Tuesday, February 26

இஸ்ரேல், அமெரிக்க கூட்டு தயாரிப்பில் நவீன ஏவுகணை சோதனை



 
இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து, எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி உள்ளன.

இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய தரைக்கடல் பகுதியில் எங்களுக்குச் சொந்தமாக உள்ள ஏவுதளத்திலிருந்து திங்கள்கிழமை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றிகரமாக அமைந்தது. அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஏவுகணை நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவான "ஆரோ 3' என்ற இந்த ஏவுகணை, தொலைதூர ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் திறன் கொண்டது. 


"ஹெட்ஸ்-3' என்ற மற்றொரு பெயர் கொண்ட இந்த வகை ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது இதுவே முதன்முறை. இது முதல்கட்ட சோதனைதான். இதை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு இந்த ஏவுகணை செயல்பாட்டுக்கு வரும்.

மற்ற நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருப்பது எங்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிரியான ஈரானை மனதில் கொண்டே இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment