பேச வேண்டிய இடமான பாராளுமன்றத்தில் பேசாமல் பதுங்கியிருந்து விட்டு
தற்போது பேச வேண்டிய இடத்தில் பேசியதாக சொல்லி அமைச்சர் அதாவுள்ளா
சம்மாந்துறை மக்களை ஏமாற்ற முனைந்துள்ளார்-முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர்
முபாறக் அப்துல் மஜீத.
பேச வேண்டிய இடமான பாராளுமன்றத்தில் பேசாமல் பதுங்கியிருந்து விட்டு
தற்போது பேச வேண்டிய இடத்தில் பேசியதாக சொல்லி அமைச்சர் அதாவுள்ளா
சம்மாந்துறை மக்களை ஏமாற்ற முனைந்துள்ளார் என முஸ்லிம் மக்கள்
கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். கல்முனையில் நடைபெற்ற
கட்சி அங்கத்தவர்களுக்கிடையிலான சந்திப்பில் உரையாற்றும் போதே இவ்வாறு அவர்
குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறியதாவது,
அமைச்சர் அதாவுள்ளா மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற
உறுப்பினர். மக்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பேசுவதற்காகவே மக்கள் தமது
பிரதிநிதிகளை அங்கு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் முஸ்லிம் மக்கள் எதிர்
நோக்கிய பிரச்சினைகள் பற்றி ஒரு சொல்லேனும் பேசாத அதாவுள்ளா ஹக்கீமை போன்று
கிழக்குக்கு வந்ததும் பயில்வான் வீரம் பேசியுள்ளார். தான் பேச வேண்டிய
இடத்தில் பேசியதாக கூறும் இவர் அவ்வாறு அவர் பேசி எதனை சாதித்தார் என
ஒன்றையாவது கூற முடியுமா? அவ்வாறாயின் இவரது பேச்சு எடுபடாத இடத்தில்தான்
இவர் பேசியுள்ளார் என தெரிகிறது. பேச்சு எடுபடாத இடத்தில் பேசுவது யார்
என்பது உலகுக்கு தெரியும். இவர்கள் சில இடங்களில் பேசியதாக வந்த செய்திகள்
இவர்களாகவே ஊடகங்களுக்கு சொன்னவைதானே தவிர ஊடகவியலாளர்களால்
திரட்டித்தந்தவை அல்ல. அமைச்சரவை கூட்டங்களுக்கு ஊடகவியலாளர்கள்
அனுமதிக்கப்படுவதில்லை என்பது பொது மக்களுக்கு தெரியாது என்பதால் பொய்களை
அவிழ்த்து விடுகிறார்கள்.
பொதுபலசேனாவின் உள்ளார்ந்தமும் அவர்களின் கருத்துக்களும் எமக்கத்தெரியாது
என்றும் அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்றும் தமக்குத்தெரியாது என
முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி போல் இவரும் கூறியுள்ளதன் மூலம்
எந்தளவுக்கு இவர்களின் அறிவு எலும்புத்துண்டுக்கு மயங்கிப்போயுள்ளது என்பது
தெரிகிறது. அனைத்து சேனாக்களின் பின்னாலும் யார் சேனாதிபதி என கொழும்பில்
வாழும் மனோ கணேசன் பகிரங்கமாக கூறும் போது கிழக்கை சேர்ந்த அதாவுள்ளாவுக்கு
தெரியாது எனக்கூறுவது கேவலமானதாகும்.
அரசு, பொதுபல சேனா என்ற அம்பு மூலம் ஐந்து விடயங்களை
சாதித்துக்கொண்டுள்ளது. ஹலாலை கப்றுக்குழியுள் வைத்து விட்டது. முஸ்லிம்
பெண்கள் கறுப்பு அபாயா அணிவதில் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. ஜெய்லானி
மற்றும் தென்னிலங்கை பள்ளிவாயல்களுக்கான பாதுகாப்பு இல்லாமலாக்கப்பட்டு
விட்டது. முஸ்லிம்களின் வர்த்தகம் சிதைக்கப்பட்டு விட்டது. பொத்துவிலில்
சிலை வைக்கப்பட்டு விட்டது. இவை அத்தனையும் ஒரு சில மாதங்களுக்குள்
நிறைவேற்றப்பட்டு விட்டன. இவை முடிந்ததும் பெருநாளை கொண்டாட பொது பல சேனாவை
அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து விட்டு கிழக்கு மக்கள் ஏமாந்தவர்கள் என
நினைத்து அவர்களை சமாளிக்கும் படி அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளது.
நாம் அமைச்சர் அதாவள்ளாவிடம் கேட்கிறோம். இனவாதத்தின் இந்த ஐந்து
வெற்றிகளில் ஒன்றையாவது தடுத்து நிறுத்த உங்களால் முடிந்ததா? இவை எதையும்
செய்யாமல் அரசில் உள்ளவர் என்ற வகையில் இந்த வெற்றிகளுக்கு துணை போய்விட்டு
வெறும் கட்டிடங்களை கொண்டு வருவது என்பது ஒரு மானமுள்ள பெண்ணை நடுவீதியில்
நிர்வாணமாக நிறுத்திவிட்டு அவளுக்கு புரியாணியை சாப்பிட கொடுப்பது
போன்றதாகும்.
இன்று இலங்கை முஸ்லிம் சமூகம் தன்மானம் இழந்து நிர்வாணமாக நிற்கிறது.
தென்னிலங்கை முஸ்லிம்கள் தலைகுணிந்து நடைப்பிணம்போல் வாழ்கிறார்கள்.
அவர்களால் இந்த அநியாயங்களுக்கெதிராக பேச முடியவில்லை. அவர்களின் மக்கள்
பிரதிநிதிகளும் நக்குத்திண்ணிகளாகி விட்ட சூழ் நிலையில் கிழக்கை சேர்ந்த
பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுள்ளாவைப்போன்றவர்களும் சமூகத்தை
காட்டிக்கொடுத்த தற்காக இறைவனிடம் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். தாம்
நம்பியவர்களால் அநியாயம் செய்யப்பட்ட இந்த முஸ்லிம்களின் சாபம் இவர்களை
சும்மா விடாது என்பதை மட்டும்தான் எம்மால் கூற முடியும்.
No comments:
Post a Comment