Tuesday, March 5

முஸ்லிம் விரோத நடவடிக்கை: ஒன்றிணைந்த போராட்டத்துக்கு முஜிபுர் அழைப்பு






முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை அரசு தடுக்காவிடின் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோமென ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



நாட்டில் நாளுக்கு நாள் முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்து செல்கின்றன. பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் ஓர் அமைப்பு செயற்படுகின்றது.

இதேவேளை, அவ்வமைப்பு பள்ளிவாசல்களுக்குள் அத்துமீறி நுழைந்து பொலிஸ், இராணுவம் போன்று செயற்படுகின்றது. இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் வழங்கியுள்ளனர். இவற்றையெல்லாம் அரசாங்கம் பார்த்துக்கொண்டு நடவடிக்கை எடுக்காது மௌனமாக இருக்கின்றது. அல்லது நாம் தான் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளோமென வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

இந்த நாட்டில் இரண்டுவகையான சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அது அரசாங்கத்திற்கு சார்பானவர்களுக்கு ஒரு சட்டம் மற்றையது அரசிற்கு எதிரானவர்களுக்கு ஒரு சட்டம். இந்நிலையில் பாடசாலைகளில் முஸ்லிம் - சிங்கள மாணவர்கள் மத்தியில் பிரச்சினைகள் உருவாக்கி விடப்பட்டுள்ளது. இச் செயற்பாடு முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய பிரச்சினையை தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, எதிர்காலத்தில் நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப், பர்தா அணிந்து செல்ல முடியுமாவென்ற சந்தேகம் எழுந்துள்ளது. முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. முஸ்லிம்கள் இவ்வாறான செயற்பாடுகளுக்கு பயந்து கொண்டிருக்கவில்லை. இனியும் முஸ்லிம்களால் மௌனம் சாதித்துக் கொண்டிருக்க முடியாது.

இந்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெறுவதை அரசாங்கம் தடுத்து நிறுத்தத் தவறினால் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோமென அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment