Monday, March 11

'முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க ஜம்இய்யதுல் உலமா தவறிவிட்டது' ஹரீஸ் M.P


முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தவறிவிட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் குற்றஞ்சாட்டினார்.

ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையில் முன்னுக்கு பின்னான முடிவுகளை அகில இலங்கை ஜம்இய்யதுல் மேற்கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதவாது வெளிநாட்டு ஏற்றுமதி பொருட்களுக்கு மாத்திரம் ஹலால் என்ற தீர்மானத்தின் ஊடாக வர்த்தகர்களிற்கே இது நன்மையளிக்கின்றதே தவிர, இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எந்தவித நன்மையுமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


இந்த அறிவிப்பு தொடர்பில் முஸ்லிம்களின் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் எந்தவித கலந்தாலோசனையினையும் மேற்கொள்ளாதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

" கடந்த மார்ச் 6ஆம் திகதி அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமா நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஹலால் சர்ச்சை தொடர்பில் தெளிவுபடுத்தியது. அமைச்சரைவை உப குழுவில் நான்கு முஸ்லிம் அமைச்சர்கள் இருப்பதானால் அந்த குழுவின் அறிக்கை வெளியாகும் வரை எந்தவித தீர்மானங்களையும் மேற்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டது.

அவ்வாறான நிலையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனையின்றியே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் ஊடாக முஸ்லிம் சமூகத்திற்கு துரோகமிழைத்துள்ளனர். அகில இலங்கை ஐம்இய்யதுல் உலமாவின் இன்றைய அறிவிப்பினால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன்.

ஏனெனில் இன்றைய தீர்மானத்தினால் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் நாட்டில் ஹலால் உணவுகளை உண்ண முடியாத நிலை தோன்றும். ஹலால் சான்றிதழ் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு அழுத்தங்கள் இருந்தால் அது தொடர்பாக கலந்துரையாடிருக்க முடியும்.

எனினும் அதனை மேற்கொள்ளாமல் இந்த அறிவிப்பினை மேற்கொண்டுள்ளனர். ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை வாபஸ் பெறுவது என தீர்மானித்திருந்தால் ஏற்றுக்கொண்டிருக்க முடியும். எனினும் இன்றைய தீர்மானித்தனால் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வர்த்தக சமூகத்திற்கு துணை போயுள்ளது. இது பாரிய தவறாகும். இந்த தீர்மானத்தினால் நான் மிக்க வேதனையடைகின்றேன்" என்றார்.

No comments:

Post a Comment