Monday, March 11

முஸ்லிம்களின் மத உரிமைகளை தடுப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் மேர்வின்


Mervin
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிழையான பிரச்சாரங்கள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வா இஸ்லாமியர்கள் அவர்களது மதத்தை பின்பற்றுவது அவர்களுக்குள்ள உரிமையாகும். அதனை தடுப்பதற்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க நேரிடும் என்றும் கூறினார்.

மன்னார் மாவட்டத்தில் யுத்தப்பாதிப்புக்குள்ளான பிரதேச பாடசாலைகளிலிருந்து  தெரிவு செய்யப்பட்ட 500 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (10.03.2013) தட்சனா மருதமடு பாடசாலையில் இடம் பெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, கைத்தொழில், வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மன்னார் நகர சபை உறுப்பினர் நகுசீன் உட்பட பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மேலும் அமைச்சர் மேர்வின் சில்வா பேசுகையில் கூறியதாவது,
இன்று இந்த நாட்டில் யுத்தம் இல்லை. மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கெதிரான ஹலால் பிரச்சினையினை ஏற்படுத்தி அதன் மூலம் இனவாதத்தை விதைத்து, மனித சுதந்திரத்தை தடுக்கப்பாரக்கின்றனர்.

அன்று விடுதலைப் புலிகள் இங்கிருந்த மக்களை வெளியேற்றினர். இன்று அவர்கள் இல்லை. எனவே, இவர்களால் வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும், தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றத்திற்கு வாருங்கள் என்ற அழைப்பினைவிடுக்கின்றேன். நீங்கள் மீள்குடியேறவருகின்ற பேகாது அரசாங்கம் உங்களுக்கு தேவையானவற்றை செய்து தர தயாராகவுள்ளது. பெரியமடு கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் தற்பொது மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவருகின்றனர். மிகுதி மக்களை அங்கு குடியேற்றம் செய்ய அமைச்சர் றிசாத் பதியுதீன் நடவடிக்கையெடுக்கும் போது, அந்த இடத்தில் மீள்குடியேற்ற முடியாதவாறு தடைகளை ஏற்படுத்துகின்றனர்.
அமைச்சர் றிசாத் அவர்களே, நீங்கள் தைரியமாக அந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யுங்கள், அதற்கு எதிராக வரும் தடைகளையும், சவால்களையும் நாம் எதிர் கொள்வோம். இந்த பணியினை மேற்கொள்ள எனது உதவியும் தேவையெனில் இரு வாரங்களுக்கு இங்கு வந்து உங்களோடு நின்று இந்த பணிக்கு உதவி செய்ய நான் தயாராகவுள்ளேன்.
அதேபோல் அரச அதிகாரிகள் மாறலாம், மத குருமார்கள் மாறலாம், மதகுருமார்களின் பணி மக்களுக்கு நல்லதை எடுத்துரைப்பது. அதனை அவர்கள் செய்ய வேண்டும். இது தான் அவர்களது பணி, மக்களது தேவைகளை இனம் கண்டு பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் வாதிகளாகிய நாங்கள் இருக்கின்றோம். வன்னி மாவட்ட மக்களுக்கு பணியாற்ற அமைச்சர் றிசாத் பதியுதீன் இருக்கினறார். அரசாங்க அதிபர் அவர்கள், அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட வேண்டும் அப்போது தான் மாவட்டத்தின் அபிவிருத்தியினை செய்ய முடியும். அதனைவிடுத்து இன ரீதியான பிளவுகளை எற்படுத்தும் பணிகளுக்கு துனைபோய் விடக் கூடாது.
இந்த நாட்டினை வெள்ளையர்களிடம் இருந்து மீற்பதற்காக போராடியவர்களில் தமிழர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றார்கள் என்பதை மறந்து செயற்பட முடியாது. இந்த நாட்டில் வாழும் அனைவரும் ஒரே தேசத்தின் மக்கள் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதிப்படுத்தி தெரிவித்துள்ளார். இனி இந் நாட்டை இன, மத, மொழி, பிரதேச ரீதியாக பிரிக்க முடியாது. அதற்கு இடமும் கொடுக்கப்படமாட்டாது என்பதை கூறிக் கொள்ள விரும்புகின்றேன் என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா கூறினார்.
Mervin4
Mervin2
Mervin1
Mervin3

No comments:

Post a Comment