Thursday, February 21

முஸ்லிம் நாடுகளுக்கு முஸ்லிம்களை தூதுவராக அனுப்ப முடியாது: ஞானசார தேரர்





சவூதி அரேபியாவிற்கு தமிழர் ஒருவரையே அரசாங்கம் தூதுவராக அனுப்ப வேண்டும். இதனை உலமா சபையோ ஏனைய அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளோ எதிர்க்குமேயானால் கடுமையான எதிர் நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட தரப்புகள் சந்திக்க நேரிடும் என்று பொது பலசேனா தெரிவித்துள்ளது.
ஈரானில் புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டால் இலங்கையிலும் ஈரான் தூதரகத்தினால் உள்நாட்டு பாடசாலைகள் மற்றும் பொது நூலகங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் இஸ்லாம் அடிப்படை வாத புத்தகங்களும் தடைவிதிக்க நேரிடும் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு -7 துன்முல்ல சந்தியில் அமைந்துள்ள பொது பலசேனா தலைமையலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விஷேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடவத்தே ஞானசார தேரர் கூறுகையில்;
முஸ்லிம் நாடுகளுக்கு முஸ்லிம்களை தூதுவராக அனுப்ப வேண்டும் என்று உலமா சபை உட்பட பல முஸ்லிம் அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதுவொரு பெளத்த நாடு.உலகத்தில் வேறு எங்கும் இல்லாத மத உரிமைகள் இலங்கையில் ஏனைய மதத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சவூதி போன்ற முஸ்லிம் நாடுகளில் மிகவும் அடிப்படைவாத முறைமையே காணப்படுகின்றது.


எந்த நாட்டிற்கு எந்தத் தூதுவரை அனுப்ப வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது அரசின் பொறுப்பு. தமிழர் ஒருவரை சவூதிக்கு அனுப்ப வேண்டாம் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. தற்போது அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்டுள்ள சவூதிக்கான தமிழ் தூதுவர் சிறந்த இராஜதந்திரியாவார். இவரை நியமிப்பதால் என்ன பிரச்சினை?
எனவே, முஸ்லிம் நாடுகளுக்கு இந்து, கிறிஸ்தவ அல்லது பெளத்த மதத்தைச் சார்ந்த ஒருவரை தூதுவராக அரசு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பிட்ட சில முஸ்லிம் அமைப்புக்கள் மிகவும் மோசமான அடிப்படை வாதத்தை நோக்கி நாட்டை நகர்த்துகின்றன.
பி.பி.சி.ஊடகவியலாளரை பொது பல சேனா அமைப்பினர் தாக்கியதாகக் கூறியபோது குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டுள்ளது. உண்மையில் முஸ்லிம் இனத்தவர் ஒருவர் பொது பலசேனாவின் கூட்டத்தை தவறாக மொழிப்பெயர்ப்பு செய்தது. அதனை மையமாக வைத்து நேரடி ஒளிபரப்பு செய்ததுமே பிரச்சினைக்கு காரணமாக அமைந்தது எனக்கூறினார்.

No comments:

Post a Comment