ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு எந்தவித அதிகாரமுமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹலால் சர்சை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அமைச்சரைவ உப குழுவினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சிரேஷ்ட அமைச்சர் ரத்னசிறி விக்ரமநாயக்க தலைமையிலான இந்த உப குழுவின் கூட்டம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இது இந்த உப குழுவின் இறுதி அமர்வாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உப குழுவில் முஸ்லிம் அமைச்சர்களான பௌசி, ரவூப் ஹக்கீம், ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் றிசாத் பதியுதீன் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களும் அங்கம் வகிக்கின்றனர்.
எனினும் நேற்றைய கூட்டத்தில் முஸ்லிம் அமைச்சர்களில் றிசாத் பதியுதீன் மாத்திரம் கலந்துகொண்டுள்ளார். ஜனாதிபதியுடன் சிரேஷ்ட அமைச்சர் பௌசி ஜப்பான் சென்றுள்ளமையினாலும், அமைச்சர் ஹக்கீம் மற்றும் அதாவுல்லா ஆகியோர் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளமையினால் இந்த கூட்டத்தில் அவ்விருவரும் கலந்துகொள்ளவில்லை.
இந்த கூட்டத்திலேயே ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு எந்தவித அதிகாரமுமில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
அமைச்சரவை உப-குழுவின் இந்த தீர்மானத்திற்கு அமைச்சர் றிசாத் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இந்த தீர்மானத்தினால் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் பாதிப்படைகின்றனர் என அவர் தெரிவித்தாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த அதிகாரத்தினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வழங்காவிட்டால் வேறு எதாவது அரச நிறுவனங்களுக்காவது வழங்க வேண்டும் என இந்த கூட்டத்தில் அமைச்சர் றிசாத் கோரிக்கை விடுத்தாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹலால் சான்றிதழ் வழங்கு அதிகாரத்தினை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா எந்த விதத்திலும் வழங்க முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முடிவு இதுவரை உப குழுவிற்கு அறிவிக்கப்படவில்லை என அக்குழுவின் தலைவர் ரத்னசிறி விக்ரமநாயக்க இன்றைய கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை உப-குழுவின் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment