இலங்கை முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகளைக் கொடுத்துக்
கொண்டிருந்த பேரினவாதிகளும் பௌத்த மேலாதிக்கவாதிகளும் தற்போது அரசியல்
நெருக்கடிகளோடு இணைந்தவாறு முஸ்லிம்களின் மத நம்பிக்கைகள் மீது சேறு பூசிக்
கொண்டிருக்கின்றார்கள். இஸ்லாம் காட்டியவாறு முஸ்லிம்கள் செயற்படுவதற்கு
தடைகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றார்கள்.
முஸ்லிம்கள் தாம் எதிர்கொண்டு வரும் இவ்வாறான பிரச்சினைகளை அரசாங்கத்திடம்
பல தடவைகள் எடுத்துக் கூறியுள்ளார்கள். அப்பிரச்சினைகள் தீர்க்கப்படும்
நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று அரசாங்கம் உறுதியளித்தது. ஆயினும்,
முஸ்லிம்களின் மீதான நெருக்கடிகள் குறைவதாகத் தெரியவில்லை.
இஸ்லாத்தின் கட்டளைகளுக்கு அமைவாகவே முஸ்லிம்கள் தமது எல்லா
நடவடிக்கைகளையும் அமைத்துக்கொள்ளல் வேண்டும். அந்த வகையில் முஸ்லிம்கள்
ஹலாலான உணவுகளையே உண்ணுதல் வேண்டும். இன்று ஹலால் உணவு என்ற விடயத்தினை
பௌத்த பிக்குகளின் தலைமையிலான குழுவினர் பூதாகாரப்படுத்தியுள்ளார்கள்.
இதனால், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஹலால் பற்றிய தெளிவை
மக்களுக்கு அளித்துக்கொண்டிருக்கின்றது. ஆயினும், சில உலமாக்களின் ஹலால்
பற்றிய விளக்கம் மக்களுக்கு போதிய தெளிவை வழங்குவதற்கு பதிலாக குழப்பங்களை
ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
அண்மையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றில் ஹலால் பற்றி கேட்கப்பட்ட
கேள்விக்கு அளிக்கப்பட்ட விளக்கம் தெளிவற்றதாக இருந்ததாக
தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கள மொழியிலான இவ்வாறான மார்க்க விளக்கங்களுக்கு செல்கின்றவர்கள் அந்த
மொழியில் நல்ல பாண்டித்தியம் பெற்றவராகவும் மார்க்கத்தின் சட்டதிட்டங்களில்
தெளிவுள்ளவராகவும் இருப்பது அவசியமாகும். அந்நிய மதத்தவர்களின் தப்பான
அபிப்பிராயங்களை இல்லாமல் செய்வதற்காக முயற்சிகளைச் செய்து ஈற்றில் ஏற்கனவே
இருக்கின்ற தப்பான அபிப்பிராயங்களையும் அதிகரிக்கச் செய்வதாக
இருக்கக்கூடாது. ஆதலால், உலமா சபை இதில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும்.
தவறும் பட்சத்தில் கிணறு வெட்டப்போய் பூதம் கிளம்பிய கதையாக மாறி விடும்.
இதேவேளை, உலமா சபை தனியே பள்ளிவாசல், ஹலால் போன்ற விவகாரங்களை மட்டும்
கையாளாது முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பிற்போக்குத் தனங்களையும்
மக்களுக்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். இது உலமாக்களின் கடமை என்பதனை
ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். இதற்கு குத்பா போன்றவைகளை பயன்படுத்திக்
கொள்ளுதல் வேண்டும்.
முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கு
அரசியல் ரீதியான அழுத்தங்கள் அவசியமாகும். முஸ்லிம் அரசியல்வாதிகள் இதனைச்
செய்யாது பாராளுமன்றத்தில் கதிரைகளை சூடாக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்கள் அமைச்சர் பதவிகளுக்காக அலைந்து திரிகின்றார்கள். அந்த பதவிகளை
முஸ்லிம்களின் கௌரவமாக கூறிக்கொண்டிருக்கின்றார்கள். முஸ்லிம்களை
ஒற்றுமைப்படுத்தி அதன் மூலம் ஏற்படும் அரசியல் பலத்தினைக் கொண்டு
சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வராமல் முஸ்லிம்களை கட்சி
ரீதியாகவும், பிரதேச ரீதியாகவும் பிரித்து வைத்து இலாபமடைந்து
கொண்டிருக்கின்றார்கள்.மட்டுமன்றி, மக்களுக்கு பொய்களையே கொள்கைகளாகக்
கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களின் இந்த குறுகிய சிந்தனைகளினால் முஸ்லிம் சமூகம் ஒருபோதும்
தலைநிமிர்ந்து நிற்க முடியாது. இவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டும்.
இல்லையாயின் அவர்களுக்கு பதிலாக வேறு நபர்களைக் கொண்டு வருதல் வேண்டும்.
இதில் உலமா சபையின் பங்களிப்பு முக்கியமாகும். மார்க்க விடயங்களைச்
சொல்லுவதுதான் தங்கள் பணி என்று ஒதுங்கி இருக்க முடியாது.
மறுபுறத்தில் உலமாக்களும் தங்களிடையே காணப்படும் கொள்கை ரீதியான
முரண்பாடுகளை இல்லாமல் செய்து ஒற்றுமைப்பட வேண்டும். கொள்கைகளை
மையப்படுத்தி பள்ளிவாசல்களை அமைப்பதனை தவிர்த்தல் வேண்டும். பல இடங்களில்
அடுத்தடுத்து பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தப் பள்ளிவாசல்களின்
நிர்வாகிகள் மோதல்களில் ஈடுபட்டு பொலிஸ், நீதிமன்றம் வரை
செல்லுகின்றார்கள். முஸ்லிம்களே பள்ளிவாசல்களை உடைத்த சம்பவங்களும்
இடம்பெற்றுள்ளன.
அண்மையில், தன்னை அலரி மாளிகையில் சந்தித்த முஸ்லிம் குழுவிடம் ஜனாதிபதி
கருத்துத் தெரிவிக்கையில், முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு எதிரான
முறைப்பாடுகளை முஸ்லிம்களே தம்மிடம் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இக்கருத்தை முஸ்லிம்கள் கவனத்தில் எடுத்தல் வேண்டும்.
குறிப்பாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை உலமாக்களிடையே காணப்படும்
முரண்பட்ட கொள்கைகளை முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும்.
இவ்வாறான விடயங்களில் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபை தமது கவனத்தைச்
செலுத்துதல் வேண்டும். வெள்ளம் வரும் முன் அணை கட்டுதல் வேண்டும். ஆனால்
வெள்ளம் தலைக்கு மேலால் போய்க் கொண்டிருக்கின்றது. இனியும் முஸ்லிம்களின்
துறைசார்ந்த தலைவர்கள் சமூகத்தினைப் பற்றி கவலை கொள்ளாது இருக்க முடியாது.
ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்புக்கள் தொடர்பில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் அல்லவா? |
No comments:
Post a Comment