முஸ்லீம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் 'வெறுக்கத்தக்க
நடவடிக்கைகள்' முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என சிறிலங்கா முஸ்லீம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இவ்வகையான நடவடிக்கைகளை நாட்டில் வாழும் சிங்கள – பௌத்த கடும்போக்காளர்கள்
முஸ்லீம்களுக்கு எதிராக ஈடுபடுவதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் எவ்வாறு இடம்பெறுகின்றன என்பதையும் நீதி
அமைச்சர் என்ற வகையில் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
அண்மையில், மகரகமவில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனத்தின்
முன்னர் நின்றவாறு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். கடந்த
ஏப்ரலில் தம்புள்ள புனித பிரதேசத்தில் உள்ள 60 ஆண்டுகால பள்ளிவாசல் ஒன்றை
அகற்ற வேண்டும் என அரசாங்கம் அறிவித்த போது அதனை எதிர்த்து முஸ்லீம்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் நாட்டில் நிலவிய குழப்பமான சூழ்நிலையை நீக்குவதற்கான
முயற்சியில் அரசியல் வேறுபாடுகள் எதுவுமின்றி அரசாங்கத்தில் அங்கம் வகித்த
அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் ஒரு குழுவாக செயற்பட்டனர். கடந்த 1000
ஆண்டுகளாக பௌத்தர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் நிலவும் அமைதியான
வரலாற்றுச் சுழ்நிலை மீண்டும் ஏற்படவேண்டும் எனவும், தற்போது
முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் 'வெறுக்கத்தக்க தாக்குதல்
சம்பவங்கள்' முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் என அமைச்சர் ஹக்கீம்
தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் வாழும் ஏனைய சிறுபான்மை மக்களுடன் ஒப்பிடும்போது முஸ்லீம்
மக்களின் வளர்ச்சி வீதமானது அதிக வளர்ச்சியைக் கொண்டிருந்ததாக
புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. சனத்தொகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையைக்
கொண்டுள்ள சிறுபான்மை முஸ்லீம் சமூகம் வளர்ச்சியடையும் போது தமக்கான
சுயாட்சியைக் கோருவார்கள் என சிங்கள பௌத்த தேசியவாதிகள் கருதினர். இதன் ஒரு
கட்டமாகவே முஸ்லீம்கள் நாட்டில் தலையெடுப்பதை தடுப்பதற்காக இவர்கள் மீது
பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதேபோன்று சுதந்திரமடைந்த பின்னர் மலையகத் தமிழ் மக்கள் தமக்கான
குடியுரிமையை இழந்ததுடன் நாட்டில் வாழ்ந்த தமிழ் சமூகமானது அரசால்
ஓரங்கட்டப்பட்டது. இவ்வாறு தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படவில்லை என்றால்
சிறிலங்கா அரச கொள்கைகளில் தமிழ் மக்களின் தேவைகளும்
உள்வாங்கப்பட்டிருக்கும்.
சிறிலங்காவில் பல பத்தாண்டுகளாக நிலவும் இனப் பிரச்சினை, யுத்தம், வன்முறை
போன்றன இன்னமும் கற்றறியப்படாத ஒரு பாடமாக உள்ளது. தமிழீழ விடுதலைப்
புலிகள் மீதான போர் வெற்றி கொள்ளப்பட்டதை கொண்டாடுவது என்பது ஒரு விடயம்.
யுத்தம் தொடரப்பட்டதற்கான உண்மையான காரணம் என்ன என்பதை சுயசோதனை செய்து
கொள்வது பிறிதொரு விடயமாகும்.
இன்று சிறிலங்காவில் வெறுப்பும் சந்தேகமும் மட்டுமே எஞ்சியுள்ளன.
எடுத்துக்காட்டாக, சிறிலங்காவில் நிலவும் இனப்பிரச்சினை என்பது இன்னமும்
தீர்க்கப்படவில்லை.
சிறிலங்காவில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் நாட்டில்
மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார மற்றும் பிராந்திய, பூகோள நிலைப்பாடு
தொடர்பில் பௌத்த சிங்களவர்கள் அதிகம் வாழும் சிறிலங்கர்கள் உண்மையில்
பெருமைபட்டிருக்கலாம்.
ஆனால் சிறிலங்காவில் வாழும் ஒட்டுமொத்த இனக்குழுமங்களின் பொருளாதார நிலை
சீர்குலைந்துள்ளது என்பதெ உண்மையாகும். நாட்டில் யுத்தம் முடிவுற்று
பொருளாதார வளர்ச்சி எட்டப்படுகின்றது எனில், சிறிலங்காவைச் சேர்ந்தவர்கள்
பணிப்பெண்களாகவும் சாரதிகளாகவும் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் செல்லவேண்டிய
தேவையில்லை.
அதாவது யுத்தம் முடிவுற்ற பின்னர் வெளிநாடுகளில் வாழும் சிறிலங்காவைச்
சேர்ந்த சகோதரிகளும் பெண்களும் மீண்டும் தமது சொந்த வீடுகளுக்கு
திரும்பிவருவது அதிகரிக்க வேண்டிய நிலையில் இன்றும் இவர்கள் வருவாயைத்
தேடிக்கொள்வதற்காக வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கக்
கூடாது.
எடுத்துக்காட்டாக, சிறிலங்கா சுதந்திரமடைந்ததன் பின்னர் நாட்டில் வாழும்
இனங்கள் சமமாக மதிக்கப்பட்டு அரசாங்க வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை.
பெரும்பான்மை சிங்கள மக்களே அதிகம் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றனர்.
அத்துடன் 'சிங்களம் மட்டும்' என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்
மூலம் சிறிலங்காவில் வாழும் ஏனைய இனங்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று
மேற்குலக தொழில் சந்தையில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்ற தமிழ் மக்கள்
தொழில் வாய்ப்பை அதிகம் பெற்றுள்ள நிலையில் சிறிலங்கா அரசாங்கம் தனது
நாட்டிலுள்ள அரசாங்க பணியாளர்களுக்கு ஆங்கிலத்தைக் கற்பிக்க வேண்டிய
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
சிறிலங்கர் என்கின்ற அடையாளத்திற்கு அப்பால் 'நாங்கள் முஸ்லீம்கள்' என்ற
உலக அடையாளத்தை அடைந்து கொள்வதையே சிறிலங்காவில் வாழும் முஸ்லீம் சமூகம்
அதிகம் விரும்புகிறது. தமிழ் மக்கள் உலக அரங்கில் தமிழர்கள் என்ற தனித்த
அடையாளத்தைப் பேணுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதைப் போல சிறிலங்காவில்
வாழும் முஸ்லீம்கள் தமக்கான பூகோள அடையாளத்தைப் பெற்றுக் கொள்ள
முடியவில்லை. இந்த முஸ்லீம் சமூகம் பூகோளமயமாக்கல் என்கின்ற நவீன
முறைக்குள் உள்ளீர்க்கப்படுவதற்கான சூழலை சிறிலங்காவை ஆட்சி செய்யும்
பெரும்பான்மை சிங்கள கடும்போக்காளர்கள் தடுக்கின்றனர்.
1990களில் சிறிலங்காவின் வடக்கில் வாழ்ந்த முஸ்லீம்களை தமிழீழ விடுதலைப்
புலிகள் பலவந்தமாக வெளியேற்றினர். அத்துடன் கிழக்கில் முஸ்லீம் மக்கள்
சிலரை புலிகள் படுகொலை செய்த போதிலும் கூட தொடர்ந்தும் முஸ்லீம்
அரசியல்வாதிகள் நாட்டில் குழப்பத்தை உண்டுபண்ணவில்லை. இவ்வாறான முஸ்லீம்கள்
மீது பௌத்த சிங்கள பேரினவாதிகள் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
இவ்வாறான சம்பவங்கள் முஸ்லீம்களை அதிருப்திக்கு உள்ளாக்கியது. 'சிறிலங்கா
எங்களுக்கு மட்டுமே' என சிங்கள பௌத்த சமூகம் உரிமை கோரியது. இவ்வாறான உரிமை
கோரல்கள் சிறிலங்காவில் வாழும் ஏனைய சிறுபான்மை சமூகத்தவர்களை மேலும்
கோபங் கொள்ளச் செய்தது.
சிறிலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான
நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான செய்திகள் ஊடகங்களில்
முக்கியத்துவப்படுத்தப்பட்டதால், சவுதிஅரேபியாவில் மரணதண்டனை வழங்கப்பட்ட
றிசானா நபீக் தொடர்பான செய்திகள் வெளிவராமல் இருந்திருக்கலாம். இந்தப்
பெண்ணுக்கு மரணதண்டனை வழங்காது இவர் விடுவிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா
அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட ரீதியாக முயற்சி எடுத்ததாக ஊடகங்களில்
கூறப்படுகின்றன.
றினாவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்ட பின்னர் சவுதி அரேபிய அரசாங்கம்
இழப்பீடாக ஒரு தொகைப் பணத்தை இவரது குடும்பத்தவர்களுக்கு அனுப்பிய
போதிலும், இந்தக் குடும்பத்தில் வறுமை நிலவிய போதிலும் கூட றிசானாவின்
குடும்பத்தவர்கள் 'குருதியால் சம்பாதிக்கப்பட்ட இந்தப் பணத்தைப்' பெற்றுக்
கொள்ளவில்லை.
றிசானா விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்காக சிறிலங்கர்கள் பலரால்
றிசானாவை வேலைக்கமர்த்திய சவுதிக் குடும்பத்திற்கு பணத்தை வழங்கிய போது
அதனை அந்தக் குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. றிசானா வாளால் தலை
துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கு அனுமதித்த சட்டத்தையும்
நடைமுறையையும் நாட்டிலுள்ள முஸ்லீம்கள் சிலர் ஏற்றுக்கொள்வார்கள்.
இவ்வாறான மரணதண்டனைகள் நிறுத்தப்பட வேண்டும் என உலகெங்கும் அழுத்தம்
கொடுக்கப்படும் நிலையில் றிசானாவின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள்
தமது மதம் மீதான நம்பிக்கையால் றிசானாவின் மரணத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக றிசானா சிறையிலடைக்கப்பட்டு மரணதண்டனை
விதிக்கப்படுவதற்கான தீர்மானம் எட்டப்பட்ட போது கூட முஸ்லீம் சமூகத்தினர்
தொடர்பாடல் ஊடகங்களின் ஊடாக தமது அதிருப்திகளையோ அல்லது கவலைகளையோ
வெளிப்படுத்துவதற்கான செய்திகளை வெளியிடவில்லை என்பது வேதனைக்குரியது.
அரசியல் ரீதியாக நோக்கில், றிசானா படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான சவுதி
அரேபியாவின் சட்டத்தை 'காட்டுமிராண்டித்தனமானது' என சிறிலங்காவில் உள்ள
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் காசீம்
குறிப்பிட்டிருந்தார். றிசானா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்
சிறிலங்காவில் உள்ள முஸ்லீம் அரசியல் கட்சிகளால் எவ்வாறு அமைதி காக்க
முடிகின்றது என ஐ.தே.க உறுப்பினர் றஞ்சன் றாமநாயக்க
கேள்வியெழுப்பியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்தில் உள்ள முஸ்லீம் கட்சிகள் மற்றும் ஏனைய முஸ்லீம்
கட்சிகள் எல்லாம் எவ்வித அரசியல் வேறுபாடுகளுமின்றி தம்புள்ள பள்ளிவாசல்
விவகாரம் தொடர்பில் ஒற்றுமையுடன் செயற்பட்டனர். அதாவது கடந்த ஆண்டு
தம்புள்ள பள்ளிவாசல் அமைந்துள்ள புனித பிரதேசம் முஸ்லீம்களுக்குச்
சொந்தமானதல்ல எனக் கூறி சிங்கள பௌத்த தேசியவாதிகள் தாக்குதல் நடாத்திய போது
நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தை தணிப்பதில் அனைத்து முஸ்லீம் கட்சிகளும்
ஓரணியில் திரண்டிருந்தன. ஆனால் ஒரு முஸ்லீம் பெண் இஸ்லாமிய மதச் சட்டத்தை
அடிப்படையாகக் கொண்டு முஸ்லீம் நாடொன்றில் தலைதுண்டிக்கப்பட்டு மரணித்த
போது அதனை எதிர்த்து இந்த முஸ்லீம் கட்சிகள் குரல் கொடுக்காமைக்கான காரணம்
என்ன?
றிசானாவின் மரணம் தொடர்பாக சவுதிஅரேபிய அரசாங்கம் மீது மேற்குலக நாடுகள்,
ஐ.நா, மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் கடும் கண்டனத்தை
தெரிவித்திருந்தன. தனிப்பட்ட மக்களை தண்டித்தலை சிறிலங்கா உட்பட ஏனைய உலக
நாடுகள் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கைகள்
முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் சிறிலங்கா உட்பட மக்களுக்கு தண்டனை
வழங்குகின்ற நாடுகள் இவற்றை விடுத்து தமக்கான வேறு தேவைகளை நிறைவேற்ற
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமது குடும்பத்தில் நிலவிய வறுமை நிலையை நிவர்த்தி செய்வதற்காக சவுதி
அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக றிசானவை அனுப்பிய அவரது குடும்பத்தவர்கள் இன்று
தமது அன்புக்குரிய மகளை இழந்து நிற்கின்றனர். இந்தக் குடும்பத்திற்கு
சிறிலங்கா அதிபர் ஒரு மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சிறிலங்காப்
பெண்கள் செல்வது தடைசெய்யப்பட வேண்டும். இவ்வாறான நாடுகளுக்கு
சிறிலங்கர்கள் வேலை வாய்ப்புத் தேடிச் செல்வதற்கான மாதிரித் திட்டம் ஒன்றை
சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே கொண்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறான
வேலைவாய்ப்புக்கள் மீளவும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
முஸ்லீம் மக்கள் மீதான வெறுக்கத்தக்க சம்பவங்கள் இடம்பெறுவதாக அமைச்சர்
ஹக்கீம் அறிவித்து ஒன்று அல்லது இரண்டு நாட்களின் பின்னர், புத்த
விகாரைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலங்களில் ஏனைய மதத்தவர்கள் தமது
விழாக்களைச் செய்வதற்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச
குறிப்பிட்டார்.
அதாவது முஸ்லீம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க நடவடிக்கைகள் நாட்டில்
மேற்கொள்ளப்பட்டால், புத்த விகாரைகளுக்கான நிலங்களில் ஏனைய மதத்தவர்கள்
தமது விழாக்களைச் செய்வதற்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டிருக்க முடியும்
என்பதையே அதிபர் வலியுறுத்தியிருந்தார்.
சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்
தெரிவுக் குழு முதன்மைப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றில் நிமால் சிறிபாலா
கோரியிருந்தார். சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தம் முடிவுக்கு கொண்டு
வரப்பட்ட பின்னர் தற்போது அரசாங்கமானது அபிவிருத்தி தொடர்பாக மட்டுமே
அதிகம் பேசுகிறது. யுத்தத்தின் பின்னர் நாட்டில் வாழும் முஸ்லீம்கள் புதிய
வாழ்வொன்றை ஆரம்பிக்க வேண்டியுள்ளனர். இதனால் சிறிலங்கா அரசு தலைமை
தாங்கிச் செல்கின்ற திசையில் முஸ்லீம் மக்கள் பயணிக்க வேண்டிய
தேவையுள்ளனர். அதாவது சிறிலங்கா அரசில் தங்கியிருப்பது மட்டுமல்லாது
முஸ்லீம் சமூகத்தை முஸ்லீம் அரசியல் தலைமை வழிநடாத்திச் செல்ல வேண்டும்
என்பது இங்கு வலியுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment