சண்டேலீடர் பத்திரிகையில் எழுதப்பட்ட புலனாய்வுக் கட்டுரையின் விளைவாகவே ஊடகவியலாளர் பெரஸ் சௌகத் அலி சுடப்பட்டுள்ளதாக, சண்டேலீடர் ஆசிரியர் சகுந்தலா பெரேரா தெரிவித்துள்ளார்.
சுடப்பட்ட சௌகத் அலி சண்டே லீடரில் புலனாய்வுச் செய்திகளை எழுதி வருபவர்
என்றும் அத்தகைய செய்திகளால் தான் அவர் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என்றும்
அவர் மேலும் கூறியுள்ளார்.
மூன்று மர்ம நபர்கள் அவரது வீட்டினுள் நுழைந்து துப்பாக்கியால்
சுட்டதில் கழுத்தில் படுகாயமடைந்த சௌகத் அலி களுபோவில மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு, பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அறுவைச் சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
செளகத் அலி தங்கிருந்த விருந்தினர் விடுதியின் அறையை உடைத்துக் கொண்டு
நுழைந்த, மூன்று அடையாளம் தெரியாத நபர்களே அவர் மீது துப்பாக்கிச்சூடு
நடத்தியுள்ளனர்.
சண்டே லீடரில் புலனாய்வுக் கட்டுரைகளை ஏழுதி வரும் 52 வயதான சௌகத்அலி,
இந்த வார இதழுக்கான கட்டுரை ஒன்று தொடர்பாக, சக நண்பருடன் தொலைபேசியில்
கலந்துரையாடிக் கொண்டிருக்கும் போதே, அவர் மீது துப்பாக்கிச்சூடு
நடத்தப்பட்டுள்ளது.
இவர் பிரித்தானிய மற்றும் சிறிலங்கா குடியுரிமை பெற்றவராவார்.
தன்னுடன் சௌகத் அலி உரையாடிக் கொண்டிருந்த போது, திடீரென தொலைபேசித்
தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், சிறிது நேரத்தின் பின்னர் தொலைபேசியில்
அழைத்த அவர், தன்னை மூன்று பேர் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும்
சண்டே லீடரில் பணியாற்றும் அவரது நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இரத்தம் தோய்ந்த நிலையில் சௌகத் அலி உதவி கோரி அழைத்ததாக அந்த
விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ஏனைய வெளிநாட்டவர்கள்
தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய குடியுரிமைபெற்ற சௌகத் அலி சுடப்பட்ட சம்பவம் தொடர்பாக, கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதரகம் கவலை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடந்து கொண்டிருப்பதால்,
எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று போலீஸ் பேச்சாளர்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment