நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமைகள் தொடர்பில்
அஸாத் சாலி குரல்கொடுத்து வருகின்றமையால்தான் அவரை கைது செய்ய முயற்சிகள்
மேற்கொள்ளப்படுவதாக வும் அரசாங்கமே இந்த நடவடிக்கைகளின் பின்னால்
இருப்பதனால் அவர்களே பொறுப்பு கூற வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள்
தெரிவித்தனர்.
கொழும்பு 7 இல் உள்ள அஸாத் சாலியின் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இப்பத்திரிகையாளர் மாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேஷன் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
விக்கிரமபாகு கருணாரத்ன
அப்பத்திரிகையாளர் மாநாட்டில் நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன உரையாற்றும் போது, தெவட்டகஹ பள்ளிவாசலில் ஹலால் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றின் போது முன்னாள் கொழும்பு மாநகரசபை பிரதி மேயர் அஸாத் சாலி வாக்குவாதப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டே கைது செய்ய முயற்சிக்கப்படுகிறது.
பள்ளிவாசல் என்பது மத விடயங்கள் நிர்வகிக்கப்படும் ஒரு இடமாகும். அங்கு முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள் கதைக்கப்படும் போது வாதப்பிரதி வாதங்கள ஏற்படுவது சாதாரண விடயமே. இதற்காக கைது செய்வது சிறு பிள்ளைத்தனமானது. அதுமட்டுமன்றி இவ்வாறு பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவரை கைதுசெய்வதானது கண்டிக்கத்தக்கதாகும் என்றார்.
சுமந்திரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உரையாற்றுகையில், நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக ஏற்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு எதிராக அஸாத் சாலி தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார். முஸ்லிம், தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றமையினாலேயே அவரை கைது செய்ய முயற்சிக்கின்றனர்.
அப்பாவி மக்கள் வீதியில் செல்ல முடியாமல் தடை செய்பவர்களையும் மக்களை தொழில்செய்ய விடாமல் தடை ஏற்படுத்தி சட்டத்தை உடைக்கும் காடையர்களையும் கைது செய்யாமல் அவ்வாறு சட்டவிரோதமான விடயங்கள் செய்பவர்கள் தொடர்பில் கேள்வி கேற்பவர்களை கைது செய்வதை நாம் கண்டிக்கிறோம் என்றார்.
மனோகணேஷன்
அஸாத் சாலி தொடர்பில் பொலிஸில் முறையிட்டவர்கள் இரண்டு தடவைகள் தாம் இந்த முறைப்பாட்டை வாபஸ்பெறுவதாக தெரிவித்த போது பொலிஸார் அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அண்மையில் அமைச்சர் ஒருவர் அரச அதிகாரி ஒருவரை மரத்தில் கட்டிவைத்த சம்பவம் நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயம். ஆனால் பின்னர் அந்த அரச அதிகாரியே நான்தான் தன்னை மரத்தில் கட்டிக்கொண்டேன் என சொன்னார். அது மட்டுமன்றி அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் அரச அதிகாரியொருவரை தாக்கியிருந்தார்.
இந்த விடயங்கள் தொடர்பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல்
பள்ளிவாசலில் இடம்பெற்ற வாக்குவாதத்தை காரணம் காட்டி அஸாத் சாலியை கைது
செய்ய முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாம் தீவிரமாக கண்டிக்கிறோம். அரசே இதனை முழுமையாக பொறுப்பேற்க்க வேண்டும் எனவும் அவர்தெரிவித்தார்.
No comments:
Post a Comment