அவ்வறிவித்தலில் சொல்லப்பட்டதாவது;
கடந்த 15.03.2013 அன்று வெள்ளிக்கிழமை
ஜூம்ஆ தொழுகைக்குப் பின் சகோதரர் அஸாத் சாலி பள்ளிவாசலுக்குள் என்னை
ஏசிப்பேசி அகௌரவப்படுத்தியதை அல்லாஹ்வுக்காவும் எனது சமூகத்திற்காகவும்
நான் மன்னித்துவிட்டேன்.
அத்துடன் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸில்
கொடுத்த முறைப்பாட்டையும் வாபஸ் பெற்று விட்டேன் என்று ஜூம்ஆ
தொழுகைக்குப்பின் பகிரங்கமாக அறிவித்தேன்.
இவ்வறிவித்தலில் நான் விசேடமாக வேண்டிக்
கொண்டதாவது எமது முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுத்து வரும் சமூக
தலைவர்களுக்கு நீண்ட ஆயுல் கிடைக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம். இதுதான்
எமது வருங்கால முஸ்லிம் சந்ததியினருக்கு நாம் கொடுக்கும் பெரும் ஸதகத்துல்
ஜாரியாவாகும் என்று அறிவித்தேன்.
எனக்கு அஸாத் சாலி ஏசியது எதற்காக?
15.03.2013 வெள்ளிக்கிழமை ஜூம்ஆ
தொழுகைக்குப் பின் ஒரு அறிவித்தலை அறிவிக்கச் சொல்லி பள்ளிவாசலில்
கடமைபுரியும் சிறாஜூதீன் மௌலவியின் கைத்தொலைபேசிக்கு அஸாத் சாலி
எஸ்.எம்.எஸ்.அனுப்பினார். பிறகு எழுத்து மூலம் சிறாஜூதீன் மௌலவி அவ்
அறிவித்தலை எழுதி இவ்வறிவித்தலை அஸாத் சாலி அறிவிக்குமாறு சொன்னார் என்று
கூறினார்.
இவ் அறிவித்தலை ஜூம்ஆவுக்கு பிறகு நான் அறிவிக்க அனுமதி மறுத்ததே இதற்கான காரணம்.
அவ்வறிவித்தலிலும் எஸ்.எம்.எஸ் இலும்
சொல்லப்பட்டிருந்ததாவது; அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு ஹலால்
சான்றிதழ் வழங்க எந்த உரிமையும் இல்லை என்று அரசாங்கம் அறிவித்ததாக
சொல்லப்பட்டிருந்தது.
இவ்வறிவித்தலை வாசிக்க அனுமதி
மறுத்ததால்தான் இந்தப் பிரச்சினை நடந்தது. இவ் அறிவித்தலை மறுத்த காரணம்.
குறிப்பாக இதுவரைக்கும் (15.03.2013) ஹலால் சான்றிதழ் தொடர்பாக அ.இ.ஜ.உ சபை
இப்பபடி ஒரு செய்தியை எங்கும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை.
இது தொடர்பாக இவ்வறிவித்தலை பள்ளியில்
வாசிக்க நான் அனுமதி மறுத்ததை பள்ளி நிர்வாகிகள் என்னிடம் வினவினார்கள்.
நான் நிருவாகிகளுக்கு இது தொடர்பாக விளக்கமளித்ததையடுத்து எனது முடிவை
சரியென ஏற்றுக் கொண்டார்கள்.
இனிமேல் இப்படியான அறிவித்தல்கள்
கிடைக்கப்பெற்றால் பள்ளிவாசல் நிர்வாக சபையின் முழு அனுமதியின்றி
அறிவிக்கக் கூடாது என்றும் சொன்னார்கள்.
பொலிஸில் போடப்பட்ட புகாரை எதற்காக வாபஸ் பெற்றேன்?
21.03.2013 வியாழக்கிழமை அன்று தெவட்டகஹ
பள்ளிவாசலில் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் மகனும் அவரது பிரத்தியேக
செயலாளருமான அல்ஹாஜ் அஸ்ஸெய்யது நகீப் மௌலானா, சமூக சேவையாளர் கனி
ஹாஜியார், சமூக சேவையாளரும் அஸாத் சாலியின் மைத்துனருமான றிஸ்வி ஹாஜியார்,
தெவட்டகஹ பள்ளிவாசல் நிர்வாக முகாமையாளர் சித்தீக் ஹாஜியார் மற்றும்
முக்கியமான பிரமுகர்கள் உலமாக்கள் ஒன்றுகூடி இது தொடர்பாக ஆலோசனை (மசூரா)
செய்து இனிமேல் அஸாத் சாலியால் உங்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் வராது
அதற்கு நாங்கள் பொறுப்பு என்று உறுதிமொழியளித்தார்கள்.
இந்த மூத்த சமூக தலைவர்களின் ஆலோசனைகளுக்கு
மதிப்பளித்து அல்லாஹ்வுக்காகவும் எனது முஸ்லிம் சமூகத்திற்காகவும் சகோதரர்
அஸாத் சாலியை நான் மன்னித்தேன்.
அத்துடன் பொலிஸ் நிலையத்தில்(சி.சி.டி)
கொடுத்த புகாரையும் வாபஸ் பெற்றுக் கொள்கின்றேன் என்று ஆலோசனைக்
குழுவிடத்தில் உறுதியளித்து உடனடியாக சத்திய கடதாசியையும் எழுதி ஒப்பமிட்டு
அந்த ஆலோசனைக் குழுவிடம் தெவட்டகஹ பள்ளியில் வைத்து(21.03.2013)
வியாழக்கிழமையன்றே ஒப்படைத்தேன்.
அத்துடன் அடுத்த நாள் 22.03.2013
வெள்ளிக்கிழமை அஸாத் சாலியின் வழக்கறிஞர் எம்.எம்.மொஹிடீன் ஆலோசனைக்கு
உறுப்பினர்களான கனி ஹாஜியார், அஸாத் சாலியின் மைத்துனர் றிஸ்வி ஹாஜியார்
ஆகியோருடன் பொலிஸ் நிலையத்திற்கு (சி.சி.டி) சென்று 21.03.2013 தெவட்டகஹ
பள்ளியில் நடந்த ஆலோசனை சம்பவத்தை பொலிஸாருக்கு எடுத்துச் சொல்லி அஸாத்
சாலியின் பெயரிலான முறைப்பாட்டை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் இன்மேல் அஸாத்
சாலியால் எனக்கு எந்த பிரச்சினையும் வராது என்று ஆலோசனைக்குழு
பொறுப்பேற்றுள்ள செய்தியை பொலிஸாரிடம் சொல்லி நான் கொடுத்த வாக்கு மூலத்தை
வாபஸ் பெற்றுக் கொண்டேன்.
பொலிஸார் எழுதிய எனது வாக்கு மூலத்தை அஸாத்
சாலியின் வழக்கறிஞரிடம் நான் வாபஸ் பெற்ற வாக்கு மூலத்தை மீண்டும்
பரிசீலனை செய்து பார்க்குமாறும் அவ்வாக்கு மூலம் அஸாத் சாலியின்
வழக்கறிஞரால் சரியென ஏற்றுக் கொண்ட பின்பே வாபஸ் பெற்ற வாக்கு மூலத்தில்
கையொப்பம் இட்டேன். இதுதான் உண்மை நிலையாகும்.
குறிப்பாக அஸாத் சாலிக்கு விரோதமாக எவரும்
என்னை செயல்படுமாறு தூண்டவோ, செயற்படவோ கூறவில்லை. இதற்கு முன் எனக்கும்
சகோதரர் அஸாத் சாலிக்கும் எந்தவித கோபதாபங்களோ கருத்து வேறுபாடுகளோ
இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது என்பதை சொல்லிக் கொள்வதோடு கடந்த
15.03.2013 வெள்ளிக்கிழமை தெவட்டகஹ பள்ளிவாசலினுல் அஸாத் சாலி என்னை
ஏசிப்பேசி ஏனையோர் முன்னிலையில் அகௌரவப்படுத்தியதாலேயே நான் பொலிஸ் நிலையம்
செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது.
விசேடமாக நானும் அஸாத் சாலியும் ஒரே
சுன்னத்துவல் ஜமாத் கொள்கையை சேர்ந்தவர்கள், இருவருமே தெவட்டகஹ
பள்ளிவாசலில் அடங்கித்திகலும் இறைநேசர் ஷெய்க் உஸ்மான் வலியுள்ளாஹ்வை
நேசிப்பவர்கள் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
இதுவரைக்கும் என்னால் சொல்லப்பட்ட அத்தனையும் உண்மை என்பதை அல்லாஹ்வின்
மீது சத்தியமாக உறுதியுடன் சொல்கின்றேன்.
இப்படிக்கு ஹஸன் மௌலானா.