Wednesday, March 6

மத்தால விமான நிலையத்தில் தரையிறங்கப் போகும் சிறப்பு அமெரிக்க விமானம்


அம்பாந்தோட்டை மத்தால விமான நிலையத் திறப்பு விழாவன்று அமெரிக்காவில் இருந்து புறப்படும் சிறப்பு வாடகை விமானம் ஒன்றை அங்கு தரையிறக்குவதற்கு இலங்கை அரசாங்கம் பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 
சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள மத்தால அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழா வரும் 18ம் நாள் நடைபெறவுள்ளது. 
அன்று சிறப்பு விமானம் ஒன்றில் வந்து தரையிறங்கவுள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, மத்தால விமான நிலையத்தை திறந்து வைக்கவுள்ளார். 
அந்த நேரத்தில், அமெரிக்காவில் இருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானம் ஒன்றை அங்கு தரையிறக்குவதற்கு, வொசிங்டனில் உள்ள இலங்கை தூதுவரும், இலங்கை அதிபரின் உறவினருமான ஜாலிய விக்கிரமசூரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். 
எமிரேட்ஸ் எயர்லைன்ஸ் வாடகை விமானம், லொஸ் ஏஞ்சல்சில் இருந்து புறப்பட்டு ஹொஸ்டன், நியுயோர்க், வொசிங்டன், டுபாய் வழியாக, மத்தால அனைத்துலக விமான நிலையத்தை வந்தடையவுள்ளது. 
வரும் 16ம் நாள் லொஸ் ஏஞ்சல்சில் இருந்து புறப்படும் இந்த விமானம், 17ம் நாள் டுபாயை அடைந்து, 18ம் நாள் மத்தாலவில் தரையிறங்கும். 
பின்னர், இந்த விமானத்தில் இலங்கைக்கு வரும் பயணிகளை மத்தாலவில் இருந்து சொகுசு பேருந்துகள் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment