Tuesday, February 26

தமது தீர்மானம் தொடர்பில் உலமா சபை செயலாளர் அளித்துள்ள விரிவான விளக்கம்






ஹலால் சான்றிதழ் பெற்ற பொருட்களை முஸ்லிம் சமூகத்தவருக்கு மாத்திரம் வரையறுத்துக் கொள்ளுமாறு கடந்த வாரம் சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்களை அகில இலங்கை ஜமியத்துல் உலமா வேண்டுகோள் விடுத்திருந்தை அறிவீர்கள்.
முஸ்லிம்கள் ஹலாலானவற்றை மாத்திரம் உண்ண வேண்டுமென்ற கட்டாய மார்க்கக் கட்டளையை பின்பற்றுவதற்கு அவர்களுக்கு துணை புரியும் நோக்கத்துடனேயே ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. அதில் இலாபம் பெறுவது உட்பட வேறு எந்த உள்நோக்கமும் கிடையவே கிடையாது என்றும் இடைவிடாது நாம் கூறி வரும் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.


இதை நிரூபிக்கும் ஒரு நடவடிக்கையாக 2012 மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவுற்ற ஜம்இய்யதுல் உலமா அமைப்பின் கடைசி நிதியாண்டின் வரவு - செலவு விபரத்தின் முக்கிய விடயங்களை பொது மக்கள் பரிசீலனைக்கு முன்வைக்க நாம் முடிவு செய்தோம். அதன்படி, மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் நமது அமைப்புடன் பதிவு பெற்றிருந்த 150 நிறுவனங்களுக்கு ஹலால் சான்றிதழ்களை வழங்குவதன் மூலம் நாம் பெற்ற மொத்த வருமானம் ரூ. 17,902,807.50 (பதினேழு மில்லியன், ஒன்பது இலட்சத்து, இரண்டாயிரத்து எண்ணூற்று ஏழு ரூபாய் ஐம்பது சதம்) ஆகும். ஹலால் சான்றிதழ் தொடர்பான செயற்பாடுகளுக்குரிய செலவினங்களுக்குப் பின் ரூ.2,669,420.80 (இரண்டு மில்லியன் ஆறு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்து நானூற்றி இருபது ரூபாய் எண்பது சதம்) இலாபமாக பெறப்பட்டதுடன் இத்தொகை நமது ஹலால் சான்றிதழ் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக செலவிடப்பட்டு வருகின்றது.
மேற்படி விபரங்களின் அடிப்படையில் ஹலால் சான்றிதழ் மூலம் பெறப்படும் பணம் தீயநோக்கங்களுக்காக செலவிடப்படுவதாக சிலரால் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை என்று திட்டவட்டமாக மறுக்கின்றோம். மாறாக, நம்மிடம் ஹலால் சான்றிதழைப் பெறுவதற்கு ஒப்பீட்டு அடிப்படையில் மிகச் சிறியதொரு கட்டணத்தையே செலுத்த வேண்டும். அதன் காரணமாகவும், (அதன் ஒழிவுமறைவற்ற முறைமை காரணமாகவும், நிறுவனங்கள் பெறக்கூடிய பொருளாதார நன்மை மிகவும் பாரியதாகும். மேலும் இச்சான்றிதழ் தமது உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்த மிக அவசியம் என்ற அடிப்படை உண்மைகளை உற்பத்தி நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. அதன் காரணமாக அவை தாமாகவே முன்வந்து ஹலால் சான்றிதழை பெறுகின்றன என்பதே உண்மையாகும்.
மேற்படி விடயங்களை நாம் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்தியும், எமது கணக்கு விபரங்களை உரிய அதிகாரிகள் வந்து பரிசீலனை செய்து உண்மையை அறியலாம் என்று நாம் அழைப்பு விடுத்தும் தவறான கருத்துக்களையும் அடிப்படையற்ற சந் ேதகங்களையும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி ஹலால் சான்றிதழ் விடயத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி மக்கள் மத்தியில், குறிப்பாக நட்புறவுடன் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில், குழப்பத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்ற நிலை எம்மை கவலை கொள்ளச் செய்துள்ளது.
மேலும், ஹலால் சான்றிதழ் செயற்பாடு சம்பந்தமாக ஏற்பட்ட சந்தேகங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டோர் முறையாக எம்மை அணுகி தெளிவுகளை கேட்டிருந்தால் அதற்கான சரியான விளக்கங்களை முன்வைக்க எமக்கும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கும் என்பதோடு நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அமைதியற்ற நிலையை தவிர்த்தும் இருக்கலாம். மேலும் சகலருக்கும் இணக்கப்பாடு ஏற்படும் விதத்தில் ஒரு பொறிமுறையையும் நாம் கலந்தாலோசித்து கண்டறிந்திருக்கலாம். ஆனால், துரதிஷ்டவசமாக இது போன்றதொரு முயற்சி அவர்களால் மேற்கொள்ளப் படவில்லை.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இலங்கை நாட்டில் 87 ஆண்டு காலமாக செயற்பட்டு வருகிறது. அதே சமயம் இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடன் முஸ்லிம்கள் நேசபாசத்தோடு வாழ்வதற்கான வழிகாட்டல்களை வழங்கி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டில் ஒற்றுமை மற்றும் அமைதி பாதுகாக்கப்படுவதை தன்னுடைய தலையாய பொறுப்புக்களில் ஒன்றாகக் கருதுகின்றது.
இவ்வடிப்படையில் இனங்களுக்கிடையே பிரிவினையை தோற்றுவிக்கும் விதத்தில் ஹலால் சான்றிதழ் தொடர்பாக தொடர்ந்தும் வாதப்பிரதி வாதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கோடு இந்தப் பிரச்சினைக்கு ஒரு மாற்று யோசனையை முன்வைக்க விரும்புகின்றது.
அதன்படி, ஹலால் சான்றிதழ் செயற்பாட்டை அரசாங்கமே பொறுப்பேற்று, அனைத்து சமூகங்களும் ஏற்கும் விதமான ஒரு பொறிமுறையை மேற்கொள்வதற்கு முன்வர வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஆலோசனை தெரிவிக்கின்றது. இதற்காக தற்சமயம் தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளின் ஹலால் சான்றிதழ் செயற்பாடுகளை இலங்கை அரசு முன்மாதிரிகளாகக் கொண்டு செயற்படலாம்.
நடைமுறையிலுள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையானது ஒரு வர்த்தக, இலாபமீட்டும் நோக்கில் அறிமுகப்படுத்தவில்லை என்பதையும் சமூகத்தின் நியாயமான ஒரு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு சேவையாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பதையும் எமது ஆலோசனை உறுதிப்படுத்துகின்றது.  -விடிவெள்ளி-

No comments:

Post a Comment