெரியவில்லை என கூறப்படுகிறது. இதற்குக்காரணம் முஸ்லிம்கள்
பிரச்சினை பற்றி பாராளுமன்றத்தில் பேசப்படுவதில்லை. முன்னர் கிழக்கு மாகாண
முஸ்லிம்கள் இன்னல்களை அனுபவித்த போது அது பற்றி நாம் அறபு பத்திரிகைகளில்
எழுதினால் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு
எந்தப்பிரச்சினைகளும் இல்லை என கூறி விடுவார்கள். அவ்வேளை அதுதான்
தலைப்புச்செய்திகளாக இருக்கும். இப்போதும் இதே நிலையைத்தான் காண்கிறோம்.
அரசுக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம்
கட்சிகளையும் அமைச்சர்களையும் நோக்கி நாமும் இன்னும் சிலரும் கடுமையாக
விரல்களை நீட்டுவதனால்த்தான் இன்று முஸ்லிம் அமைச்சர்கள்
பாராளுமன்றத்துக்கு வெளியே வீரமாய் பேசுகிறார்கள். ஒருவர் அமைச்சரவை
கூட்டத்தை உடன் கூட்டச்சொல்லி குட்டு வாங்கிக்கொண்டு குணிந்து கொண்டார்.
இன்னொருவர் மற்றவர்கள் ராஜினாமா செய்தால் தானும் ராஜினாமா செய்யத் தயார் என
சிறு பிள்ளை போன்று பேசுகிறார். இன்னொருவர் எந்தக்கவலையும் இல்லாமல் வாயை
மூடிக்கொண்டு மற்ற அமைச்சர்கள் பின்னால் எப்போது இடறும் என எதிர் பார்த்து
செல்கிறார்.
ஆகவேதான் கூறுகிறோம் இத்தகைய இனவாத
செயல்களுக்கு பின்னால் இருப்பவர்கள் பற்றி முஸ்லிம் அரசியல்வாதிகள்
நேரடியாக கூறி நீங்கள்தான் இதற்கு காரணம் என சுட்டிக்காட்ட வேண்டும். அதே
போல் மக்களும் இவர்கள் அனைவரையும் நோக்கி விரல்களை நீட்ட வேண்டும்.
இல்லாவிடில் பாவம் முஸ்லிம்களின் உடமைகளையும், உயிர்களையும் அழிப்பதே
இலக்காக கொண்டு செயற்படுபவர்களின் இலக்கிலிருந்து எமது அப்பாவி சமூகத்தை
காப்பாற்ற முடியாது போய்விடும்.