கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றைய தினம் மீண்டும் தன்னைக்
கைது செய்ய முயன்றதாக தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலி
தெரிவித்துள்ளார்.
கைது செய்யும் நோக்கில் பொலிசார் தனது வீட்டுக்கு வந்ததாகவும் எனினும்
தனது சட்டத்தரணிகள் மூலம் ஏலவே நீதிமன்றில் பிணை மனுவைப் பெற்றுள்ளதாகவும்
வியாழக்கிழமை தான் நீதிமன்றில் ஆஜராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் வாக்குமூலமளிக்க வருமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர்
அழைப்பாணை அனுப்பிய போதிலும் அசாத் சாலி அங்கு சமூகமளித்திருக்கவில்லை.
அத்துடன் அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாட்டைப் பதிவு செய்த ஜனாதிபதியின்
முஸ்லிம் மத விவகாரங்களுக்கான ஆலோசகர் ஹசன் மௌலானா தனது முறைப்பாட்டை வாபஸ்
பெற்றுவிட்டபோதிலும் பொலிசார் அசாத் சாலியை கைது செய்ய முயற்சிக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத நடவடிக்கைகள்
குறித்து ஐ.நா. செயலாளர் பான் கி மூனுக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பிலேயே
பொலிசார் தன்னைக் கைது செய்ய முற்படுவதாக தான் சந்தேகிப்பதாகவும் அசாத்
சாலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment