மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் 100 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும்
பள்ளிவாசல் செயற்பாடுகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் நிறுத்தி விடுமாறு
மஹர சிறைச்சாலை அத்தியட்சர் பள்ளிவாசல் பரிபாலன சபைக்கு கடிதம் மூலம்
உத்தரவிட்டுள்ளார்.
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின்
வேண்டுகோளுக்கிணங்கவே குறிப்பிட்ட பள்ளிவாசல் செயற்பாடுகள் நிறுத்தப்பட
வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் இப்பள்ளிவாசலில் தமது சமயக் கடமைகளை நிறைவேற்றி வரும் மஹர
சிறைச்சாலை பிரதேசத்தைச் சேர்ந்த 360 குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள்
பெரும் விசனத்துக்குள்ளாகியுள்ளனர்.
இப்பள்ளிவாசலில் அஹதிய்யா பாடசாலையும், குர்ஆன் மத்ரஸாவும்
நடத்தப்படுவதால் இவற்றில் பயிலும் மாணவர்களும் பாதிக்கப்படவுள்ளனர். இப்
பள்ளிவாசல் மூடப்பட்டால் தமது சமயக் கடமைகளுக்காக மிகவும் தூரத்திலுள்ள
மாபோலை பள்ளிவாசலுக்கே செல்ல வேண்டியேற்படும் எனவும் தெரிவிக்கின்றனர்.
1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் திகதி இப்பள்ளிவாசல் வக்பு சபையில் பதிவு
செய்யப்பட்டுள்ளதாக இப்பிரதேசத்தைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத 73
வயதான நபர் ஒருவர் தெரிவித்தார்.
சிறைச்சாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இப்பள்ளிவாசலுக்கென பிரத்தியேகமாக
பாதையொன்று அமைத்துத் தருவதாகவும், மதில் கட்டித் தருவதாகவும்
உறுதியளித்திருந்த நிலையில் தற்போது பள்ளிவாசல் செயற்பாடுகளுக்கு 30ஆம்
திகதி வரை அவகாசம் வழங்கியுள்ளமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது எனவும் அவர்
தெரிவித்தார்.
பள்ளிவாசல் பரிபாலன சபை நேற்று வக்புசபை அதிகாரிகளைச் சந்தித்து நிலைமைகளை
விளக்கியது. இன்று சிரேஷ்ட அமைச்சர் எ.எச்.எம்.பெளஸியை சந்திக்கவுள்ளது.
முஸ்லிம் அமைச்சர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், வக்பு
சபை தமக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டுமெனவும், பள்ளிவாசல் தொடர்ந்து
இயங்க ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் பிரதேச மக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர். |
No comments:
Post a Comment