Wednesday, March 6

முஸ்லிம் பாடசாலைக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பெறுமதியான காணி நன்கொடையாக வழங்கிய சிங்கள மனிதர்

குருநாகல் மாவட்டத்தில் சில பௌத்த விஹாரைகளுக்கும் மற்றும் சில பௌத்த பிரிவினா இடங்களுக்கு வெளிநாட்டு வெள்ளையர்கள் வந்து போவதாக கேள்விப்படக் கூடியதாக உள்ளன. இதனால் தொன்று தொட்டு ஒற்றுமையாக வாழ்ந்த சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே சூழ்ச்சிகளைச் செய்து இலங்கையில் குழுப்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. இதில் நாங்கள் கவனமாக இருத்தல் வேண்டும் என்று வடமேல் மாகாண சபையின் தவிசாளர் ஆர். டி விமலதாச தெரிவித்தார்.
இப்பாகமுவ கல்வி வலயத்திற்கு உட்பட்ட தல்கஸ்பிட்டிய அல் அக்ஷா மஹா வித்தியாலயத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைத்துக் கொள்வதற்காக அலவல வலவ்வே ஏக்கநாயக் முதியன்சிலாகே அபேரத்தன ஏக்கநாயக என்பவர் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான அரை ஏக்கர் காணியை இலவசமாகவும் மற்றும் இன்னும் நான்கு பேர் சேர்ந்து அரை ஏக்கர் காணியையும் மொத்தமாக ஒரு ஏக்கர் காணியை இலவசமாக வழங்கி வைக்கும் நிகழ்வுடன் விளையாட்டு மைதானத்தை நிர்மாணிப்பதற்காக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் அண்மையில் பாடசாலை அதிபர் ஜாபீர் தலைமையில் நடைபெற்ற போது கலந்து கொண்டபோதே இவ்வாறு அங்கு குறிப்பிட்டார்.

நாம் மரணிக்கும் தருணத்தில் எங்களுடைய எதிர்காலச் சந்ததியினருக்கு நல்லது செய்து விட்டு மரணிக்க வேண்டும். நாம் இந்த உலகில் வாழ்வது கொஞ்சக் காலம். நாம் பணிகள் காலம் பூரா வாழக் கூடியது. முஸ்லிம் சிறார்கள் விளையாடுவதற்காக தம் காணியை இந்தப் பாடசாலைக்கு இலவசமாக வழங்கியதன் ஊடாக அபேரத்னத ஏக்கநாயக காலம் பூரா எம் நெஞ்சில் நிறைந்த மனிதராக திகழப் போகின்றார். இது முஸ்லிம் சிங்கள உறவை மேலும் வலுப்படுத்தக் கூடிய செய்தி, இது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக இருந்துக கொண்டிருக்கிறது. இந்தச் செய்தி தஸ்பிட்டியவுக்கு மாத்திரமல்ல வடமேல் மாகாணத்திற்கு மாத்திரமல்ல முழுநாட்டுக்கும் செல்ல வேண்டும்.
திருமண விழாக்களில் நாங்கள் ஒன்று பட்டுக் கலந்து கொண்டு திருமணத் தம்பதிகளை வாழ்த்துகின்றோம். ஒரே பாடசாலையில் நாங்கள் கல்வி பயிலுகின்றோம் . சின்னஞ் சிறு வயதில் கூட ஓடி ஆடி ஒன்றாய்த் திரிகின்றோம். ஒருவொருக்கொவருவர் சமய விழாக்களில் கலந்து கொண்டு அதன் சிறப்புக்களுக்கு மதிப்பளிக்கின்றோம். எந்த விடயமானாலும் சரி எங்களுடைய உறவு பலம்பெற்றதாகவே இருக்கிறது. முஸ்லிம்களுடைய உறவு பலம் வாய்ந்தவை போன்று முஸ்லிம் நாடுகளுடைய உறவும் இலங்கை நாட்டுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. உதவி உபகாரங்கள் வழங்கி வருகின்றன. அத்துடன் கடந்த முப்பது வருட கால யுத்தின் போது இலங்கை நாட்டுக்கு பாக்கிஸ்தான் நாடு இலங்கை இராணுவ ரீதியாக பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது என்பதை மறக்க முடியாது. அதேபோல் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட மனித உரிமை பிரேரணைக்கு இலங்கைக்கு ஆதரவாக முஸ்லிம் நாடுகள் ஆரவு வழங்கின. அந்நாடுகளில் குவைட் சவூதி அரேபியா போன்ற நாடுகள் அமெரிக்காவின் மிக நேச நாடுகளாகும். அவ்வாறு இருந்த போதிலும் இந்நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தமை என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.
ஹலால் என்பது நல்ல விடயங்களையே சுட்டிக் காட்டி நிற்கிறது. இதனைக் கருத்திற் கொள்ளாமல் பிழையாக சித்தரித்துக் கொண்டு இலங்கையில் ஒரு முரண்பாட்டைத் தோற்றிவித்துக் கொண்டிருப்பதா அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment