Tuesday, February 26

அமெரிக்க எச்சரிக்கையை மீறி ஈரானுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம்




 
ஈரான் நாட்டில் இருந்து குழாய் வழியாக பாகிஸ்தானுக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெயை கொண்டு வந்து சுத்திகரித்து விற்பனை செய்ய கடந்த ஆண்டு பாகிஸ்தான் அரசு முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கு அதிருப்தி தெரிவித்த அமெரிக்கா, பாகிஸ்தான் வேறு ஏதாவது ஒரு நாட்டில் இருந்து பெட்ரோலிய பொருட்களை வாங்கி தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம் என யோசனை தெரிவித்திருந்தது.

அமெரிக்காவுடன் அணு ஆயுதப் போட்டியில் ஈரான் இறங்கியுள்ளதால் இந்த திட்டத்தின் மூலம் ஈரான் வளமடைவதை அமெரிக்கா விரும்பவில்லை. எனவே தான் இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா தடுக்க முயல்கிறது என சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் யூகம் தெரிவித்தனர்.
 

இந்நிலையில், பாகிஸ்தான்-ஈரான் நாடுகளுக்கிடையே புதிய கேஸ் பைப் லைன் ஒப்பந்தம் இந்த வாரத்தில் உறுதி செய்யப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி 2 நாள் பயணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) ஈரான் செல்கிறார் என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி தெரிவித்தார்.

அமெரிக்காவின் அறிவுறுத்தலையும் மீறி செய்யப்படும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை பாகிஸ்தானுக்கு ஈரான் கடனாக வழங்கும். இந்த தொகையை கொண்டு ஈரான் நாட்டு எல்லைக்குள் செல்லும் குழாய்களை பாகிஸ்தான் அரசு பதிக்கும்.

4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் பகுதியில் நவீன சுத்திகரிப்பு நிலையம் நிர்மாணிக்கப்படும். இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றுக்கு 4 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் சமையல் எரிவாயுவாக சுத்திகரிக்கப்படும்.

நிர்மாண பணிகள் நிறைவடைந்த பின்னர் 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பாகிஸ்தானுக்கு ஈரான் எரிவாயுவை சப்ளை செய்ய துவங்கும்.

No comments:

Post a Comment