Wednesday, March 6

2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு உல்லாச பயணம்- அமெரிக்க கோடீஸ்வரர் ஏற்பாடு


இன்னும் ஐந்து வருடங்களுக்குள் செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி சுற்றுலா செல்ல ஒரு இளம் தம்பதியர் தேர்ந்தெடுத்து அனுப்பப்படலாம்.
 
ஆம், இதற்கான முயற்சிகளில் ஒரு தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இன்ச்பிரேஷன் மார்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை. பூமியும், செவ்வாயும் சந்த்திதுக்கொள்ளும் கோள் பாதையை அருகில் சென்று பார்ப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
 
அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரரான டென்னிஸ் டிடோ இத்திட்டத்திற்கு தேவையான முதலீட்டைச் செய்ய உள்ளார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா இதில் பங்கேற்கவில்லை. இதற்குத் தனியார் தயாரிப்புகளையே பயன்படுத்தப் போகின்றனர்.
 
 
இதில் செல்பவர்கள் செவ்வாய் கிரகத்தில் இறங்கவோ, நடக்கவோ முடியாது. கோள் பாதையில் சென்று அதனை அருகில் பார்க்க மட்டுமே இயலும். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, தண்ணீர் வழங்கப்படும். அவர்களின் சிறுநீர் குடிநீராக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படும்.
 
இந்த சிக்கலான பயணத்தின்போது ஒருவருக்கொருவர் உதவியும், அரவணைப்பும் தேவைப்படுவதால் தம்பதியரைத் தேர்ந்தெடுப்பதாக இத்திட்டத்தின் குழு உறுப்பினரும், தொழிநுட்ப அதிகாரியுமான தாபர் மக்கில்லாம் கூறியுள்ளார்.
 
இந்த பயணத்திற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் 2018-ம் ஆண்டு, ஜனவரி 5-ம் தேதி துவங்கும். தம்பதியரின் பயணம் அந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 2-ம் தேதி ஆரம்பித்து 2019-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இப்பயணத் திட்டம் எண்ணத்தைக் கவருவதாக இருந்தாலும், தொழில் நுட்ப விவரங்கள் குறைவாகவே உள்ளன என்று நாசாவின் செவ்வாய்த் திட்டத்தின் முன்னாள் தலைவர் ப்ரொபசர் ஸ்கொட் ஹுப்பார்ட் கருதுகிறார்.

No comments:

Post a Comment