முஸ்லிம்களும் இந்த நாட்டுப் பிரஜைகளே
அவர்களுக்கும் இங்கு வாழும் உரிமை உள்ளது. இந்த நாட்டு
சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்வதாக இருந்தால் முஸ்லிமகள் இங்கு
வாழலாம் அல்லது அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று
பொது பல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வார இறுதியில்
வெளியாகியுள்ள ஒரு சிங்களப் பத்திரிகையில் பகிரங்கமாக பேட்டி அளித்துள்ளார்.
இது சம்பந்தமாக முஸ்லிம் தமிழ் தேசிய
முன்னணியின் தலைவர் அஸாத் சாலி விடுத்துள்ள அறிக்கையில்,
இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
முஸ்லிம்கள் இந்த நாட்டு சட்டதிட்டங்களை எந்த சந்தர்ப்பத்திலும் மீறவில்லை.
அவர்கள் தமக்கென தனிநாடோ பிராந்தியமோ கேட்கவும் இல்லை. நாட்டுப்பற்றோடு
சட்டங்களை மதித்து அரசுக்கு விசுவாசமாக அமைதியாகவே அவர்கள் இதுவரை வாழ்ந்து
வருகின்றனர்.
ஆனால் நாட்டை நேசிக்காத சட்டஒழுங்கை
மதிக்காத தினசரி ஒரு புது குழப்பத்தை ஏற்படுத்தும் கலகக்கார குழுவாக பொது
பல சேனாதான் மாறியுள்ளது என்பதை நாம் இங்கு நினைவூட்டிக் கொள்ள
விரும்புகின்றோம்.
இந்த நாட்டில் சகல இனத்தவர்களும் சம
அந்தஸ்த்துடனும், சகல உரிமைகளுடனும் வாழும் உரிமை எல்லா இனத்தவர்களுக்கும்
அரசியல் சாசன ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. இன்று இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் குடியேறியவர்கள். இன்றைய முஸ்விம்களின்
பூர்வீகம் இலங்கை தான். அவர்கள் பல தலைமுறைகளாக இங்கு பெரும்பான்மை இனத்துடன்
இணைந்து ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நாட்டின் உண்மையான சரியான
வரலாறை பொது பல சேனா குழுவினர் படிக்கவில்லை என்று நினைக்கின்றேன். வரலாறு
என நினைத்துக் கொண்டு யாரோ இனவாதிகள் எழுதி வைத்துள்ள குறிப்புக்களை
மட்டுமே அவர்கள் படித்துள்ளார்கள் என்று நினைக்கின்றேன்.
முஸ்லிம்களுக்கான சமயக் கடமைகளும் சமய
நீதிகளும் பிரத்தியேகமானவை. அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவற்றை அவர்களால்
விட்டுக் கொடுக்க முடியாது.முஸ்லிம்கள் தமக்குரிய பிரத்தியேகமான கலாசாரம், வழிபாட்டு முறை என்பனவற்றை கைவிட
வேண்டும் என்று யாரும் அவர்களை வற்புறுத்தவும் முடியாது. இந்த நாடு ஒரு
பல்லின சமூக நாடு. இதில் அவரவருக்கென்று தனியான கலாசார மற்றும் வழிபாட்டு
முறைகள் இருக்கின்றன. இதில் இன்னொருவர் தலையிட முடியாது.
இந்த யதார்த்தத்தை புறிந்து கொண்டு
தொடர்ந்து முஸ்லிம்களை ஆத்திரமூட்டி சீண்டும் முயற்சிகளையும், விஷமத்தனமான
காரியங்களையும் கைவிட்டு எல்லா இனத்தவர்களும் அமைதியாக வாழ வழிவிட
வேண்டும் என பொது பல சேனாவை மிகவும் வினயமுடன் வேண்டிக் கொள்கிறேன்.
அத்தோடு இந்த விடயத்தில் அரசும்
தனக்குள்ள பொறுப்பை சரிவர நிறைவேற்ற வேண்டும். இன ஐக்கியம் இன
புரிந்துணர்வு,இன நல்லிணக்கம் என வெறும் வார்த்தைகளைப் பாவிப்பதை
நிறுத்திவிட்டு அவற்றுக்கு உண்மையான செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும், நல்லிணக்கத்துக்கும்,சக வாழ்வுக்கும்
தடையாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்ற சக்திகளை இனம் கண்டு
அவற்றை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
அஸாத் சாலி
தலைவர்
முஸ்லிம் தமிழ் தேசிய கூட்டமைப்பு
No comments:
Post a Comment