Thursday, March 7

சாவேஸ் இறுதிக் கிரியையில் பங்கேற்க விமல், நியோமல் வெனிசுவெலா பயணம்

சாவேஸ் இறுதிக் கிரியையில் பங்கேற்க விமல், நியோமல் வெனிசுவெலா பயணம்



வெனிசுவெலாவின் புரட்சித் தலைவர் ஹூகோ சாவேஸின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவென இலங்கையில் இருந்து பிரதிநிதிகள் வெனிசுவெலா சென்றுள்ளனர்.

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த சாவேஸ் பல தடவைகள் சத்திர சிகிச்சை செய்து கொண்டார்.

வெனிசுவெலாவில் தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த சாவேஸ் மரணமான செய்தியை அடுத்து தலைநகர் கரகாசில் இருக்கும் மருத்துவமனைக்கு முன்னால் ஒன்றுகூடிய அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் மல்க “நாம் சாவேஸுடன் இருக்கிறோம்” என கோஷமெழுப்பினர்.

தம்மை புரட்சியாளராக அடையாளப் படுத்திக்கொண்ட சாவெஸ் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சர்ச்சைக்குரிய ஒருவராக இருந்து வந்தார்.

அமெரிக்காவை கடுமையாக சாடிவந்த அவர் லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரி கொள்கைக்கு ஒரு முன்மாதிரியாக இருந்து வந்தார்.

சாவேஸின் மரணத்தையடுத்து துணை ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ தற்காலிக ஜனாதிபதியாக தேர்தல் வரை செயற்படுவார் என்றும் இன்னும் 30 தினங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சர் எலியஸ் ஜவா குறிப்பிட்டார்.

இந்த நிலையில் சாவேஸின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்க இலங்கை அரசு சார்பில் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா மற்றும் வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோர் வெனிசுவெலா சென்றுள்ளனர்.

புரட்சித் தலைவரான இடதுசாரி கொள்கையுடைய சாவேஸ் 2009 லிபியாவில் வைத்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

(அத தெரண - தமிழ்)

No comments:

Post a Comment