Tuesday, February 5

பௌத்த கடும்போக்காளர்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்!

2ஹலால் சான்றிதழை பெறுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வற்புறுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தெரிவித்தார்.உற்பத்தியாளர்களின் வேண்டுகோளின் காரணமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் தொண்டர் அடிப்படையிலே ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவை இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டார்.
“இந்த நடவடிக்கையினால் பாரிய வருமானம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கு கிடைக்கின்றது. இது ஜிஹாத் இயக்கங்களுக்கு வழங்கப்படுகின்றன என தெரிவிக்கப்படுகின்றது. இது முற்றிலும் பொய்யாகும்” என சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக் காலமாக பௌத்த தீவிரப் போக்குடைய அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“ஹலால் சான்றிதழை பெறுகின்றமையினால் உற்பத்தியாளர்களுக்கே நன்மை. ஏனெனில் முஸ்லிம் நாடுகளில் இந்த ஹலால் சான்றிதழ் பெற்ற உற்பத்தி பொருட்களுக்கு அதிக கிராக்கி காணப்படுகின்றது. இந்த நாட்டில் மீண்டும் ஒரு ஜூலைக் கலவரம் ஏற்பட நாம் இடமளிக்கக் கூடாது. ஜூலைக் கலவரத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நாம் நன்கு அறிந்திருக்கிறோம்.
ஹலால் சான்றிதழ் உள்ளிட்ட பல விடயங்களின் ஊடாக ஜுலை கலவரம் போன்ற கலவரமொன்றை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு சமூகத் தலைமைகளும் அரசியல்வாதிகளும் ஊடகங்களும் இடமளிக்கக்கூடாது. இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு வெளிநாட்டு சக்திகளின் பின்புலம் உண்டு. இந்த பின்புலத்தினை நாம் கண்டறிய வேண்டும்.
1000 வருடங்களின் பின்னரும் இலங்கை முஸ்லிம்களின் சனத்தொகை  9 சதவீதமாகவே காணப்படும். எனினும் அறிக்கைகள் மூலம் வெளியிடப்படும் அனைத்து தகவல்களும் அனைத்து பொய்யாகும். இந்த நாட்டை கைப்பற்றும் எண்ணம் முஸ்லிம்களுக்கு ஒருபோதுமில்லை.
இதனாலேயே கற்றுக்கொண்ட பாடங்கள் மறம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் சாதகங்களை கவனத்திற் கொள்ளமாலேயே ஜெனீவா சென்றனர். இது நாட்டின் மீது காணப்பட்ட பற்றின் காரணமாகவாகும்” என்றார்.
இங்கு உரையாற்றிய முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவர் என்.எம்.அமீன்,
“நாட்டுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கின்றன. ஜெனீவாவில் அடுத்தமாதம் இலங்கை தொடர்பான பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இந்த நிலையில் நாட்டில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரத்தை தோற்றுவித்து அதன்மூலம் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் முயற்சி செய்கின்றன.
இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் கலங்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இலாபம் தேட தீய சக்திகள் முனைகின்றன.  அவர்கள் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மோதலை ஏற்படுத்தி வேடிக்கை பார்க்க முயற்சிக்கின்றன. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஜிஹாத் போராட்டத்தை நடத்த முனைவதாக பொய்யான ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். நாம் ஜிஹாத் செய்ய வேண்டிய எந்தத் தேவையும் இந்த நாட்டில் கிடையாது. இந்த நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னரும் சுதந்திரம் கிடைத்த பின்னரும் முஸ்லிம்கள் மிகவும் விசுவாசமாகவே வாழ்ந்து வந்துள்ளார்கள்” என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,
“முஸ்லிம்களாகிய நாம் இலங்கையர்களாக இருப்பதையிட்டு பெருமைப்படுகிறோம். இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களோடும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழ்ந்து வருகிறோம். அவ்வாறே தொடர்ந்தும் வாழ விரும்புகிறோம்.
ஆனால் இன்று சில வெளிநாட்டு சக்திகள் ஒரு சிறு குழுவினருக்கு நிதியுதவியளித்து அவர்கள் மூலமாக பிரச்சினைகளை தோற்றுவிக்க முனைகின்றனர். இந்த குழுவினர் அண்மையில் நேர்வேயிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் ஏன் அங்கு விஜயம் செய்தனர் என்பது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போர் முடிவுக்கு வந்த பின் நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கம் முயன்று கொண்டிருக்கையில் மீண்டும் நாட்டை படுகுழியில் தள்ள வேண்டும் என சிலர் விரும்புகின்றனர். இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது” என்றார்-றிப்தி அலி:தமிழ் மிரர்

No comments:

Post a Comment