Friday, March 29

முஸ்லிம்கள் சிங்களவர்களைவிட இருமடங்கு அதிகரித்திருக்கிறார்கள் : சம்பிக்க


1981ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் குடிசன மதிப்பீட்டில் பௌத்த மக்களின் குடிசன வளர்ச்சி 37% வீதமாகும். ஆனால் முஸ்லிம்கள் இதனைவிட இருமடங்கு, அதாவது 78 வீதம்
வளர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று தொழில்நுட்ப ஆய்வு மற்றும் அணுசக்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறினார்.
கொழும்பு 07 இல் அமைந்துள்ள சவ்சிறிபாய பிரதான மண்டபத்தில் நடைபெற்ற பௌத்த கலாசார புனரமைப்பு குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
 இதுதொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், முன்பு, முப்பத்தையாயிரம் பேர் என்ற அளவிலிருந்த முஸ்லிம் சனத்தொகை தற்போது, இருபது லட்சமாக உயர்ந்திருக்கிறது. இதே நிலை தொடருமானால், பௌத்த மக்கள் இரு மடங்காவதற்கு 140 வருடங்கள் எடுத்திருக்கும் நிலையில் அதே காலப் பிரிவில் முஸ்லிம்களின் இருபது லட்சமாக இருக்கும் முஸ்லிம்கள் பதினாறு மடங்காகப் பெருகி உச்ச நிலைக்கு வந்துவிடும்.
ஒரு குடும்பத்திற்கு 2.1 என்ற வீதத்திலேயே குழந்தைகள் இருக்க வேண்டும் என்றதொரு நியதி உலகில் இருந்து வருகிறது. அவ்வாறு அமையப் பெறாவிட்டால், அந்த கலாசாரம் அதே பரம்பரையை முன்னுக்கு கொண்டு வராது தவிர்த்து விடும்.
இன்று எமது பௌத்த மக்கள் மத்தியில் குடிசன வளர்ச்சி 1.7 வீதமே காணப்படுகின்றது. இது பாரதூரமான விளைவாகும். அதேபோன்று 15 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளது வளர்ச்சி வீதத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் இதுவரையும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. நாம் பொதுவாக பத்து வருடங்களுக்கு ஒரு முறையே குடிசன மதிப்பீடு செய்கிறோம். இம்முறை 2012 ஆம் ஆண்டு மதிப்பீடு செய்யப்பட்ட போதும் இதுவரை மதிப்பீடு அறிக்கையை விபரமாகத் தருவதற்கு குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தவறிவிட்டது. தொழில்நுட்ப சாதனங்கள் உள்ள தற்போதைய நிலையில் முறையான அறிக்கையைச் சமர்ப்பிப்பதிலுள்ள தாமதம் குறித்து எனது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோன்றே பௌத்தர்களுக்கு இன்று வெளிநாடுகளில் பலமான அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றன. உல்லாசப் பயண வீசாபெற்று இந்நாட்டுக்கு வரும் பெரும்பாலானோர் இங்கு தங்கியிருக்கிறார்கள்.
மாலைதீவு மாணவர்களுக்கு இங்கு கல்வி பெற வீசா வழங்கப்படுகிறது. அத்துடன் அவர்களது பெற்றோருக்கும் இங்கு வருவதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு இங்கு வருவோரில் எத்தனை பேர் கல்வியை முடித்துக் கொண்டு மீண்டும் மாலைதீவுக்குச் சென் றிருக்கிறார்கள் என்பது குறித்து தேடிப்பார்க்க வேண்டும்.
இந்தியாவின் ஒரு மாநிலத்திலிருந்து எமது நாட்டுக்கு பலமான அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து நாம் அவர்களுடன் கோபித்துக் கொள்ளக் கூடாது. இந்தியாவில் இருக்கும் பௌத்த மக்களுடன் மேலானதொரு உறவை நாம் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது இந்திய பாராளுமன்றத்தில் பௌத்த பிரதிநிதித்துவத்தை சக் திமிக்கதாக்க வேண்டும் என்பதாகும்.

No comments:

Post a Comment