Tuesday, February 26

பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்கள் 3 ஆம் திகதி நோன்பு நோற்க தீர்மானம்




 
இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மார்க்க மற்றும் அரசியல் விழுமியங்களைக் குறி வைத்து தற்போது ஏற்பட்டிருக்கும் பல்வேறு அச்சுறுத்தல்களில் இருந்தும் இறைவழியில் மீட்சி பெறுவதற்காக அல்லாஹ்வின் உதவியையும் கருணையையும் வேண்டி எதிர்வரும் மார்ச் 03ம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று பிரித்தானியாவில் வாழும் முஸ்லிம்கள் நோன்பு நோற்பதற்கும் அன்றைய இப்தார் வேளை வரைக்குமான ஒரு முழுநாள் கலந்துரையாடலை நடாத்துவதற்கும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு (SLMDI UK) விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்த முழுநாள் நிகழ்வானது எதிர்வரும் 03-03-2013 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஸகர் நேரம் (3:30) முதல் இஷா வக்து வரை பிரித்தானியாவிலுள்ள Cherry Lane,Crawley RH11 7NX  எனும் விலாசத்தில் நடைபெறும்.
 

இம்முழுநாள் அமர்வில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பள்ளிவாசல்கள்மீதான தாக்குதல்கள் முஸ்லிம் பிரதேச நிலங்களில் இடம்பெறும் பலவந்தக் குடியேற்றங்கள் வியாபார ஸ்தலங்களைக் குறி வைத்து இடம்பெறும் எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பர்தா மற்றும் ஹலால் சான்றிதழ் விவகாரம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாகவும் பிரித்தானியாவிலும் இலங்கை இந்தியா  மற்றும் நாடுகளிலும் வாழுகின்ற மார்க்க அறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் நேரடியாக ஒலி ஒளிபரப்புவதற்குமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விசேட நோன்பு நோற்கும் முழுநாள் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் பிரித்தானியாவிலுள்ள முஸ்லிம் சகோதரர்கள் எதிர்வரும் 01ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 05:00 மணிக்கு முன்பாக தங்களின் பெயர்களை நேரடியாகவும், எமது அமைப்பின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவித்து பதிவு செய்து கொள்ளுமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கிறோம். 

இந்நிகழ்வில் நேரில் கலந்து கொள்ள முடியாத பிரித்தானியாவின் தூரப் பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் சகோதர சகோதரிகளும் அன்றைய தினத்தில் நமது தாயக முஸ்லிம் சமூகத்தின் நிம்மதியான இருப்புக்காக தத்தமது வதிவிடங்களில் இருந்தவாறே நோன்பு நோற்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

No comments:

Post a Comment