Tuesday, February 5

நெருக்கடி ஏற்பட்டால் வீட்டுக்கு செல்வேனே தவிர மாற்றுக் கட்சிக்கு போக மாட்டேன்!

Basheer Seguகட்சி அரசியல் ரீதியாக நெருக்கடியான சூழ்நிலைகள் எற்பட்டால் அரசியலை துறந்து வீட்டுக்குத்தான் போவேன். ஒருபோதும் மாற்றுக் கட்சிகளில் சங்கமிக்கமாட்டேன்  என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் உறுதியாகத் தெரிவித்தார்.
அரசாங்கமோ அல்லது வெளிநாட்டு சக்திகளோ, உள்நாட்டில் இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கெதிரான அமைப்புக்களோ, கட்சிகளோ எனது கட்சிக்கெதிராகவும் தலைமைத்துவத்திற்கெதிராகவும் என்னை ஒருபோதும் பயன்படுத்த முடியாது. நான் எத்தருணத்திலும் முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறவோ, வேறு கட்சிகளில் இணையவோ மாட்டேன் என்றும் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்றுமுன்தினம் ஏறாவூர் தாறுஸ்ஸலாமில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
“நெருக்கடியான சூழ்நிலைகள் எற்பட்டால் அரசியலை துறந்து வீட்டுக்குத்தான் போவேன். முஸ்லிம் காங்கிரசில் பிரிவினை ஏதுமில்லாமல் கட்சிக்கு இன்னுமொரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைத்து விட்டது என்று கவலைப்படுகின்ற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சியை பலவீனப்படுத்த விளைகிற சில வெளி சக்திகளின் உபாயரீதியான பிரச்சாரமே என்னைப் பற்றிய அண்மைய கட்டுக்கதைகளுக்கு காரணமாகும் என அவர் மேலும் கூறினார்.

றஊப் ஹக்கீமுக்கு பக்கபலமாக இருந்தேன்!
2000ம் ஆண்டு முஸ்லிம் காங்கிரசின் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரபின் மறைவுக்குப் பின்பு கட்சிக்குள் இரட்டை தலைமைத்துவ பிரச்சினை தொடக்கம் இன்று வரையான 13 வருட காலத்துக்குள் ஏற்பட்ட பல பிரச்சினைகளை முகம் கொடுத்து வெற்றி காண்பதில் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களுடன் இணைந்து முதன்மைப் பாத்திரம் ஏற்று செயற்பட்டவன் நான் என்பதை அன்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதியுயர் பீடக் கூட்டத்தில் கூறினேன்.
இந்த கட்சிக்குள் எனக்கென்றும் ஒரு வரலாறு இருக்கின்றது அது என்றும் காட்டிக்கொடுத்த வரலாறு அல்ல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை கட்டிக்காத்த வரலாறேயாகும்.
பலர் தலைமைத்துவத்தை மாற்றி, கட்சியை கைப்பற்ற எடுத்த எல்லா முயற்சிகளுக்கும் எதிராக கட்சியை காப்பாற்றவும் கட்சியின் தலைமைத்துவத்தை காப்பாற்றவும் ஒரு முன்னணி போராளியாக நின்று போராடியிருக்கின்றேன்.
அன்று தொடக்கம் இன்று வரைக்கும் இந்த கட்சியையும், தலைமைத்துவத்தையும் சீரழித்தவனாக நான் இருக்கவில்லை மாறாக இந்த தலைமைத்துவத்தையும் கட்சியையும் கட்டிக்காப்பதிலும் பாதுகாப்பதிலும் முனைப்புடன் செயற்பட்ட வரலாறுதான் இந்தக் கட்சியில் உள்ள எனக்கான வரலாறாகும்.
அமைச்சரை நியமிக்கின்ற அதிகாரம் ஜனாதிபதிக்குத்தான் இருக்கின்றது என்ற போதிலும் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருக்க வில்லை எனும் குறை தலைவருக்கு இருப்பது போலவே எனக்கும் இருக்கின்றது. ஆயினும் தலைவர் அவர்கள் கடந்த அதியுயர் பீடக் கூட்டத்தில் எனது நியமனத்தை அங்கீகரித்து வாழத்து தெரிவித்தமைக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாக இருப்பேன்.
அக்கூட்டத்தில் எனது நியமனத்திற்கு ஏகோபித்து ஆதரவு வழங்கி வாழ்த்து தெரிவித்த அனைத்து அதியுயர் பீட உறுப்பினர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றி கூறிக் கொள்கின்றேன்.
பல விமர்சனங்கள் விவாதங்களுக்கூடாக தலைவரின் கருத்துக்கு கூடுதலாக செவிசாய்த்து அங்கீகாரம் வழங்குகிற வழமையான அதியுயர் பீடத்தின் பண்பு எனது விடயத்திலும் வெளிப்பட்டுள்ளது என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
விஸேடமாக தனது அமைச்சரவையில் என்னையும் ஒரு அமைச்சராக நியமித்தமைக்காக என்சார்பாகவும் கட்சி சார்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சார்பாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு நன்றி கூறுகிறேன்.
பிழைப்பு நடத்த அரசியலுக்கு வரவில்லை!
நான் அரசியலில் நிறுவன ரீதியாக வளர்ந்தவன் பாராளுமன்ற உறுப்பினராவதற்கோ அமைச்சுப்பதவி எடுப்பதற்கோ அரசியலுக்குப் போனவனல்ல.
சிறுபான்மை இனத்துவ அரசியலில் முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான தேசிய அரசியல் இயக்கம் இல்லாத காலத்திலே தமிழ் முஸ்லிம் மக்களுக்கென்று சரியாக போராடும் என்று நான் அடையாளம் கண்டிருந்த ஈரோஸ் அமைப்பில் அரசியலை ஆரம்பித்திருந்தேன்.
ஈரோஸ் அமைப்பு எம்.பி.பதவி அமைச்சுப் பதவி தரும் என்று நான் இணைந்து கொள்ளவில்லை. தனி நாடு அமைத்து அமைச்சராவேன் என கனவு கண்டதுமில்லை.
ஆனால் அடக்கப்படுகின்ற ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கெதிரான போரட்டத்தில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அதில் இணைந்தேன்.
இருந்த வளங்களையும் தூக்கி எறிந்து விட்டு ஒரு போராட்ட அமைப்பிற்கு போனேனே தவிர எனக்கென்று எந்தவசதி வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்வதற்காக போகவில்லை.
எவரிடமும் இலஞ்சம் பெறாமல், ஊழல் செய்யாமல், வேலை வாய்ப்புக்களுக்கு பணம் வாங்காமல்,  கொந்தராத்துக்கு கொமிசன் பெறாமல் இன்றும் என்னால் அரசியலில் நிலைத்திருக்க முடிகின்றது.
வழமையாக மாதந்தம் நடைபெறும் அதியுயர் பீட அமர்வுதான் கடந்த முதலாம் திகதியும் கூடுகிறது என்ற போதிலும் பசீர் சேகுதாவூதுக்கு நடவடிக்கை எடுப்பதற்காக அரசியல் அதியுயர் பீடம் கூடுகின்றது என்று ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தது. அப்போதும் நான் நிலை தடுமாறாது தெளிவான மன நிலையில் உறுதியாக முகம் கொடுக்கத்தயாராக இருந்தேன்
இந்த அரசியல் அதியுயர் பீடத்தில் இருக்கின்ற ஒருவரிடமாவது எனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தொலைபேசியிலோ அல்லது நேரிலோ கேட்டிருக்கவில்லை. நான் கட்சிக்குள் குழு வாதத்தை அங்கீகரிக்கும் அரசியல் வாதியல்ல.
அது எமது இயக்கத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்பதை மிகத்தெளிவாக நான் உணர்ந்தவன். அவ்விடயத்தில் அனுபவமுள்ளவன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற எனது கட்சியை நான் எனது தாய்க்கு அடுத்த நிலையில் வைத்து நேசிப்பவன். இந்த அடிப்படையில்தான் அரசியலில் வளர்க்கப்பட்டு இருக்கின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இந்த கட்சியையும் தலைமைத்துவத்தையும் எந்த காரணம் கொண்டும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லவோ பலவீனப்படுத்தவோ உடன்படமாட்டேன்.
நான் சிறுவயதில் இருந்து வரலாற்றை உருவாக்க விரும்புகின்றவன் அந்த அடிப்படையில் ஒரு வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது என்றே நம்புகின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குள் எந்தக்காலமும் கிடைக்காத அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப்பதவியொன்றை பெற்ற முதலாவது முஸ்லிம் என்றும் 23 ஆண்டுகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இல்லாதிருந்த அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப்பதவி தற்போது கிடைத்துள்ளது என்ற வரலாறு எனது நியமனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
தலைவர் றஊப் ஹக்கீமும், பேரியல் அஸ்ரபுமும் இணை தலைவர்களாக இருந்த சொற்ப காலம் தவிர முஸ்லிம் காங்கிரசுக்கு என்றுமே இரண்டு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் இருந்ததில்லை.
கட்சியின் இரண்டு மூன்று எம்.பிக்களை இழுத்துக் கொண்டு பிரிந்து போய் அமைச்சுப்பதவி எடுத்துக் கொள்ளாமல் கட்சிக்குள்ளேயே இருந்து எந்தவிதமான பிரிவினையுமற்று கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் முன்னணியில் பங்கேற்றபடி கட்சிக்கு இன்னுமொரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களின் ஒற்றை தலைமைத்துவத்தின் கீழ் கிடைக்கச் செய்த வரலாற்றுக்கும் சொந்தக்காரனாக இறைவன் என்னை ஆக்கியுள்ளான்.
நடந்தது இதுதான்!
நடந்தது இதுதான் கடந்த 27ம் திகதி மாலை அலரி மாளிகையிலிருந்து 28ம்திகதி முற்பகல் 11மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும் பதவியேற்புக்கு வருமாறு தொலை பேசி அழைப்பு ஒன்று வந்தது.
தலைவர் நாட்டில் இல்லை என்பதை அறிந்திருந்த நான் 28ம் திகதி காலை செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் ஹஸன் அலியுடன் தொடர்பு கொண்டு அழைப்பு கிடைத்த செய்தியை பரிமாறினேன்.
ஊடகங்கள் வாயிலாக அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் பதவியேற்பு நடைபெறும் என்பதை அறிந்திருந்த நான் என்ன வகையிலான பதவியை ஏற்பது என்பது எனக்கு தெரியாது என்று அவரிடம் கூறி தலைவரின் இந்திய தொலைபேசி இலக்கத்தை தருமாறு கேட்டு பெற்றுக் கொண்டேன்.
அது றோமிங் இலக்கமாக இருந்தது. அவ்விலகத்தின் ஊடாக தலைவரை தொடர்பு கொண்டேன் ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.
அன்று 11மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு சென்று பதவியேற்றபோதுதான் உற்பத்திவள ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொண்டேன். அன்றே எனது ஒன்று விட்ட சகோதரரும், முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளாரும் அரசியலில் என் ஆலோசகருமான அஹமட்லெவ்வை மரணித்த செய்தியை அறிந்து மட்டக்களப்புக்கு சென்று விட்டேன்.
பின்னர் கொழும்பு விரைந்து நாடு திரும்பியிருந்த தலைவரை சந்தித்து நடந்தவற்றை விளக்கி கூறினேன்.
அப்போது தலைமைத்துவத்திற்கு சொல்லாமல் இந்நியமனம் செய்யப்பட்டிருப்பது கவலைக்குரியது என்ற கவனக்குறிப்பை என்னிடம் பதிவு செய்த தலைவரிடம் நாட்டிலும் கட்சியிலும் என்பற்றிய தவறுதலான அனுமானங்கள் உருவாகியிருப்பதை உணர்கின்றேன் இந்நிலைமையை நீங்களே தெளிவுபடுத்தி நிவர்த்தி செய்ய வேண்டுமென விணயமாக வேண்டினேன்.இதனை உள்வாங்கிக் கொண்ட அவர் என்னை உபசரித்து அனுப்பினார்.
பின்னர் நான் முன்பு கூறிய அதியுயர் பீட கூட்டத்தில் தெளிவு பிறந்தது. பலமுறை பிரிவினைக்கு முகம் கொடுத்த அனுபவத்தை கொண்டுள்ள நமது தலைவர் எனது நியமனம் சம்பந்தமாக சந்தேகம் கொள்ள நியாயம் இருக்கின்றது.
இன்று கட்சியில் இருக்கும் இதே அனுபவத்தை கொண்ட எவராக இருந்தாலும் இச்சந்தேகத்திற்கு ஆட்பட வாய்ப்பு இருக்கவே செய்தது. தலைவரை சந்தித்து பேசியதன் பின்பும் அதியுயர் பீடத்தில் எனதுரையின் பின்பும் அந்த சந்தேகம் நீங்கியுள்ளது.
ஒரு பிரச்சினையும் பிரிவினையுமில்லாமல் முஸ்லிம் காங்கிரசுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு கிடைத்து விட்டது பசீரும் ஒரு சில எம்.பி.மாரை பிரித்துக் கொண்டு சென்றிருக்கலாமே என்று நினைப்பவர்களும் இருக்கக்கூடும்.
இந்த கட்சியின் தலைவர் றஊப் ஹக்கீமுக்கும் அரசியல் அதியுயர் பீடத்திற்கும் இலங்கையிலுள்ள இலட்சக்கணக்கான முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளுக்கும் நான் என்றும் வழமை போல் இந்தக் கட்சியின் பாதுகாப்பு அரணாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன்.
காட்டிக் கொடுத்து – கட்சியை உடைத்து அமைச்சர் பதவி பெறவில்லை!
காட்டிக் கொடுத்து கட்சியை உடைத்து தலைமைத்துவத்திற்கு ஊறு விளைவித்து அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சராக வரவேண்டுமென்றிருந்தால் எப்போதோ வந்திருக்கலாம். நான் அப்படி செய்திருக்கவில்லை.
எனது அரசியல் வரலாறு ஈரோஸ் அமைப்பில் ஆரம்பித்தாலும் எனது முழு அரசியல் வீச்சு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம்தான் வெளிப்பட்டது. அதற்காக பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களுக்கும் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது 1994ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டேன். முஸ்லிம் காங்கிரசில் உறுப்பினராக இருந்து பாராளுமன்ற உறுப்பினரானவர்கள் உள்ளனர். முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வேறுகட்சிக்கு தாவியவர்கள் இருக்கின்றனர்.
ஆனால் ஒரு சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து முஸ்லிம் காங்கிரசில் உறுப்புரிமையை பெற்றுக் கொண்ட ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியும் வரலாறும் இன்று வரை எனக்கு மட்டுமே உள்ளது.
அன்று மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் என்னை கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினராக்கி குறுகிய காலத்திற்குள் தேசிய கொள்கை பரப்புச் செயலாளாராகவும் நியமித்தார்.
மர்ஹும் தலைவர் அமைச்சரான போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான புனர்வாழ்வு இணைப்பதிகாரியாகவும் நியமித்தார்.
அக்காலத்தில் கட்சி எடுத்த பிரதான தீர்மானங்களின் போதெல்லாம் என்னை ஒரு அரசியல் ஆலோசகராக வைத்து கௌரவித்தார். நான் சொன்ன பெரும்பாலான ஆலோசனைகளை கவனத்தில் எடுத்து நிறைவேற்றி மதிப்பளித்தார்.
2000ம் ஆண்டு நிறுவுனர் தலைவரின் மரணத்தின் பின்பு முஸ்லிம்களின் தேசிய சொத்தான முஸ்லிம் காங்கிரசை பொறுப்பெடுத்த இன்றைய தலைவர் றஊப் ஹக்கீம் அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் நான் தோல்வியுற்ற போதிலும் என்னை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்.
2001ம் ஆண்டு பாராளுமன்றம் கலைந்து நடைபெற்ற தேர்தலின் பின்பும் தேசியப் பட்டியல் மூலம் உறுப்பினராக்கினார். அன்றைய தேசிய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் வீடமைப்பு பிரதியமைச்சராக்கினார்.
பின்னர் 2004ம் ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நடாத்தப்பட்ட தேர்தலில் வெறும் 800 வாக்குகளினால் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட என்னை மீண்டும் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்பினார்.
இதே ஆண்டு கட்சியின் தலைமைத்துவத்திற்கு அடுத்த பதவியான தவிசாளராகவுமாக்கி அழகு பார்த்தார். இன்று வரை அப்பதவியில் தொடர்கின்றேன்.
2007ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்த போது அமைச்சரவை அந்தஸ்தற்ற உள்ளுராட்சி அமைச்சராக சிபாரிசு செய்தார்.
2008ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தலில் வெற்றிபெற்ற என்னை கிழக்கு மாகாண சபையின் எதிர்க்ட்சித்தலைவராக்கினார்.
2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரதான வேட்பாளராக்கினார். இதன் மூலம் இத் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பை பெற்று பாராளுமன்றம் சென்றேன்.
கட்சி மீண்டும் 2010 நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசில் இணைந்த போது பிரதியமைச்சுப்பதவியையும் பெறுவதற்கு காரணமாக இருந்தார்.
இவ்வளவையும் எனக்கு செய்த இந்தக் கட்சியையும் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களையும் கைவிட்டு செல்லுமளவு அல்லது இன்னொரு பிரிவினையையோ தலைமைக்கு தலையிடியையோ ஏற்படுத்தும் அளவு நன்றி கெட்ட அரசியல்வாதியாக நான் செயல்படுவேன் என்று எவர் கருதுகின்றார்கள் என்று தேடிப்பார்க்கும் அவசியத்திலும் அவசரத்திலும் நான் இருக்கின்றேன்.
கட்சிக்கு கிடைத்திருக்கும் எனது இன்றைய பதவி நிலையை எனக்கு கிடைத்த பதவியுயர்வாக பிரச்சாரப்படுத்தி கட்சியை இக்கட்டுக்குள் மாட்டி மீண்டும் ஒரு பிரிவினையை தேடி அலைகிற கனவுக்காரார்களுக்கு இந்தக்கனவு என்றுமே நிறைவேறாது என்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment