Friday, February 8

நான் அமைதியாக இருக்கிறேன் என்பதற்காக அது வெறும் மெளனம் என்று அர்த்தம் அல்ல- ஊடகங்களுக்கு அமைச்சர் ஹக்கீம்.





      
முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான வன்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கத்தின் சார்பில் பதிலளிக்கப்பட்ட போது அது எனது இணக்கத்துடன் தயாரிக்கப்பட்டு, அதில் எனது ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை (08) ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் குறித்து பின்வரும் விளக்கத்தை  அளிக்கின்றேன்.

புதன்கிழமை (6) பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் எதிரான வன்முறைகள் பற்றி எதிர்கட்சித் தலைவர் விசேட கூற்றை முன்வைத்த போது அதனை நான் அமைதியாகச் செவிமடுத்துக்கொண்டிருந்தேன். எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்களுக்கு வியாழக்கிழமை சபை முதல்வர் பதிலளித்தபோதும் அதனையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது வெறுமனே மௌனமாக இருந்ததாக அர்த்தப்படமாட்டாது.

அத்துடன், சபை முதல்வர் இது தொடர்பில் உரையாற்றும் போது குறுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வாக்குவாதப்பட்டபோது இந்த விஷயத்தை அரசியல் ஆக்காமல் எதிர்கட்சியும், ஆளும் கட்சியும் இணைந்து இந்தப் பிரச்சினையை தீர்த்துவைக்குமாறு நான் வேண்டிக்கொண்டேன்.

அத்தோடு சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரஸ்தாப அறிக்கையை தயாரித்துக்கொண்டிருந்த போது என்னை தமது அலுவலகத்திற்கு அழைத்திருந்தார். ஹலால் சான்றிதழ் பற்றிய அம்சத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் சம்பந்தமாக பதிலளிக்கும் விஷயத்தில் அதற்கான சட்டபூர்வமான உரிமை உண்டா, இல்லையா என்பன போன்றவை தொடர்பில் எமது கருத்துக்களையும் உள்வாங்கி அவற்றைச் சாதகமாக பரிசீலித்தமை குறித்து நான் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
இன்னொரு விடயத்திலும் என்னிடம் அபிப்பிராயம் கோரப்பட்டது. அது சட்டக்கல்லூரி அனுமதி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஆகும்.
சபை முதல்வரின் கூற்றின்படி, பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கு உள்ளான சம்பவங்கள் குறித்த விடயத்தில் எந்தெந்த இடங்களில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பவற்றை எதிர்க்கட்சியினர் ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அவ்வாறான சில சம்பவங்கள் தொடர்பில் எனதும், எனது கட்சியினதும் கண்டனத்தைப் பகிரங்கமாகவும், ஊடகங்கள் ஊடாகவும் வெளியிட்டு வந்திருப்பதை யாவரும் அறிவர்.
நான் கூறிய கருத்துக்கள், அசம்பாவிதங்களை முற்றுமுழுதாக மூடி மறைக்கும் பாங்கில் அமைந்தது போன்று ஊடகச் செய்திகளில் வெளிவந்திருப்பதையிட்டு மனம் வருந்துகிறேன். அதற்கான விளக்கமாக இதனைப் பிரசுரிக்குமாறு விநயமாக வேண்டிக்கொள்கின்றேன்.


ரவூப் ஹக்கீம், பா.உ
நீதியமைச்சர்,
தலைவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

No comments:

Post a Comment