Tuesday, February 26

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டமும் சண்டையிட்ட தலைவரும், செயலாளரும்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற போது அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி மீது தலைவர் ரவூப் ஹக்கீம் காட்டமான சொற்பிரயோகங்களை பாவித்து கண்டித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடக் கூட்டம் அதன் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று சனிக்கிழமை மாலை ஐந்து மணியளவில் கட்சித் தலைவரான  ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக அரசினால் தொடர்ந்தும் மு.கா. புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்பில் ஆராயப்பட்டது.
அபிவிருத்தி விடயங்களில் மு.கா. மக்கள் பிரதிநிதிகள் ஓரங்கட்டப்படுவது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டதுடன் இது விடயத்தில் கட்சி தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
 
அத்துடன் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் நிந்தவூரில் தலைவர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றியும் அரசுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு எதிர்வரும் 6 ஆம் திகதி முடிவடைவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூராட்சி பிரதேசங்களில் DCC தலைவர்களாக மு.கா. எம்.பி.க்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும்
கல்முனையில் மேலதிக அரசாங்க அதிபர் காரியாலயம் திறக்கப்பட வேண்டும் என்றும்
இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு ஒரு மாதம் கால அவகாசம் வழங்குவதாகவும்
இக்காலப்பகுதிக்குள் இவை நிறைவேற்றப்படா விட்டால் மு.கா.வில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அரச பதவிகள் வகிக்கும் அனைவரும் ராஜினாமா செய்வது என்றும் அம்பாறை மாவட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்றும் ஹசன் அலி விபரித்துக் கொண்டு சென்றார்.
இதன்போதே தலைவர் ஹக்கீம் குறுக்கிட்டு ஹசன் அலி  மீது கடும் தோரணையில் விசனம் தெரிவித்து கண்டித்தார்.
எனது முன் அனுமதியைப் பெறாமல் அங்கு எடுக்கப்பட்ட தீர்மானக்கள் தொடர்பில் எனக்கு எந்த உடன்பாடும் இல்லை.
எனக்குத் தெரியாமல் திடீர் என்று இவ்வாறான தீர்மானங்களை ஹசன் அலி முன் மொழிந்தமை முட்டாள்தனமான நடவடிக்கையாகும்.
தலைமைத்துவத்துடன் கலந்து பேசாமல் தீர்மாங்களை முன்மொழிந்து என்னை சிக்கலுக்குள் மாட்டி விட்டீர்.
ஹசன் அலியே! வேண்டும் என்றா அப்படிச்செய்தீர்?
அம்பாறை மாவட்ட குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றி இங்கு கதைக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று தலைவர் ஹக்கீம் மிகவும் சூடாக கருத்துக்களை வெளியிட்டார்.
ஆம், வேண்டும் என்றுதான் நான் அப்படிச் செய்தேன். நான் அது பற்றி உங்களிடம் கேட்டிருந்தால் நீங்கள் அனுமதி தந்திருக்க மாட்டீர்கள். தடுத்திருப்பீர்கள் என்று பதில் அளித்தார் செயலாளர் ஹசன் அலி.
இதனைத் தொடர்ந்து தலைவர் ஹக்கீம் இன்னும் ஆத்திரப்பட்டார். ஹசன் அலியைக் கண்டித்தார்.
இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது. சூடான் வார்த்தைகள் பறந்தன. உயர்பீட உறுப்பினர்களும் சலசலத்தனர்.
தலைவரே! நமது கட்சிப் போராளிகளையும் நம்மை நம்பி வாக்களித்த மக்களையும் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. அதனால் நம்மை ஏமாற்றுகின்ற அரசாங்கத்தை சும்மா விட முடியாது. அதற்காகவே அரசுக்கு காலக்கெடு விதிக்கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தேன் என்றார் ஹசன் அலி.
உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால் அந்த இடத்திலேயே ஆட்சேபித்திருக்கலாம். தடுத்திருக்கலாம் என்றும் ஹசன் அலி கூறினார்.
கொதிப்பில் இருக்கின்ற அம்பாறை மாவட்ட போராளிகளுக்கு முன்னால் நான் எப்படி அதைத் தடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார் தலைவர் ஹக்கீம்.
அதன்போது பெரும் தர்ம சங்கடத்திற்கு மத்தியில் நான் பொறுமை காத்தேன் என்றும்  தலைவர் ஹக்கீம் கூறினார்.

No comments:

Post a Comment