Monday, March 11

கொம்பனித்தெரு குடியிருப்பாளர்களுக்கு மாதாந்த வாடகை!


கொம்பனித்தெருவில் இருந்து தற்காலிகமாக அகற்றப்படும் வீடுகளுக்கு தற்காலிக இடவசதி வழங்குவதற்காக மாதத்துக்கு 15,000 ரூபா முதல் 52,000 ரூபா வரை அலவன்ஸ் வழங்க தேசிய வீடமைப்பு, அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளதாக திட்டப் பணிப்பாளர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
இரு வருடங்களுக்கான மாதாந்த வாடகை ஒரே முறையில் வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார். 300 சதுர அடிக்குக் குறைவான இடப் பரப்பு உள்ளவர்களுக்கு 15000 ரூபாவாக வாடகை கொடுக்கப்படும். 3000 – 4000 சதுர அடி இடப்பரப்பு உள்ளவர்களுக்கு 52,000 ரூபா வாடகை வழங்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.

மலேவீதி, ஜாவா மாவத்தை, நீதியரசர் அக்பர் மாவத்தை, ஜாமிஆ மாவத்தை ஆகிய பகுதிகளில் 08 ஏக்கர் காணியிலுள்ள 426 பேருக்கும் 99 கடைச் சொந்தக்காரர் களுக்கும் இவ்வாறு மாதாந்த வாடகைக்கான பணம் பெற்றுக்கொடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்தார்.
12, 16, 18 மாடிகள் என்ற அடிப்படையில் மூன்று தொகுதி வீடுகள் அமைக்கப்படும். முதலாம் இரண்டாம் மாடிகள் வியாபார தலங்களுக்கு ஒதுக்கப்படும். ஏனைய மாடிகளில் வீடுகள் அமைக்கப்படும்.400, 600, 800, 1000, 1200 சதுர அடிகள் என்ற அடிப்படையில் வீடுகள் அமைக்கப்படும்.தற்போதுள்ள இடப்பரப்புக்கு இணங்க குடியிருப்பாளர்கள் இரண்டு, மூன்று வீடுகளுக்காக விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரி தெரிவித்தார்.
3000 சதுர இடப்பரப்புடனான வீடு உள்ளவர்களுக்கு 1200 சதுர அடி கொண்ட இரு வீடுகளும், 600 சதுர அடி கொண்ட வர்களுக்கு மூன்று வீடுகளும் பெற்றுக் கொடுக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
400 சதுர அடி வீட்டைக் கட்டி முடிக்க 60 இலட்சம் ரூபா செலவாகும். சமையலறை, குளியலறை, வீட்டு முன்றல் போன்றவை இதில் அடங்கும்.தற்போது இங்குள்ள 217 வீடுகள் 400 சதுர அடிக்குக் குறைவானதாகும். 80 வீடுகள் 200 சதுர அடிக்கும் குறைவானதாகும். இவர்களுக்கு 400 சதுர அடி வீடு உரிமையாகக் கிடைக்குமென்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment