Friday, March 29

அமைச்சரவையை அவசரமாகக் கூட்வும் - ஜனாதிபதியிடம் ஹக்கீம் வேண்டுகோள்






நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எல்லை மீறிச் செல்வதையடுத்து நிலைமையை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்வது பற்றித் தீர்மானிப்பதற்காக அமைச்சரவையை அவசரமாகக் கூட்டுமாறு நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பு புறநகர் பகுதியான பெப்பிலியானவில் வியாழக்கிழமை இரவு முஸ்லிம்களுக்குச் சொந்தமான பிரபல ஆடை நிறுவனமொன்றின் களஞ்சியசாலை தீவிரவாதிகளால் தாக்கப்பட்டதையடுத்து கண்டியிலிருந்து ஜனாதிபதியுடன் தொலைப்பேசியில் அவசரமாகத் தொடர்பு கொண்டு அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதன் போது, இந்தச் சம்பவத்தை தனிப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கையாக மட்டும் கருதாது இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்கள் மிகவும் திட்டமிட்ட அடிப்படையில் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரப்போக்குடைய இனவாத கும்பலினால் பல்வேறு வடிவங்களில் பாரதூரமான முறையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதை அமைச்சர் ஹக்கீம் ஜனாதிபதியிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி வெளிநாடு சென்றுள்ள நிலையில் அமைச்சர்களான ரிசாத் பதியுத்தீன் ஏ. எல். அதாவுல்லாஹ் ஆகியோருடன் அமைச்சர் ஹக்கீம் இதுபற்றி தொலைப்பேசியில் கலந்தாலோசித்துள்ளார். நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் வன்முறை பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்வதற்கு கூட்டாக ஒத்துழைப்பதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment