தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு
போட்டியிடும் சாத்தியம் அறவே இல்லாத போதிலும், முஸ்லிம்களின் சமூக நலன்
சார்ந்த விடயங்களில் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தின் (Common Minimal
Programme) கீழ் அவை ஒன்றுபட்டு இயங்குவதற்கான சந்தர்ப்பங்களும்,
வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், அதற்கான அழைப்பை தாம் பகிரங்கமாக
விடுப்பதோடு, ஏற்கனவே அதுபற்றி முஸ்லிம் அமைச்சர்கள் இருவருடன்
கலந்தாலோசித்துள்ளதாகவும் கூறினார்.
இடம்பெயர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்களின்
மீள்குடியேற்ற பிரச்சினையும் அவ்வாறு அணுகுவது பெரிதும் பயனளிக்கும் என
தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர்
ஹக்கீமுக்கும், யாழ்ப்பாண முஸ்லிம் முக்கியஸ்தர்கள் சிலருக்கும் இடையிலான
கலந்துரையாடலொன்று திங்கட்கிழமை (26) முற்பகல் அமைச்சரின் இல்லத்தில்
நடைபெற்ற பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார்.
யாழ். முஸ்லிம் பிரமுகர் குழுவில் டாக்டர்
ஏ.ஏ. எம். உவைஸ் (உதவி சட்ட மருத்துவ அதிகாரி, குருநாகல் போதனா
வைத்தியசாலை) தலைமையில் பொறியியலாளர் ஜாஹித் ஹஸன், கல்வியியலாளர் ஏ.பி.எம்.
ஹூஸைன், கவிஞர் யாழ். அஸீம், தொழிலதிபர் எம்.ஜி.எம். ஜெமீல், வர்த்தகர்
பாலிக் மஹ்ரூப் ஆகியோர் இடம்பெற்றனர்.
யுத்தம் முடிந்த சூழ்நிலையில் அங்கு
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதார
பிரச்சினைகள், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு போன்ற இன்னோரன்ன விடயங்களை
அமைச்சரை சந்தித்த யாழ்ப்பாண முஸ்லிம் முக்கியஸ்தர்கள் விளக்கிக் கூறினர்.
அவர்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறியவையாவன,
“பொதுவாக வடக்கிலிருந்து குறிப்பாக
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அங்கு சென்று
மீள்குடியேறுவதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாம் இயன்றவரை அடையாளம்
கண்டு, அறிந்து வைத்துள்ளோம். அந்த விடயங்களில் அரசியல் ரீதியாக
அனைத்துவிதமான ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம்.
யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின்
மீள்குடியேற்றத்தில் மிகவும் மந்தகெதியே காணப்படுகிறது. போதிய
உட்கட்டமைப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாத நிலையிலும், வாழ்வாதார வசதிகள்
செய்து கொடுக்கப்படாத நிலையிலும் குடும்பங்களாகச் சென்று மீள்குடியேறும்
முஸ்லிம்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது.
இவற்றையெல்லாம் உரிய முறையில் அணுகி தீர்வு
காண்பதற்கு வாய்ப்பாக இணைந்து செயலாற்றக் கூடிய சிந்தனையாளர் வட்டம்
(வுhiமெ வுயமெ) ஒன்றின் இன்றியமையாத் தேவை நன்கு உணரப்பட்டுள்ளது.
அத்தகையோர் அரசியல் சார்பானவர்களாகவோ, அரசியல் கலப்பற்றவர்களாகவோ
இருக்கலாம். அவர்கள் அரசியல் தலைமைத்துவத்தோடு சமூக நலன் சார்ந்த
விடயங்களில் நெருங்கியும், இணங்கியும் செயல்படலாம். அதற்காக அவர்கள்
அரசியல் வாதிகளின் ஊது குழல்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
கவனயீர்ப்பை மேற்கொண்டு, பார்வையை பிரதானமான பிரச்சினைகளின் மீது குவியப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
இந்திய வீடமைப்புத் திட்டத்தின் வடபுலத்து
முஸ்லிம்களுக்கு உரிய இடம் வழங்கப்படாததையிட்டு அந் நாட்டு உயர்
ஸ்தானிகருடன் கதைத்துள்ளேன். அது தொடர்பான மேலும் நடவடிக்கைகளை
முன்னெடுக்கும் பொறுப்பை எமது கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற
உறுப்பினருமான எம்.ரி. ஹஸனலியிடம் ஒப்படைத்துள்ளேன். இவ்வாறான விடயங்கள்
நாசூக்காகவும் மிகவும் லாவகமாகவும் கையாளப்படுவதாகத் தெரிகிறது. பொதுவாக
இவ்வாறான விடயங்களைப் பொறுத்தவரை நாம் ஒரு மோதல் போக்கை உருவாக்கிக்கொள்ள
விரும்பவில்லை. ஆயினும், எங்களது பலத்தை சரியான முறையில் பிரயோகிப்பதில்
நாம் ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும்,
எங்களுக்கும் இடையில் அவ்வப்போது சில மனக் கசப்புகள் ஏற்பட்ட போதிலும்,
நாங்கள் நட்புறவோடு செயல்பட்டு வருகிறோம்.
ஏற்கனவே நான் பொம்மைவெளி, யாழ். உஸ்மானியா
கல்லூரி அமைந்துள்ள இடம் என்பவற்றையும் ஏனைய சில இடங்களையும் சென்று
பார்வையிட்டுள்ளேன். மீண்டும் யாழ்ப்பாண குடா நாட்டுக்கான விஜயமொன்றை
விரைவில் மேற்கொள்ளவுள்ளேன். அங்கு வசிக்கும் முஸ்லிம் பொது மக்களையும்,
முஸ்லிம் இயக்கங்களின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து, விரிவாக
கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை
பெற்றுக்கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளேன் என்றார்.
அமைச்சருடனான சந்திப்புகளை தொடர்ந்தும் ஏற்படுத்திக்கொள்வதென கலந்துரையாடலின் இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.
No comments:
Post a Comment