Friday, February 8

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் குறுகிய பார்வை அகற்றப்பட வேண்டும்!

hakeem

-நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்-
இஸ்லாம் பற்றிய அச்ச உணர்வு மேலோங்கி இருப்பதுவே நாட்டின் பெரும்பான்மை சமூகத்தவரில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான குழுவினர் முஸ்லிம் வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான மூல காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், வீணான சந்தேகங்கள் களையப்பட வேண்டுமென்றும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக நோக்கும் குறுகிய பார்வை அகற்றப்பட வேண்டுமென்றும் கூறினார்.
ஜேர்மன் சமஷ்டி குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி ஜார்ஜன் மொர்ஹார்ட், நீதியமைச்சர் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நீதியமைச்சில் வியாழக்கிழமை (07) முற்பகல் இடம்பெற்ற போது, தூதுவர் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கும் போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

அண்மையில் இலங்கை வந்துள்ள தூதுவர் அமைச்சரை சந்தித்து முதற் தடவையாகக் கலந்துரையாடினார். ஒரு மணி நேரம் நீடித்த பரஸ்பர கலந்துரையாடலின் போது ஜேர்மனியத் தூதுவர் மிகவும் ஆர்வத்துடன் கேள்விகள் சிலவற்றை தொடுத்தார். நாட்டில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் நீணடகாலமாக நிலவி வருகிறதா என அவர் அமைச்சரிடம் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் இவ்வாறான முஸ்லிம் எதிர்ப்பு போக்கை பெரும்பான்மை சமூகத்தினரில் மிகச் சிறிய குழுவினர் அண்மைக் காலமாக முடுக்கி விட்டிருப்பதாகவும், அதன் பின்னணியில் விஷமச் சக்திகளின் உந்துதல் இருப்பதாக மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் கூறினார்.
ஹலால் சான்றிதழ், முஸ்லிம் பெண்கள் சமய ரீதியாகவும், தனித்துவமாகவும் அணியும் ஹிஜாப், பர்தா ஆடைகள், வர்த்தகப் போட்டி என்பவற்றை முன்னிலைப்படுத்தி முஸ்லிம்கள் மீதான வெறுப்பு வெகு சிலர் மத்தியில் காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் முஸ்லிம்களை பாரம்பரிய முஸ்லிம்கள் என்றும், தீவிரவாத – அடிப்படைவாத முஸ்லிம்கள் என்றும் வேறுபடுத்தி நோக்கும் மனப்பான்மை சிலர் மத்தியில் அண்மைக் காலமாக வெளிப்படையாகவே காணப்படுவதை நிகழ்கால துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் தெளிவாக உணர்த்துவதாகவும் கூறினார். ஆனால் பெரும்பான்மை சிங்கள மக்கள் பொதுவாக முஸ்லிம்களுடன் மிகவும் நட்புறவோடு அன்னியோன்யமாக பழகி வருவதோடு இன நல்லுறவை வளர்த்துவருவதாகவும் அமைச்சர் சொன்னார்.
நாட்டின் வடகிழக்கு பிரதேசங்களுக்கு தாம் சென்று வந்துள்ளதாக குறிப்பிட்ட தூதுவர் அப்பகுதிகளின் இயற்கை எழிலை தாம் நன்கு ரசித்ததாகவும், நாட்டில் தற்போது காணப்படும் சுமூக நிலை பற்றி மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். பெரும்பான்மை மக்களிடமும், சிறுபான்மை தமிழ் முஸ்லிம் மக்களிடமும் காணப்படும் இன ரீதியிலான புரிந்துணர்வு பற்றி தெரிவித்த தூதுவர் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து, பின்னர் மீள்குடியேறிய மக்களின் உள்ளக கட்டமைப்பு வசதிகள், வாழ்வாதாரங்கள் பற்றியும் அறிந்து கொள்ள விரும்பினார்.
மன்னார் கோந்தப்பிட்டி தமிழ், முஸ்லிம் மீனவர் மத்தியில் ஏற்பட்ட பிரச்சினையின் பின்னணியை அமைச்சர் ஹக்கீம் தூதுவரிடம் விளக்கிக் கூறினார். இவ்வாறான பிரச்சினைகளை சுமூகமாக கலந்துரையாடி தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட சமூகத்தவரினதும் சமயப் பெரியார்களினதும், அரசியல்வாதிகளினதும் பங்களிப்பு இன்றியமையாதது என அமைச்சர் கூறினார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் பரஸ்பர புரிந்துணர்வைப் பற்றி தெரிவித்த அமைச்சர் ஹக்கீம், நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தலைத் தொடர்;ந்து ஓரளவு மனக்கசப்பு ஏற்பட்ட போதிலும், தங்களுக்கு இடையிலான நல்லெண்ணம் எந்த விதத்திலும் பாதிக்கப்படமாட்டாது நம்பிக்கை தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்களின் அதிகபட்ச ஆணையைப்பெற்றுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தாம் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் எப்பொழுதும் வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.
வடகிழக்கு பிரதேசங்களில் நீதிமன்றங்கள் தமிழ் மொழியில் இயங்கி வருவதாகவும் அங்கு தமிழ் பேசும் நீதிபதிகளையும் ஏனைய அதிகாரிகளையும், ஊழியர்களையும் நியமிப்பது தொடர்பில் நீதியமைச்சு, நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு நல்கி வருவதாகவும் சொன்னார்.
இணக்க சபைகளின் ஊடாக நீதிமன்றங்களுக்கு வெளியே பிணக்குகளை சுமூகமாக தீர்க்கும் பொறிமுறை வடகிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அமைச்சர் ஹக்கீம் நிலபுலன்கள் தொடர்பான பிணக்குகளுக்கு இணக்க சபைகள் ஊடாக மத்தியஸ்தம் செய்து வைக்கும் நடைமுறையும் பெரிதும் பலனளிக்கும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.
ஜேர்மன் சமஷ்டி குடியரசு இலங்கைக்கு வழங்கி வரும் உதவித் திட்டங்களுக்கு அமைச்சர் தூதுவரிடம் நன்றி தெரிவித்தார். இலங்கையினுடனான நல்லுறவை ஜேர்மன் தொடர்ந்தும் பேணி வரும் என்று தூதுவர் கலாநிதி ஜார்ஜன் மொர்ஹார்ட் உறுதியளித்தார்.

No comments:

Post a Comment