இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அவர்களால்
இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பட்டியலிட்டு வெளியிடும் முயற்சியில்
இலங்கை சனத் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்
திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நம்பகமான, சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ள அழுத்தம்
கொடுக்கும் இந்தியா மற்றும் மேற்கு நாடுகளின் வாயை அடைக்கும் முயற்சியே இது
எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தியப் படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில்
கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள் பற்றிய விவரங்களை திரட்ட சனத்தொகை
கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் முன் ஆயத்தங்களில் ஈடுபட்டு
வருகிறது.
முதற்கட்டமாக, இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி இடம்பெற்ற காலப்பகுதியில்
கொல்லப்பட்டவர்கள், காயமடைந்தவர்கள், சொத்து இழப்புகள் குறித்த
கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த திட்டம் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என்றும், அடுத்தமாதம்
இந்தக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கும் என்றும் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும்
புள்ளிவிபரத் திணைக்களத்தின் தலைவர் சி.ஏ.குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 1980ம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் இந்தியத்
தலையீட்டுக்குப் பின்னர், கொல்லப்பட்டவர்களின் விபரங்களை வெளிப்படுத்துவது
இந்தக் கணக்கெடுப்பின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள்
குறித்து நம்பகமான, சுதந்திரமான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இந்திய
வலியுறுத்த ஆரம்பித்துள்ள நிலையிலேயே இலங்கை இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ள
முடிவு செய்துள்ளது.
இந்தியப் படையினரால் பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில், அதனை
வைத்து இந்தியா தன் மீது கொடுக்கும் போர்க்குற்ற விசாரணை அழுத்தங்களை
குறைக்க இலங்கை முற்படுவதாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment