Monday, April 15

BBS “தேரர்கள்” அமெரிக்காவில் குடியுரிமை பெற முயற்சி? தம்பர அமில தேரர்

 










இரண்டு போயா தினங்களுக்குள் பொது பல சேனா எனும் இனவாத இயக்கம் அழிந்து விடும் எனத் தான் கூறிய கருத்தில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாகக் கூறிய தம்பர அமில தேரர், தற்போது அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் பொது பல சேனா உறுப்பினர்களுக்கு அங்கே குடியுரிமைகள் பெற்றுக்கொடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தம்மால் உறுதி செய்ய முடியாத தகவல் ஒன்றும் இருப்பதாகக் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை முஸ்லிம் குரல் சேவையின் மக்கள் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
கொழும்பில் பொது பல சேனாவுக்கு எதிராக இடம்பெற்ற அமைதிப் பேரணி ஒரு நல்ல ஆரம்பம் என்றும் அது கட்டாயம் நாடளாவிய ரீதியில் இடம்பெற வேண்டிய விடயம் என்றும் சுட்டிக்காட்டிய அவர், இப் பேரணி இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டதன் மூலம் அரசாங்கம் தமக்கும் பொது பல சேனாவுக்கும் இருக்கும் நெருங்கிய உறவை நிரூபித்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொது பல சேனா எனும் அமைப்பை ஊட்டி வளர்ப்பதில் அரசாங்கத்திற்கு இருக்கும் ஆர்வத்திற்கு எதிராக நாட்டு மக்கள் ஜனநாயக ரீதியாக குரல் எழுப்புவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய அவர், உதயன் பத்திரிகையைத் தாக்கிய குழு போன்று, நாட்டில் வெவ்வேறு குற்றங்களைப் புரியும் அரச குழுக்கள் போன்று, பொது பல சேனா என்பது அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கும் ஒரு குழு என்றும் தாம் குறிப்பிட்டதற்கிணங்க தற்போது ஒரு போயாவுக்குள்ளேயே அந்த அமைப்பிற்கெதிரான மக்கள் எழுச்சி இடம்பெற்றுள்ளது, இதுவே யதார்த்தம் என்றும் மேலும் தெரிவித்தார்.
தேரரின் முழுமையான உரை விரைவில் பிரசுரிக்கப்படும்.

No comments:

Post a Comment