சமகாலத்தில் இங்கிலாந்தில் நாடுகடத்தல்
வழக்கொன்றில் சிக்கி தவிக்கும் இஸ்லாமிய பயங்கரவாதி(?)யாக அறியப்பட்டவர்
அபூ கட்டாடா என்ற ஜோர்தானியர். ஜோர்தானிய அரசாங்கத்தால் தேடப்படுபவர், 30
வருங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் வசிப்பவர், அதுவும் இந்நாட்டு
வரியிறுப்பாளர் பணத்தில். இங்கிலாந்து அரசாங்கத்துக்கும் ஐரோப்பிய
நீதிமன்றத்துக்கும் இடையே இந்த நபரின் “தனிமனித உரிமை” சம்பந்தமாக ஒரு
சட்டப் போர். இங்கிலாந்தின் அரச சார்பு வழக்கறிஞர்களும் கடாடாவின்
வழக்கறிஞர்களும் இந்த போருக்கான போராளிகள். அரச சட்ட அறிஞ்சர்களின்படி
கடாடா இங்கிலாந்தின் உள் நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர், ஆகவே
அவர் ஜோர்தானுக்கு நாடுகடத்தப்பட வேண்டும். அப்படிச் செய்வது சர்வதேச
பயங்கரவாத முறியடிப்பின் ஒரு பகுதியாகவும் அமையும். ஆனால் கடாடாவின்
சட்டவல்லுநர்னர் கூற்றுப்படி இங்கிலாந்து சித்திரவதைக்கு எதிரான ஜெனிவா
சாசனத்தில் கையொப்பமிட்ட நாடு. எனவே இங்கு கடாடா ஒரு பயங்கரவாதியா, அவர்
இந் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறாரா, இருப்பாரா
என்பதல்ல முக்கியம், அவர் ஜோர்தானில் சித்திரவதைக்கு உற்படுத்தப்படுவாரா
இல்லையா என்பதே கவனத்தில் எடுக்கப்படவேண்டிய விடயம். சாதாரன பிரஜை
ஒருவருக்கு சித்திரவதைக்கு எதிரான பாதுகாப்பு கொடுக்க வேண்டியது இந்
நாட்டின் கடைமை என்றால் அதே கடமை அதே அளவில் அபூ கடாடா தொடர்பாகவும்
அரசாங்கத்துக்குண்டு என்பதாகும். அவர் பயங்கரவாதியானால் அல்லது பயங்கரவாத
நடவடிக்கையில் எதிர்காலத்தில் ஈடுபடுவார் என்றால் ஆதாரங்களை முன்வைத்து
பிரத்தியே வழக்கொன்றை தொடருங்கள் என்பது அவர்களின் மேலதிக வாதம். இதுவரை
இந்த நாடுகடத்தல் வழக்கில் பல கோடி அரசாங்கப் பணம் செலவிடப்பட்டுள்ளது.
எனினும் செலவின் அளவல்ல முக்கியம் சட்டத்தின் முன்னே அனைவரும் சமம் என்பது
எழுத்தில் மாத்திரமல்ல பொது மக்கள் காணக்கூடியதாக அது நடைமுறைப்
படுத்தப்படுவது அனைத்திலும் முக்கியமான விடயம் என்பது கடாடாவின்
சட்டவல்லுநர் குழுவின் நிலைப்பாடு.
இந்த சம்பத்தை அப்படியே நம் நாட்டின்
தம்புள்ளை சம்பத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தால், பௌத்தத்தை பேணி பாதுகாத்து
வளர்ப்பது இலங்கை அரசின் கடமை என்றாலும் அங்குள்ள ஏனைய மதங்களின்
இருப்புக்கு பாதுகாப்பளிப்பதும் அந் நாட்டின் அரசியமைப்பின் ஏற்பாடு. ஆகவே
ஏதாவதொரு மதத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகா இருக்கும் எவரும் அதே
அரசியலைப்பு ஏற்பாடுகளினாலோ அல்லது ஏனைய சட்டங்களினாலோ தண்டிக்கப்படுதே
நியாமானது. அப்போதுதான் அது நீதியுமாகும். பயங்கரவாத குணாம்சம் கொண்டவராக
சித்தரிக்கபட்ட ஒரு (வெளி நாட்டு) தனி மனிதனின் அடிப்படை உரிமை தொடர்பாக
இங்கிலாந்து இவ்வளவு கவனமாக காரியமாற்றுகிறது என்றால் இலங்கையில் ஒரு
ஒட்டு மொத்த இனத்தின் உரிமை, அவர்களின் மத உரிமை இன்னோர் இனத்தின் அதுவும்
மத போதகரால் மீறப்படும் போது ஏன் சட்டம் இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது?
இதுதான் ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்றுவதின் சூட்சுமமோ?
ஜீவகாருண்யம் என்பதை முஸ்லீம்களுக்கு
முன்னால் கற்றுக்கொண்டவர்கள் பௌத்தர்கள், அதனால் பிக்குகளிடத்தில் இது
மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுவதும் பொருத்தமானதே. அதே அளவுகோல் தான்
“நீதி” என்ற விடயத்திலும் எதிர்பார்க்கப்படும் என்பது என் நிலைப்பாடு.
அதாவது சாதாரண மக்களைவிட, சட்டத்தையும் ஒழுங்கையும் அமுலாக்கும்
தரப்பினரைவிட ஒரு நாட்டின் நீதி அமைச்சர் என்பவர் “நீதி” யை அனைவரும்
அனுபவிக்குமாறு செய்வதை உறுதிபடுத்தவேண்டிய பொறுப்பை தன்னகத்தே
கொண்டுள்ளார்.
பல்லின, பல் மத, பல் கலாச்சார தன்மைகள்
கொண்ட மக்கள் ஒன்றாய் வாழ நேர்ந்துள்ள நிலையில் அந்நாட்டு மக்களிடையே
அவர்களுக்கேயுரிய தனித்துவத்தையும், அப்படியான தனித்துவமானவர்களுக்கிடையே
சமத்துவதையும் ( diversity and equality) மதிக்கும் தன்மை அருகி வருமானால்
அந் நாட்டில் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டு அசாதாரண நிலை
ஏற்படுவது தவிர்க்கமுடியாயது. குறிப்பாக கடந்த சுமார் 35 ஆண்டுகளாக
நாட்டில் நிலவிய அசாதாரண சூழ் நிலையில் பிறந்து, அசாதாரண சூழ் நிலையில்
வாழ்ந்து வந்த ஒரு தலைமுறையினர் சாதாரண சூழ்நிலையின் காற்றை சுவாசிக்க
ஆரம்பித்த மிக சொற்பகாலத்துகுள்ளேயே மீண்டும் அவர்களின் அமைதியான
வாழ்வுக்கான உரிமையை பறிப்பதான சூழ்நிலை ஒன்றை வலிந்து ஏற்படுத்துவதென்பது
பௌத்த விழுமியங்களுக்கும், எல்லா மனிதருக்கும் இருக்க வேண்டிய “நீதி” என்ற
ஒழுக்கார்ந்த உள்ளுணர்வுக்கும் எதிரானது.
அரச குடும்பத்தில் பிறந்து சமூக
அந்தஸ்திலே தனக்கு எவ்விதத்திலும் குறைவில்லாத அனைத்தும் பெற்ற அரச குடும்ப
யசோதயை மணமுடித்தாலும் தன் வாழ்வில் ஏதோ குறையிருப்பதாக கண்ட கௌதமன்
அக்குறையை நிரப்ப நிர்வாணமடைந்தான். அந்த நிறைவான தத்துவத்தை முறையாக
போதிக்கும் பொறுப்பு பௌத்த ஏற்பாடுகளினால் பிக்குகளிடம்
கையளிக்கப்பட்டுள்ளது. ஆகவே பௌத்தத்தின் ஊடாக பௌத்தர் தொடர்பான பாரிய
பொறுப்பு பிக்குகளின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளதை யாரும் மறுக்கமுடியாது.
அதேபோல் சட்டத்தரணியாக பயிற்றப்பட்டவர், கால அளவில் கனிசமான அரசியல்
அனுபவம் உள்ளவர் என்பதற்காகவோ அல்லது கட்சி தாவி வந்து தன் அரசாங்கத்தை
பலப்படுத்தினார் என்பதற்காகவோ, அப்போது கையிருப்பில் இருந்தது என்பதற்காகவோ
“நீதி அமைச்சு” ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கொடுக்கபட்டிருக்கிறது. எதற்காக
அப்பதவி கொடுக்கப்பட்டாலும் கொடுக்கபட்ட பொறுப்பை நீதியாகவும்
நேர்மையாகவும் செய்துவது அவரின் கடமை. ஆக இவர்கள் இருவரும் தம் கடமைகளை
நிறைவேற்றும் போது மக்களின் கூர்மையான பார்வைக்குட்படுவது
தவிர்க்கமுடியாயது. அதனால் அவர்களின் நடத்தை எதிர்பார்க்கப்படும்
தரத்துக்கு கீழ் இருக்கும் போது அவர்கள் விமர்சனத்துகுள்ளாகுவதும்
மிகச்சரியானதே.
இந்த அடிப்படையில்தான் தம்புள்ளை பள்ளி
உடைப்பு சம்பத்தில் இந்த இருவரும் நம் பார்வையில் இருந்து
தப்பமுடியாதவர்களாகின்றனர். பௌத்தத்தை வளர்ப்பதும் பாதுகாப்பதும் நாட்டின்
அரசியல் சட்டத்தால் உறுதிபடுத்தப்பட்டுள்ளபோதும் ஏனைய மதங்களின்
இருப்புக்கு அவை பாதகமாக அமையக்கூடாதென்பதும் அரசியல் சட்ட ஏற்பாடு. இந்த
அரசியலமைப்பு ஏற்பாட்டை யாரும் மீற முடியாது. அப்படி மீறும் பட்சத்தில்
மீறியவர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பது சாதாரணவிடயம். அப்படி
அவர் சட்டத்தின் முன் கொண்டுவரப்படாத சந்தர்பத்தில் அந்நாட்டில் சட்டமும்
ஒழுங்ககும் சரிவர செயற்படவில்லை என்பது வெளிப்படை. அப்படியான சூழ் நிலையில்
எதுவுமே எல்லை மீறிச் செல்லவில்லை என்ற நிலைப்பாட்டில் அமைச்சர்கள்
இருக்கும் போது அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதென்பதும்
தவிர்க்கமுடியாத விடயம். ஆனால் அப்படியான சட்ட ஏற்பாடுகள் இல்லாததினால்
அவர்கள் விசாரணைக்காக நிறுத்தப்படவேண்டிய இடம் இப்போதைக்கு பக்கசார்பற்ற
ஊடகமே, அவர்களை தீர விசாரிக்கவேண்டியவர்கள் பொதுமக்கள்.
சுமங்கள தேரர் தன் சமய போதனைக்கும்,
சராசரி மனித நியாயத்துக்கும் புறம்பான வகையில் தம்புள்ள பள்ளிவாசலை
உடைக்கும் எண்ணத்தில் அப்பளிக்குள் புக முன் ஆற்றிய உரையாக காணொளியில்
கண்டதும்/கேட்டதும் மிகவும் கவனமாக ஆராயப்படவேண்டிய ஒரு விடயம், அதாவது
“இந்த பயங்கரவாதிகளின் பள்ளிவாயில் தரைமட்டமாக்கப்பட வேண்டியது” என்றதான
அவரின் கூற்று ஒரு மதவழிபாட்டு இடத்தின் மேல் செய்ய எத்தனித்த அடாவடித்தனம்
மட்டுமல்ல இந் நாட்டின் சக பிரஜைகள் மீது அவர்களின் சமயத்தின் ஊடாக செய்த
ஒருவகை சமய நிந்தனை(blasphemy). முஸ்லீம் என்று சொல்லிக் கொள்வோரில்
பயங்கரவாதிகளும் இருக்கின்றார்கள் என்பதை முஸ்லீம்கள் என்ற வரையறைக்குள்
வரும் எவரும் எப்போதும் மறைத்ததில்லை என்பதோடு அதற்கெதிராக
குரல்கொடுக்கவும் தயங்குவதில்லை. அதே போன்று ஒரு இனத்துக்கும் அந்த இனம்
பின்பற்றும் சமயத்துக்கும், அந்த சமயத்தின் வழிபாட்டு தளத்துக்கும்
குந்தகம் விளைவிப்பதென்பது நிச்சயமாக பயங்கரபவாதச் செயலே. ஆகவே தான் அந்த
பயங்கரவாத செயலுக்கு பொறுப்பான சுமங்கல தேரர் அமங்கலமாகி அவமானப்படுகிறார்
என்பதோடு இப்படியான தொடர்ச்சியான ஈனச் செயல்களால் இலங்கை ஆசியாவின்
அசிங்கமாக மாறிவருகின்றதோ என்ற கேள்வியை எழுப்பத் தவறவுமில்லை.
சென்ற வருடம் புரட்டாதி மாதம்
அநுராதபுரியில் முஸ்லீம் பெரியாராக கருதப்பட்ட ஒருவரின் அடக்கத்தளம் ஒன்று
பிக்குகளின் தலைமையில் நிர்மூலமாக்கப்பட்டது இன்று நாம் அனேகமாக மறந்து
போனவிடயம். இருப்பினும் அச்சம்பவக் காலப்பகுதியில் முஸ்லீம்கள் கொதி
நிலையடைந்தனர். அதனால் கலவரப்பட்டுப் போன முஸ்லீம் அமைசர்கள், நீதி
அமைச்சர் அடங்களாக, இது முஸ்லீம்களின் மத உரிமைக்கு விடப்பட்ட பரீட்சாத்த
சவாலாக அல்லாமல் தம் பதவிகளுக்கு வந்த ஒருவித முட்டுக்கட்டையாக எண்ணியே
செயற்பட்டனர். இதை மிகத்தெளிவாக காட்டுகிறது இரண்டு முக்கிய முஸ்லிம்
அமைச்சர்களின் வாய்மூல சாட்சியங்கள். ஒன்று கைத்தொழில்
அபிவிருத்தியமைச்சர் ரிஷாட் பதியுத்தீன். மற்றயவர் நீதியமைச்சர் ரவூப்
ஹக்கீம். முன்னையவர் சொன்னார்; ”தன்னிடம் இந்த சம்பவம் நேரடியாக
சம்பந்தப்பட்ட அநுராதபுர முஸ்லீம்களால் முன்வைக்கப்படவில்லை(யாம்), அப்படி
முவைத்திருந்திருந்தால் அதை கவனித்திரு(க்கலாம்)ப்பாராம், மேலும் இது ஒரு
தனிப்பட்ட இனவாதியால் மேற்கொள்ளப்பட்ட விடய(ம்)மாம். எனவே இதை பெரிது
படுத்தி இருக்கும் நிலைமைகளை மோசமாக்காமல் கவனமாக செயல் படவேண்டு (மா)ம்”
என்பதாக.
பின்னையவர் பகிரங்கமாகவே வீராவேச
பேட்டிகள் அளித்தார். அதில் முக்கியமானது தான் நீதியமைச்சாரக இருக்கும்
போதே இப்படியான தனி நபர்களின் சட்டத்தை கையிலெடுக்கும் நிலை தான்
இப்பதவியில் தொடந்தும் இருக்கவேண்டுமா என்ற கேள்வியை தன் மனதில்
எழுப்புவதாக தன் உணர்வுகளை பகிர்ந்து கொண்ட விடயமாகும். அவர் தொடர்ந்தும்
பதவியில் இருக்க வேண்டிய நியலையை ஏற்படுத்தும் விதமாக அந்த அநுராதபுர
பிக்குவின் சட்ட மீறல் தொடர்பாக அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக ஆக்க
பூர்வமான ஏதாவது நடந்தா? அல்லது பாதிக்காப்பட்ட மக்கள் தன் அமைச்சு கதவை
தட்டும் வரை அமைச்சர் அங்கு அசந்து தூங்குவாரா?
அதே போல் சென்ற வருடம் ஆவணி மாதம்
கொழும்பு, ஹம்பந்தோட்ட, கண்டி, காலி என்றில்லாமல் நாட்டின் தமிழ், சோனக
இனங்கள் செறிவாக வாழும் பகுதிகளில் மாத்திரம் “கிறீஸ் பூதங்கள்”
தலைகாட்டி, மக்களை பயங்காட்டி மறைந்தனரே, அது பற்றி இந்த அமைச்சர்கள்,
குறிப்பாக நீதி அமைச்சர் அப்பகுதி மக்களுக்கு என்ன சொன்னார்? ஆக சென்ற
வருடம் முக்கியமாக இன ஐக்கியத்துக்கு குந்தகம் விளைவிக்கும் இரண்டு
சம்பவங்கள் நடந்தன. நாட்டின் பொறுப்பான(?) அமைச்சர்களால் நம் இனத்தின்
பொறுப்பற்ற அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட கட்டளை(?) “கிறீஸ் பூதம்” வந்தால்
உங்கள் மக்களை எதுவும் செய்துவிட அனுமதிக்காதீர்கள், சட்டத்துக்கும்,
பாதுகாப்புக்கும் பொறுப்பான துறையினரை அணுகுங்கள் என்று சொல்லுங்கள்
என்பதே. அதயே அவர்கள் தம் மக்களுக்கான அறிவுரையாக(?) வழங்கினார்கள்.
பொறுப்பான அமைச்சர் தமது கவலையை சாதுர்யமாக தீர்த்து வைத்ததற்காக இந்த
அமைசர்கள் பிரத்தியேகமாக நன்று கூறினார்களோ யார் அறிவார்? அதே போல்
அநுராதபுர சம்பவம் போன்று இனி ஒரு சம்பவம் நடக்காது என்று பொறுப்பான
அமைச்சர் நம் பொறுப்பற்ற அமைச்சர்களிடம் உறுதியளித்தாக ஒரு கதை உலாவியதும்
எம் காதுகளையும் எட்டியது.
ஆனால் நடந்தது என்ன? அநுராதபுர சம்பத்தின்
சூத்திரதாரிக்கு எதிராக சாதாரண மனிதர் என்ன நீதி அமைச்சரால் கூட எதுவும்
பண்ணமுடியாது என்ற தெளிவை பிக்குகளும், நான் எதையாவது சொன்னால்
தலையாட்டிக் கொண்டு சென்றுவிடுவார்கள் இந்த நல்ல, அடக்கமான அமைச்சர்கள்
என்ற விடயத்தை இந்த குறிப்பிட்ட அமைச்சரும், இந்த முஸ்லீம் அமைச்சர்கள்
தவிர்ந்த அமைச்சரவையும் சரியாக விளங்கிவைத்தள்ளது.
நிலைமை இப்படி இருக்க தன் பதவி விலகலை சில
தீய சக்திகள் ஆவலுடன் எதிர்பார்திருக்கிறதாக நீதியமைச்சர்
குறிப்பிடுகின்றார். ஆகவே எது நடந்தாலும் தான் பதவி விலகமாட்டேன் என
(நாசுக்காக) சொல்லிவிட்டார். முஸ்லீம்களும் அவரிடம் தாழ்மையாக கேட்பது
பதவி விலக வேண்டாம் என்பதே. காரணம் அவர் பதவி விலகிவிட்டால் பொது
மக்களால் எதுவுமே செய்யமுடியாது என்பதல்ல என்பதுடன் அவர் பதவியில்
ஒட்டியிருந்தும் எதுவும் செய்ய திராணி அற்றவர் என்பது ரகசியமுமல்ல.
இருந்தும் இன்றைய அவரின் பதவி விலகலை நாளைய அவரின் அரசியல் முதலீடாக மாற்ற
இடம் கொடுக்காமல் இருக்க, அதாவது முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக
என் மந்திரி பதவியை கூட தூக்கி எறிந்தேன் ஆகவே எனக்கு இம்முறையும்
வாக்களியுங்கள் என்று எம்மை அணுகாமல் இருக்க பதவி விலகல் தவிர்க்கப்பட
வேண்டும். மக்கள் அவரை தேர்ந்தெடுத்தது எமது பிச்சினைகளுக்கு முகம்
கொடுத்து அவைகளுக்கு நியாயமான தீர்வை பெறுவதற்கேயன்றி பிரச்சினை
வரும்வரையும் தன்னை முஸ்லிமகளின் பிரதிநிதியாக காட்டிக் கொண்டு பிரச்சினை
வரும் போது இலகுவாக பதவி விலகவல்ல. இப்படி கூறும் போது அமைச்சரின் பதவி
விலகலை மக்கள் எப்போதும் ஏற்கத் தயாரில்லை என்பதல்ல.
அமைச்சர் பதவியை மட்டுமல்ல தமது அரசியல்
வாழ்வுக்கே ஓய்வு கொடுப்பார் என்ற நிபந்தனைக்கு கட்டுப்படுவாரென்றால்
மற்றவருக்கு இடம் விட்டு இந்தக் கணமே அவர் பதவி விலகுவதை எவரும்
ஆட்சேபிக்கப் போவதும்மில்லை. ஆகவே பதவி விலகல் என்று பாம்மாத்து காட்டி
இந்நாட்டு முஸ்லிம்களை பணயம் வைப்பதன் மூலம் இவர் ஒரு அநீதி அமைச்சரே அன்றி
நீதி அமைச்சர் என்ற உயர்ந்த பதவிக்கு தகுதி இல்லாதவராகின்றார்.
இதை மீண்டும் சந்தேகத்துக்கிடமின்றி
அமைச்சர் அண்மையில் கிண்ணியாவில் நிரூபித்துவிட்டார். அதாவது அங்கே இந்த
தம்புள்ளை விவரகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது இதை பற்றி கதைக்க நான்
தயாரில்லை, இந்த விடயம் முற்றுப் பெற்றுவிட்டது. இந்த விடயத்துக்கு தீர்வு
எட்டப்பட்டுவிட்டது. எனவே முடிந்த விடயத்தை குப்பை கிளறுவது போல் கிளற
வேண்டாம் என்று திருவாய் மலர்ந்துள்ளதாக ஒரு இணையதளத்தில் பார்க்கக்
கிடைத்தது. அமைச்சரே தீர்வு எட்டப்பட்டால் அதை அறிவிக்க என்ன தயக்கம்?
யாருக்கு பயம்?
தம்புள்ளை சம்பவம் நடந்த போது நாட்டிலே
ஜனாதிபதி இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் முக்கியமான அமைச்சர்கள்
நாட்டில் தானே இருந்தார்கள். பிரதமர் ம ந்திரி, பாது காப்பு செயலர், நீதி
அமைச்சர் இவர்கள் தலையிட்டு உத்தரவுகள் பிறப்பிக்க முடியாதளவு இந்த சம்பவம்
முக்கியமானது, ஜனாதிபதியின் தலையீடே இதற்கான பரிகாரம் என்றால் சம்பவம்
முடிந்து மூன்று வாரங்களுக்கும் மேலாகிவிட்டதே. அதைவிடவும் கிழக்கு
மாகணசபை தேர்தல் சம்பந்தமாக ஜனாதிபதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றதாக அறியக்கிடக்கின்றது. அப்படியானல் இந்த மாகாணசபை தேர்தல் ஒரு
இனத்தின் உரிமை பிரச்சினையை விட முக்கியமானதா? அல்லது மாகணசபை
தேர்தலில்தான் தம்புள்ளை பள்ளிவாசலின் பிரச்சினைக்கான முடிவும், இலங்கையில்
எதிர்கால முஸ்லீம்களின் உரிமைப் பிரச்சினைக்கான அணுகுமுறையும்
வடிவமைக்கப்டுமா? நாட்டின் அரசாங்கத்தையும், ஜனாதிபதியையுங் கூட
மக்கள்தானே, இந்த முஸ்லீம்கள் உட்பட, தெரிவு செய்கிறார்கள் அப்படி இருக்க
சம்பந்தப்பட்டவர்கள் நாட்டு மக்களை பயமுறுத்துகிறார்களா? சரி அவர்கள்
மக்களை குறிப்பாக முஸ்லீம்களை இந்த மாகாணசபையைக் காட்டி
பயமுறுத்துகிறார்கள் என்றுதான் வைத்துக் கொள்வோமே. இந்த தம்புள்ளை
பள்ளிவாசல் தொடர்பாக முஸ்லீம்கள், குறிப்பாக பள்ளி நிருவாகம், ஜம்மியத்துல்
உலமா அல்ல, விரும்பும் நியாய மான தீர்வு வெளியிடப்பட்டு அது
நடைமுறைப்படுத்தப்படாத வரை கிழக்கு மாகாணசபை தேர்தலில் எந்தக் கட்சியை
சேர்ந்த எந்தவொரு முஸ்லீம் வேற்பாளருக்கும் முஸ்லீம்கள் வாக்களிக்கப்
போவதில்லை என்றால் என்ன செய்யப் போகிறார்கள் இந்த அமைச்சர்களும்,
பாராளுமன்ற கும்பலும்?
தம்புள்ளை விடயம் தொடர்பாக
உணர்ச்சிவசப்பட்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் இந்த கிழக்கு மாகாண தேர்தல்
விடயத்தினால் தம்புள்ளையை மெது மெதுவாக மறக்க முயற்சிக்கிறார் போல்தான்
தெரிகிறது. ஆகவே அவரால் எதுவுமே செய்யமுடியாது என்று அவருக்கு 100%
தெரிந்த விடயத்தில் தலையைக் காட்டியுள்ளார். அதாவது இஸ்ரவேல் தூதரகம்
இலங்கையில் இயங்க அனுமதிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவிற்கு(?) எதிராக தன்
கையெழுத்திட்ட கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளாராம். அதன் மூலம்
கிழக்கிலே இலங்கை மக்கள் காங்கிரசை களமிறக்க ஆயத்தம் பண்ணுகிறார். ஆக ஒரு
இனத்தின் சமய உரிமை இந்த அமைச்சர்களின் பதவி ஆசையிடம் தோல்வி அடைகிறது.
ஆனால் இந்த அசிங்கமான அநீதி அமைச்சர்களை நிரந்தரமாக தோல்வியடையச் செய்வது
மக்களின் கையிலுள்ளதை நாம் மறக்காது காரியமாற்றுவோமாக.
இதற்கிடையில் அண்மையில் “குரக(Ga)ல
வந்தனாவ” என்ற மதத்துவேசம் கக்கும் பௌத்த காணொளி ஒன்றை பார்க்க நேரிட்டது.
அதிலே ஆப்கானிஸ்தான் பாமியான் புத்தர் சிலை தலிபாங்களால் நிர்மூலமாக்கப்
பட்ட போது கள்ள மௌனம் சாதித்த இந்த முஸ்லீம்கள், அவர்களின் மதத்தின்
பெயரால் செய்யப்பட்ட நில ஆக்கிரமிப்பை நாம் தட்டி கேட்கும் போது
குய்யோமுறையோ என்று கூக்குரல் எழுப்புவது ஏன் என்ற விதமாக கேள்வி
எழுப்புகிறது. இது எவ்வாறு இருக்கிறதென்றால் நிவ்யோர்க் இரட்டை கோபுரம் அல்
கைடாவினால் தாக்கியழிக்கப்பட, ஆப்கானிஸ்தானில் தலைமறைவாய் இருந்த யெமன்
நாட்டு பிரஜையான ஒஸாமா பின் லாடனை தேடி, பாதுகாப்புச் சபையின் ஆணையின்றி,
ஈராக்கின் மேல் குண்டு போட்டு முதல் நாளிலேயே சுமார் 5000 உயிர்களைக்
காவுகொண்ட போது உலக முஸ்லீம்களிடம் இருந்து எழுந்த எதிர்ப்பை பார்த்து
இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட போது அமைதிகாத்த நீங்கள் இப்போது ஏன் சத்தம்
போடுகிறீர்கள் என்று கேட்டது போல் இருக்கிறது.
அதைவிடவும்
பாமியான் புத்தர் சிலை அழிக்கப்பட்ட போது ஆப்கானிஸ்தான் தலிபாங்களின் பூரண
கட்டுப்பாட்டில் இருந்தது. அது மட்டுதமல்ல பெண்களுக்கு மூக்கை அறுத்தல்,
பெண் வைத்தியர்கள் உட்பட பெண்கள் வேலைக்கு செல்வது தடைசெய்தல், பிள்ளை
பெறும் நேரத்திலும் ஆண் வைத்திரின் உதவியும் சம்பூர்ணமாக மறுக்கப்படல்,
இஸ்லாம் கற்றலை ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயமாக்கியும் பெண்களுக்காண
பாடசாலைகள் மூடல் என்று பல உரிமை மீறல்கள் இடம்பெற்றன. இதை நியாய
சிந்தையுள்ள எந்த முஸ்லீமும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டான். அப்படியிருக்க
இந்தக் காணொளி பள்ளி உடைத்த இந்த பிக்குகளை தலிபாங்களுடன் ஒப்பிடுகிறதா
என்றே கேட்கத் தோன்றுகிறது. ஆக தலிபாங்கள் பயங்கரவாதிகள் என்றால் அதே
முறையில் இயங்கும் பிக்குகளும் பயங்கரவாதிகளே.
அதே போன்று இந்தக் காணொளி இந்திய
முஸ்லீம்கள் இந்துக்களுக்கு சொந்தமான அயோத்தியை கபளீகரம் செய்ததாக குற்றம்
சாட்டுகிறது. ஆனால் இந்த அயோத்தி பாபர் பள்ளிவாசல் தொடர்பாக அங்கே
ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதும், நீதிமன்ற தலையீடு இருந்ததும்,
புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்குமான போர் காலத்தில் எத்தனையோ இந்து
கோயில்கள் அழிக்கப்பட்டதும் அந்த கோயில்கள் அனைத்திலும் பௌத்தரும் வழிபடும்
இந்துக்களின் இஸ்ட தெய்வ விக்கிரகங்கள்தான் இருந்தன என்பதும் ஏன் அன்று
இவர்களுக்கு தெரியாமல் போனது. இந்த இழிச்செயல்கள்தான் “சுமங்கல” என்று
பெயர் கொண்டோர்களையும் அமங்கலமாக்கிவிட்டது என்பதில் வியப்பிருக்க
முடியாது.
- எம்.எஸ.ஆர். நிஸ்தார்.
No comments:
Post a Comment