Tuesday, February 5

வரலாற்றுப் பெருமைமிகு புத்தளம்




கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி நீர் கொழும்பு பாதையூடாக நேராக வந்தால் 116 வது கி.மீ. தூரத்தில் புத்தளம் கடல் நீரேரியைத் தொட்டவாறு காட்சி தரும் அழகான சிறிய நகரம் புத்தளம். கல்பிட்டி நகரையும் புத்தளம் நகரையும் இணைத்து 30 கி.மீ. நீண்டு கிடக்கும் புத்தளம் அல்லது கல்பிட்டிக் கடல்நீர் ஏரி புத்தளம் நகரை அண்மித்ததாகத்தான் தனது இறுதி எல்லையைப் பூர்த்தி செய்கிறது.

புத்தளம் நகரிற்கும், கல்பிட்டிக்கும் இன்னும் பல கிராமங்களுக்கும் உயிரோட்டமான அழகைத் தருவதில் இக்கடல் நீர் ஏரிக்கு முக்கிய பங்குண்டு. டச்சுக்காரர் காலத்தில் இந்த ஏரியைப் பயன்படுத்தித்தான் கல்பிட்டி, புத்தளம் நகர்களை இணைத்த கொழும்பு வரைக்குமான “டச்சுக் கால்வாய்” நீர்ப் போக்குவரத்து ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின் அரைவாசிக்கும் மேற்பட்ட காலம் வரை நடைபெற்றது. உள் நாட்டிற்குள் அமைந்த உலகின் மிகப் பெரிய நீர்ப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட முடியும். ஆங்கிலேயர் காலத்தின் பிற்பகுதியில் கொழும்பிலிருந்து கல்பிட்டி வரை தரைப்பாதை திறக்கப்பட்டதன் பின்னர்தான் இந்நீர்ப் போக்குவரத்து படிப்படியாக நிறுத்தப்பட்டது.

இரு நூறு வருடங்களுக்கு முன்னர் புத்தளம் நோக்கி கடல் ஏரியூடாக வந்த ஐரோப்பிய யாத்திரிகர்களில் சிலர் இரண்டு, மூன்று மைல்களுக்கு அப்பாலிருந்து பார்க்கும் போது தலை நிமிர்ந்து நிற்கும் உயர்ந்த மினாராக்கள் சிலவற்றைக் கொண்ட பள்ளிவாசல்களைக் கண்டதாகவும் அதை அண்மித்ததும் புத்தளத்தை வந்தடைந்துவிட்டதைத் தாம் அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் குறிப்பிட்ட அந்த வரலாற்று பூர்வமான பள்ளி (அல்லது தர்ஹா) இன்று இல்லை. ஆனால் அதே இடத்தை அதேவகையில் தூரத்திலிருந்து பார்க்கக்கூடிய பிரமாண்டமான பல கட்டிடக் கலையழகுடன் கூடிய புத்தளம் முஸ்லிம்களின் பெரிய பள்ளிவாசல் கம்பீரமாகத் தோற்றமளிக்கிறது. அது புத்தளம் நகரினதும் புத்தளம் பிரதேசத்தினதும் மாற்றமுடியாத ஒரு பெரிய அடையாளத்தைக் காட்சிப்படுத்தும் ஒரு வரலாற்றுச் சின்னமுமாகும். புத்தளம் பெரிய பள்ளிவாசல் தனக்குள் 600 வருடத்திற்கு மேற்பட்ட வரலாற்றை உள்ளடக்கியுள்ள ஒரு மகத்தான கட்டிடக் கலைச்சின்னம் என்பதை உணர்ந்திருப்பவர்கள் ஒரு சிலர் தான்.

‘புத்தளம்’ நகரின் பெயர் தான் மாவட்டத்தின் பெயருமாகும். புத்தளம் என்பது நகரையும் குறிக்கிறது மாவட்டத்தையும் குறிக்கிறது. சிலாபம், குருநாகல் நகரங்கள் பெற்றுக்கொள்ளாத பல முக்கியத்துவம் நவீன வரலாற்றில் புத்தளம் பெறக்கூடியதாக இருந்தது ஒரு பெரிய வரலாறு.

12ம் நூற்றாண்டின் பின்னர் மத்திய மலை நாட்டிலும் குருநாகல் இராச்சியத்திலும் ஏற்பட்ட பல மாற்றங்களுக்கும் குருநாகல் உட்பட மத்திய மலை நாட்டிற்குத் தேவையான கடல் வழிப்பாதை, துறைமுகம், பொருட்களைக் களஞ்சியப்படுத்தல், சிங்கள அரசர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் தேவையான ஆயுதங்கள், ஆடம்பரப் பொருட்கள், உணவுப்பதார்த்தங்கள், உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்தல், வெளி நாடுகளுக்கு அனுப்புதல், வெளிநாடுகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளுதல் ஆகிய பல தேவைகளை புத்தளமும் கல்பிட்டியும் தான் நிறைவேற்றின.

புத்தளம் உள்துறைமுகமாகச் செயற்பட்டது. கல்பிட்டி கிட்டத்தட்ட சர்வதேசத் துறைமுகமாக இருந்தது. இவற்றிற்கு சுமார் 20 , 30 மைல் தொலைவில் இரண்டாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த குதிரை மலைத் துறைமுகம் அமைந்துள்ளது. புத்தளம், கல்பிட்டி ஆகிய இரண்டும் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்திய இரு முக்கிய துறைமுகங்களாக சுமார் 2000 ஆண்டு வரலாற்றை உள்ளடக்கிய வரலாற்றுபூர்வமான நகரங்களாகும்.

இந்த இரு நகரங்களினதும் துறைமுக வர்த்தக நடவடிக்கைகளும், கடல் வாணிபத்திற்கான வசதியும், புவியியல் ரீதியான அமைவிடமும், கேந்திர முக்கியத்துவமும் வரலாற்றில் எப்போதுமே உரோமர், பாரசீகர், பீனிஷியர், சபாயியர், அரேபியர் போன்றோரையும் பின்னர் போர்த்துக்கேயரையும், டச்சுக்காரர்களையும், ஆங்கிலேயர்களையும் கவரத்தூண்டிய விடயங்களாக இருந்தன.

போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும் கல்பிட்டியையும் புத்தளத்தையும் கைப்பற்றித் தமது வர்த்தகத்தையும் அரசியல் இராணுவ நடவடிக்கைகளையும் பாதுகாத்தனர். கோட்டைகள் அமைத்தனர். இந்த வரலாறுகள் அனைத்தினதும் மற்றொரு சான்றாகத்தான் கல்பிட்டிக் கடல்நீரேரியைத் தொட்டவாறு கம்பீரமாகத் தோற்றமளிக்கும் டச்சுக்கோட்டை இன்றும் காட்சி தருகிறது.

கல்பிட்டி துறைமுகத்தையும் புத்தளம் துறைமுகத்தையும் கண்டி மன்னன் தனது இரு கண்களாகக் கருதினான். வரலாற்றுக் காலம் முழுக்க கண்டி, குருநாகல், அனுராதபுர இராச்சியத் தொடர்புகளும் வடமாநிலத் தொடர்புகளும், தமிழ் நாட்டுத் தொடர்புகளும் தொடர்ந்து இருந்து வந்தது. அதனால் புத்தளம் மாவட்டம் தமிழ் மொழிக்கும் தமிழர் தொடர்புக்கும் அதே போல் சிங்களவர்களின் அரசியல் பொருளாதார குடியேற்றத் தொடர்புகளுக்கும் தொடர்ந்து ஆளாகி வந்துள்ளதால் முஸ்லிம்களை உள்ளிட்ட மூவினமக்கள் தொடர்பும் உறவும் இஸ்லாம் சமயத்தோடு பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ சமயத் தொடர்புகளும் நீண்ட வரலாற்றைக் கொண்டதாக அமைந்துள்ளதுன. பரந்து கிடக்கும் பல முஸ்லிம் கிராமங்களோடு சங்கமிக்கும் தமிழ், கிறிஸ்தவ, சிங்களக்கிராமங்களும் புத்தளம் மாவட்டத்தின் ஆள்புலத்தொடர்பின் பல்பரிமாணங்கள் எனலாம்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இலங்கை முஸ்லிம் வரலாற்றை தன்னுள் அடக்கி இன்னும் சுறுசுறுப்பாக இயங்கும் கேந்திர நிலையங்களில் புத்தளமும் ஒன்று. கல்பிட்டித் துறைமுகம், குதிரைமலைத் துறைமுகம் கூறும் பாரசீகர், பீனிஷியர், அரேபியர் வரலாற்றிலிருந்து இங்கு வந்த வரலாற்றுத் தொடர்புகள் ஆரம்பமாகின்றன. 16ம் நூற்றாண்டிற்குப் பின்னர் கேரளத்துடனும், தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் வர்த்தகப் பெருமையுடன் வாழ்ந்த பகுதிகளுடனும் இத்தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

புத்தளம் என்ற பெயர் எப்போது பதிவாகியது என்பது சரியாகத் தெரியவில்லை ஆனால் 14ம் நூற்றாண்டில் இங்கு கால் பதித்த இப்னு பதூதா ‘பத்தாளா” என்று குறிப்பிட்டுள்ளார். ‘புத்தளம்’ என்றோ அதற்கு கிட்டிய மற்றொரு பெயரிலோ இது அழைக்கப்பட்டதற்கும் , அது ஒரு சுறுசுறுப்பான கடல் வணிக நகராக இருந்ததற்கும் முஸ்லிம் ‘சுல்தான்’ ஒருவர் அதை ஆட்சி செய்து கொண்டிருந்தான் என்பதற்கும் இபுனு பதூதாவின் ‘ரேஹ்லா’ வில் பல சான்றுகள் உள்ளன.

இன்று புத்தளம், கல்பிட்டி இரண்டும் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கடலோர நகரங்களாகவும், வர்த்தக நகரங்களாகவுமே தலைநிமிர்ந்து நிற்கின்றன. சிறிய, பெரிய அளவில் பலநூறு கிராமங்கள் ஒன்றிணைந்து கைத்தொழில், கல்வி, வர்த்தகம், மீன்பிடி, உப்பு உற்பத்தி, இறால் பண்ணை என்று பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு இந்த மாவட்டத்தின் வளர்ச்சியில் பங்கேற்றுவருகின்றன.

No comments:

Post a Comment