Tuesday, February 26

இலங்கை முஸ்லிம்களுக்கு மியன்மார் (பர்மா) முஸ்லிம்களின் நிலையை உருவாக்க பொது பல சேனா முயற்சி -ஹமீட்


பௌத்த நாடான மியன்மாரிலிருந்து 'ரோஹிங்யா' இனத்தைச்சேர்ந்த முஸ்லிம்களை  கொலை நிர்க்கதிக்குள்ளாக்கி  அவர்கள் அகதி அந்தஸ்து கோரி பல நாடுகளுக்கு படை எடுத்துகொண்டிருப்பதுபோல் இலங்கை முஸ்லிம்களுக்கும் அவ்வாறானதொரு நிலைமையை தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
அண்மையில் காலியிலுள்ள ஹிரும்புர பள்ளிவாசல் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கண்டனம் தெரிவித்தும் அண்மைக்காலமாக முஸ்லிம் சிறுபான்மைக்கு எதிராக தீய சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுக்கொண்டிருக்கும் அநியாயங்களை கண்டித்தும் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த வருடம் அனுராதபுர பள்ளிவாசலோடு ஆரம்பித்த தாக்குதல்கள் இன்னும் தொடர்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற பலவிதமான துவேஷ  முன்னெடுப்புக்கள் ஒரு பாரிய சதித்திட்டத்தின் அங்கங்களாகவே அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

அனுராதபுர, தம்புள்ள பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் தெஹிவளை மத்ரஸா மீதான தாக்குதல்கள் தொடர்ந்தபோதும் முஸ்லிம்களின் பொறுமை காரணமாகவும் முஸ்லிம் தலைமைத்துவங்களின் நிதானம் காரணமாகவும் அவை ஒரு இனக்கலவரமாக மாறவில்லை.

 இதனால் ஏமாற்றமடைந்த இத்தீய சக்திகள் இரு சமூகங்களையும் மோத விடுவதற்கு தேடிய ஒரு துரும்புச்சீட்டே  ஹலால் சான்றிதழ் விவகாரமாகும். ஆனால் அதுவும் ஒரு இனக்கலவரத்தை தோற்றுவித்து தமது இலக்கை அடைவதற்கு போதுமானதாக இதுவரை காணப்படாமையினால் முஸ்லிம்பெண்கள் அணிகின்ற  புர்கா ஆடை,பெருநாள் தினத்தன்று கொடுக்கின்ற குர்பான் இறைச்சி விவகாரம், மக்காவுக்கு ஹஜ்ஜுக்குச்செல்லுதல்  என   புதிய புதிய புரளிகளை கிளப்பிக்கொண்டிருப்பதோடு பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களையும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களின் நோக்கம் 1983ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம் போன்ற ஒன்றை மீண்டும் தோற்றவிப்பதாகும்.
இவர்களின் பின்னனி தொடர்பில் ஊடகங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளன.  அண்மையில் ஒரு ஆங்கில நாளேடு இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொஸாடின் பின்னணி இதற்கு இருப்பதாக தெரிவித்துள்ளது.

பௌத்த நாடான மியன்மார் (முன்னாள் பர்மா) இலிருந்து 'ரோஹிங்யா ' இனத்தைச்சேர்ந்த முஸ்லிம்களை  கொலை செய்து மேலும் பல துன்புறுத்தல்களையும் கொடுத்து இன்று அவர்கள் அகதி அந்தஸ்து கோரி பல நாடுகளுக்கு படை எடுத்துகொண்டிருப்பது போல் இலங்கை முஸ்லிம்களுக்கும் அவ்வாறானதொரு நிலைமையை தோற்றுவிப்பது இவர்களின் நோக்கமா? அவ்வாறாயின்  இஸ்ரேலிய மொஸாட்டுடன் சேர்த்து செயற்படும் இவர்களது  பின்னனி என்ன? என்ற ஒரு கேள்வி எழுகின்றது.

மறுபுறத்தில் பொதுபலசேனவின்  அலுவலகத்திற்கு  நோர்வே துதுவர் சென்றதாகவும்  தூதுவராலயத்தைச்சேர்ந்த அங்கத்தவர்கள் நோர்வேக்கு அண்மையில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி பணப்பரிமாற்றங்கள் செய்திருப்பதாகவும்  சில  பத்திரிகைச்செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறாயின் மார்ச் மாதம் நடைபெற இருக்கின்ற ஜெனீவா கூட்டத்தை இலக்கு வைத்து மேற்கத்தேய பின்னனியில் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றனவா? என்ற கேள்வியும் எழுகின்றது. அதேநேரம் முஸ்லிம்களுக்கு எதிரான இப்பிரச்சாரம் முளையிலே கிள்ளி எறியப்படாதது ஒரு பாரிய தவறாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.
மறுபுறத்தில் மஸ்லிம் தலைமைத்துவங்கள் இவ்விடயத்தில் மௌனம் சாதிப்பதாகவும் போதுமான பங்களிப்பு செய்யாமல் இருப்பதாக பத்திரிகைகளில் அவ்வப்போது வெளிவருகின்ற கட்டுரைகளிலும் செய்திகளிலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அண்மையில் ஹலால் விடயம் தொடர்பாக சகல முஸ்லிம் அமைச்சர்களும் அமைச்சரவையில்  ஒருமித்து குரல்கொடுத்ததும் அதனைத்தொடர்ந்து அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டு அது இவ்விடயத்தை கையாண்டு கொண்டிருப்பதும் யாவரும் அறிந்ததே.

ஆயினும் இவ்வமைச்சர்கள் மௌனமாக இருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கான காரணம் அவர்கள் அடிக்கடி ஆக்ரோச அறிக்கையினை விடாமலிருப்பதாகும். எப்பொழுது எதனைச்செய்ய வேண்டும் என்பதில் முஸ்லிம் தலைமைத்துவங்களின் தெளிவும் இந்த நாட்டு முஸ்லிம்களைப்பாதுகாப்பதற்கு மிகவும் அவசியமானதாகும்.

அந்தவகையில்தான் இன்று ஒரு இன மோதலை உருவாக்க   தீய சக்திகள் விளைந்துகொண்டிருக்கின்ற வேளையில் அவற்றிற்கு எண்ணெய் ஊற்றிவிடாமல் அரச மட்டத்துடன் பேசுவதன் மூலம் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணலாம் என்று அத்தலைமைத்துவங்கள் நிதானமாக செயற்படுகின்றன. இறைவனின் உதவியினால் இன்றுவரை ஒரு இனமோதல் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு நாம் இறைவனுக்கு நன்றி கூற வேண்டும். அதேநேரம் நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லுமாயின் முஸ்லிம் தலைமைத்துவங்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டி வரலாம்.
அதேநேரம்இ நாம் வெளியில் பேசுவதைவிட நிதானமாகவும் நேர்மையாகவும் சிந்திக்கின்ற சிங்கள தலைமைத்துவங்கள் இவ்விடயத்தில் வெளியில்வந்து பேச வேண்டும் என்பதற்காக நாம் சில முயற்சிகளை எடுத்தோம். குறிப்பாக இடதுசாரித்தலைவர்களை நாம் இவ்விடயத்தில் அணுகியிருந்தோம்.

துரதிஸ்டவசமாக தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் முதல் இன்று வரை ஒரு வருடம் கழிந்திருக்கின்ற நிலையில் இப்பொழுதுதான் எதிர்க்கட்சித்தலைவர் வாய் திறந்திருக்கின்றார். எதிர்க்கட்சித் தலைவர் தம்புள்ள விவகாரம் ஆரம்பித்தபொழுது வாய் திறந்திருந்தால் நிலைமை இந்தளவு தூரம் செல்லாமல் இருந்திருக்கலாம்.
ஏனெனில் முஸ்லிம் தலைமைத்துவங்கள் இவ்விடயத்தில் அதிகம் பேசுகின்றபொழுது இத்தீய சக்திகள் அதனை பெரும்பான்மை சமூகத்திற்கு எதிரான பேச்சுக்களாக சித்தரித்து  நிலைமையை மேலும் மோசமாக்கலாம். மாறாக எதிர்க்கட்சித் தலைவர் போன்ற ஒருவர் பேசுகின்றபொழுது அது சாதகமான விளைவுகளைக் கொண்டுவரும்.
ஆனால் இப்பொழுதுதான் முதற்தடவையாக வாய் திறந்துவிட்டு தம்புள்ளை தொடக்கம் இன்றுவரை தானே பேசியதுபோன்று காட்ட முற்படுகின்றார். இருப்பினும் இத்தருணத்திலாவது அவர் வாய் திறந்ததற்கு நாம் முஸ்லிம்கள் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம். அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் ஹலால் சான்றிதழ் விவகாரத்தை ஒரு அரச நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறியிருக்கின்றார். ஒரு அரச நிறுவனம் எந்த தரச் சான்றிதழை வேண்டுமானாலும் வழங்கலாம். ஆனால் ஹலால் சான்றிதழை வழங்க முடியாது. ஏனெனில் ஹலால் என்பது ஈமானோடு சம்மந்தப்பட்ட விடயமாகும். அதனை ஒரு முஸ்லிம் ஸ்தாபனம் மாத்திரமே வழங்க முடியும்.
எனவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடமிருந்து ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை வேறு ஒரு அரச நிறுவனத்திடம் கொடுப்பதைவிட ஹலால் சான்றிதழ் வழங்குவதை நிறுத்துவது சிறந்ததாகும். ஏனெனில் ஹலால் சான்றிதழ்  இலட்சினை  பொறித்ததற்காக அதனை ஹலால் என்று சொல்லிவிட முடியாது. எனவே ஹலால் என்ற பெயரில் ஹராத்தை உண்பதை விட ஹலால் என்ற பெயரே உணவுப்பண்டங்களில் பொறிக்கப்படாவிட்டால் முஸ்லிம்கள் எவ்வாறு இந்த ஹலால் சான்றிதழ்  அறிமுகத்திற்கு  முன்னர் ஹலால் உணவைத் தேடி உண்டார்களோ அதே வழியில் அவர்கள் தேடிக்கொள்வார்கள்.

எனவே  முஸ்லிம்களுக்குரிய ஹலால் உணவை வேறு ஸ்தாபனங்கள்  பிரதியீடு செய்து ஹலால் என்ற பெயரில் விற்பனை செய்வதை முஸ்லிம்கள் நம்பவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்பதை உறுதிப்பட கூறிக்கொள்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment