பிரித்தானிய புலம்பெயர் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் கையெழுத்துப் பெறும் செயற்பாடு குறித்து SLMDI UK அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கை
அண்மைக்காலமாக இலங்கையில் பொது பல சேன, சிங்கள ஜாதிக ராவய, ராவண பல காய,
வீர விதான முதலான பெயர்களில் தோற்றம் பெற்றுள்ள பௌத்த மதத் தீவிரவாதக்
குழுக்களினால் இலங்கை முஸ்லிம்களின் இருப்பிலும், அவர்களது வணக்க
வழிபாடுகளை மேற்கொள்வதிலும், கலாச்சார விழுமியங்களைப் பேணுவதிலும், வர்த்தக
நடவடிக்கைகளைத் தொடர்வதிலும் இடம்பெற்று வருகின்ற பல்வேறு வகையான
அருவருக்கத்தக்க, ஆத்திரமூட்டக்கூடிய, அச்சுறுத்தல் செயற்பாடுகளைக்
கண்டிக்கும் வகையில் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஸ்ரீலங்கா
முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்த வகையில் தமது கையெழுத்துக்களை இட்டு
அந்நாட்டிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஊடாக ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸவுக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.
ஸ்ரீலங்கா தாயகத்தில் எமது முஸ்லிம் சமூகத்திற்கும், சமய
நிறுவனங்களுக்கும் எதிராக பொது பல சேன, சிங்கள ஜாதிக ராவய, ராவண பல பலகாய,
வீர விதான போன்ற பலதரப்பட்ட பௌத்த தீவிரவாதக் குழுவினர்களினாலும்
முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பல்வேறு அச்சுறுத்தும், அவமதிக்கும்,
ஆத்திரமூட்டும் சம்பவங்களைப் பற்றி பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும்
ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் அனைவரும் நன்கறிந்துள்ளார்கள். கவலை கொண்டுள்ளனர்.
அந்த வகையில், இம்மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 03:00 மணி
தொடக்கம் இரவு 08:00 மணிவரை St.Wilfrid’s School, Old Hosham Road,
Crawley, West Sussex, RH11 8PG எனும் இடத்தில் எமது SLMDI UK அமைப்பினால்
ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெறவுள்ள ‘இலங்கையின் அண்மைய மதப் பிணக்குகளைப்
புரிந்து கொள்ளலும், தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தலும்’ எனும் தலைப்பிலான
திறந்த உரையாடல் அமர்வுக்கு வருகை தரவுள்ள பிரித்தானியாவிலுள்ள
ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் அவர்கள் மூலமாக பிரித்தானியாவில் பல்வேறு
மாநிலங்களிலும் புலம்பெயர்ந்து வாழுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம்களான நாம் எமது
ஒட்டுமொத்தமாக கூட்டுக் கண்டனத்தையும், கோரிக்கையையும் ஸ்ரீலங்காவின்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஜனநாயக வழியில் தெரிவிப்பது
பொருத்தமானதெனத் தீர்மானித்துள்ளோம்.
அவ்வாறு உயர்ஸ்தானிகர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள
கண்டனத்தினதும், எமது கோரிக்கையினதும் பிரதிகள் பிரித்தானியாவிலுள்ள
அனைத்து ஜும்ஆப்பள்ளிவாசல்களுக்கும் எமது அமைப்பினால் அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்வரும் 19.04.2013ம் திகதி வெள்ளிக்கிழமை பிரித்தானியாவிலுள்ள
பள்ளிவாசல்களில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் அங்கு சமூகமளிக்கும்
நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு மத்தியில் விரிவாகத் தெரியப்படுத்திய
பின்னர் அவர்களின் கையொப்பங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் ஏக காலத்தில்
இடம்பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியாவிலுள்ள முஸ்லிம்கள் தமது
எதிர்ப்பினைக் காட்டுவதற்காக கடந்த 05.04.2013ம் திகதி இங்குள்ள இலங்கைத்
உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக ஆர்ப்பட்டமொன்றைச் செய்ததாகவும் எமக்குத்
தெரிய வந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் எமது அமைப்புக்கும் எவ்விதத்
தொடர்பும் இல்லை என்பதையும் நாம் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின்
உரிமைகளை நிலை நிறுத்துவதற்காக ‘ஜிஹாத்’ செய்யவும் தயாராக இருப்பதாக
சுலோகங்களை ஏந்தி குரலெழுப்பியதாகவும் எமது கவனத்திற்கு கொண்டு
வரப்பட்டுள்ளது.
எமது ஸ்ரீலங்கா முஸ்லிம்கள் எதிர்நோக்கும் விடயங்கள் தொடர்பாக எமது
இஸ்லாமிய மார்க்கமும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் எமக்கு வழிகாட்டி
வருகின்றவாறு நாம் பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்குமே இன்னமும்
முக்கியத்துவம் அளித்து எமது மார்க்கத் தலைமைத்துவத்திற்கும்
கட்டுப்பட்டவர்களாகவே இந்நாட்டில் செயற்பட்டு வருகின்றோம். தீவிரவாதச்
செயற்பாடுகளானது எந்த வடிவில் யார் மூலம் வெளியானாலும் அதனை வன்மையாக
எதிர்க்கும் எமது அமைப்புக்கும், பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து
வாழுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம்களுக்கும் பதிலுக்கு தீவிரவாதச்
செயற்பாடுகளைக் கையிலெடுப்பதில் எப்போதும் உடன்பாடு கிடையாது.
இஸ்லாத்தில் ‘ஜிஹாத்’ என்பது மிகவும் புனிதமான, நேரடியாகச் சுவனத்திற்குச்
செல்லக்கூடிய ஒரு வழியாகும். அதனை பொறுப்பற்ற வகையில் உலமாக்களின்
வழிகாட்டலின்றி முன்னெடுப்பதை நாம் வன்மையாக ஆட்சேபிக்கின்றோம். இங்குள்ள
புலம்பெயர் ஸ்ரீலங்கா முஸ்லிம்களை எமது SLMDI UK அமைப்பானது ஒருபோதும்
பிழையாக வழிநடாத்திச் செல்ல முற்படாது என்பதையும் இத்தருணத்தில் உறுதியாகத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
எனவே எதிர்வரும் 19.04.2013ம் திகதி பிரித்தானியாவிலுள்ள அனைத்து ஸ்ரீலங்கா
புலம்பெயர் முஸ்லிம் சகோதரர்களும் தத்தமது பகுதிகளிலுள்ள ஜும்ஆப்
பள்ளிவாசல்களுக்குச் சென்று ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றிய பின்னர் தூய
எண்ணத்தோடு எமது நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்குரிய கௌரவத்தை அந்நாட்டின்
ஆட்சியாளர்கள் பக்கச்சர்பற்ற முறையில் சம நீதியாக வழங்கும் வல்லமையை
அளிக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களாக தங்களின் பெறுமதியான
கையெழுத்துக்களை உரிய பத்திரங்களில் இட்டு உறுதிப்படுத்துமாறு கேட்டுக்
கொள்கின்றேன் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment