(Tn) கிறீஸ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரான தெஸலொனிக்கியில் உள்ள
பள்ளிவாசலில் 90 ஆண்டுகளுக்கு பின்னர் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியுள்ளனர்.
கொமொடி நகரில் இருந்து வந்த 50 மத்ரசா மாணவர்கள் 111 ஆண்டு பழைமையான
தெஸலொனிக்கி பள்ளிவாசலில் கடந்த சனிக்கிழமை தொழுகை நடத்தியுள்ளனர். நகர
மேயர் யியனிஸ் புடாரிஸின் ஏற்பாட்டுக்கு அமையவே பல தசாப்தங்களுக்கு பின்னர்
இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல் மீண்டும்
திறக்கப்பட்டது சாதகமான முடிவு என கிறீஸ்க்கான துருக்கி தூதுவர் கெரின்
உராஸ் குறிப்பிட்டுள்ளார். “ஏனைய விடயங்களையும் நாம் எதிர்பார்க்கிறோம்.
குறிப்பாக ஏதன்ஸ் நகரும் முஸ்லிம் தொழக்கூடிய இடமாக மாறும் என நம்புகிறேன்” என குறிப்பிட்டார்.
தெஸலொனிக்கி பள்ளிவாசல் 1902 ஆம் ஆண்டு இத்தாலி கட்டடக் கலைஞர் ஒருவரால்
கட்டப்பட்டது. ஆனால் 1923 ஆம் ஆண்டு இந்த பள்ளிவாசல் மூடப்பட்டது. பின்னர்
1925 தொடக்கம் 1963 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இந்த பள்ளிவாசல்
நூதனசாலையாக பயன்படுத்தப்பட்டது. தற்போது இது தெஸலொனிக்கி மாநகர கண்காட்சி
மண்டபமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
10.7 மில்லியன் சனத்தொகை கொண்ட கிறீஸில் 1.3 வீத முஸ்லிம்கள் வாழ்ந்து
வருகின்றனர். உலகில் பள்ளிவாசல் இல்லாத ஒரே தலைநகராக கிறீஸ் தலைநகர்
ஏதென்ஸ் உள்ளது. 1800களின் ஆரம்பப் பகுதியில் உஸ்மானிய அரசின் முடிவுக்கு
பின் ஏதன்ஸில் பள்ளிவாசல்கள் செயற்படவில்லை. சுமார் 200,000 முஸ்லிம்கள்
ஏதென்ஸில் வசித்த போதும் அவர்கள் நிலவறைகள் மற்றும் தனியார் அறைகளிலேயே
தொழுகை நடத்தி வருகின்றனர். இவ்வாறு ஏதென்ஸில் ஜன்னல்கள், காற்றோட்டம்
இல்லாத சுமார் 130 தொழுகை நடத்தும் நிலவறைகள் இருப்பதாக
கணிக்கப்பட்டுள்ளது.
எனினும் பழைமைவாத கிறிஸ்தவ திருச்சபைகள், ஏதென்ஸில் மினாரத்தை காண இன்னும்
தயார் இல்லை என கூறி வருகின்றன. பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும்
கிறீஸில் முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாடுகளும் எப்போதும் இல்லாத அளவுக்கு
அதிகரித்துள்ளது. கடந்த 2011 ஏதென்ஸில் பெருநாள் தொழுகையை நடத்த முற்பட்ட
முஸ்லிம்களுக்கு உள்ளூர் மக்கள் இடையூறு விலைவித்தது குறிப்பிடத்தக்கது.
தொழ வந்த முஸ்லிம்களை முட்டையால் தாக்கிய உள்ளூர் குடியிருப்பாளர்கள்
வானொலிகளின் சத்தத்தை அதிகரித்து இடையூறு விளைவித்தனர்.
எனினும் ஏதென்ஸ் முஸ்லிம்களுக்கு பள்ளிவாசலை அமைத்துக் கொடுக்க கிறீஸ் அரசு தற்போது முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment