Thursday, March 28

முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் நிலைப்பாடு மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை அக்கட்சி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
புல்மோட்டை, ஜின்னாபுரம் எனுமிடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போது அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக போட்டியிட்ட சின்ன மரைக்கார் பளீல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக நியமிக்க தயார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பகிரங்கமாக நான் அறிவித்திருந்தேன்.
தேர்தல் முடிவுகளின்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 4 ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 22 ஆசனங்களுடன் நாம் பெரும்பான்மையாக இருந்தோம்.
ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் கட்சியில் உள்ள ஒரு முஸ்லிமை முதலமைச்சராக வருவதற்கு ஆதரவளித்தது. திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை முஸ்லிம் கிராமத்தில் முஸ்லிம் மக்களின் காணிகள் இன்று பறிபோகின்ற ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது.
எமது கைகளில் முஸ்லிம் முதலமைச்சர் பதவி; இருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தமிழ் பேசும் சமூகம் என்றுதான் நடந்து வந்துள்ளோம்.
பண்டா – செல்வா மற்றும் டட்லி – செல்வா ஒப்பந்தம் ஆகியன வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வருகின்ற பிரதேசம் என்ற அடிப்படையில் சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றே செய்து கொள்ளப்பட்டன.
இன்று இனப்பிரச்சனை சர்வதேச மயப்படுத்துப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறும் பட்சத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த தருணத்தில் முஸ்லிம் மக்கள், தமிழ் மக்கள் என்ற வேறுபாடின்றி தமிழ் பேசும் மக்கள் என்ற முறையில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் கைகளில் தான் இது தங்கியுள்ளது” எனறார்.

No comments:

Post a Comment